Monday, August 21, 2017

விராடரின் மனநிலை

ஜெ

விராடரின் மனநிலையும் அவருடைய பாவனைகளும் நுட்பமானவை. ஒரு சராசரிக்குடும்பத்தின் அப்பா அம்மாக்கள் உதவாக்கரைப்பிள்ளைகளை எப்படி நடத்துவார்களோ அப்படியே இருக்கிறார்கள். அம்மா பையனை உண்மையில் உதவாக்கரை என நினைக்கிறாள். ஆனால் பொத்த்திப்பொத்தி வைத்து அவன் பெரிய ஆள் என சொல்லிக்கொண்டிருக்கிராள். அதேபோல அப்பா சாபம்போட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால் தேறிவந்துவிடுவான் என நினைக்கிறர். அவன் தேறிவிட்டான் என்றதும் அப்பா அப்படியே உடைந்து விடுகிறார். அவர் மகனை கொண்டாட ஆரம்பிக்கிறார். அவர்கள் இருவரும் சண்டைபோட்டுக்கொண்டே இருப்பவர்கள். சீப்பாகச் சண்டை போடுகிறர்கள். முதல் காட்சிமுதலே. உத்தரன் ஜெயித்துவிட்டான் என்ரதுமே கட்டிப்பிடிக்கிறார்கள். அழுகிறார்கல். எல்லா அப்பாக்களும் தன் மகனை சமூகம்தான் சிறுமைப்படுத்தியது தான் கஷ்டப்பட்டு மேலே கொண்டுவந்தேன் என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்

குமாரசாமி பெருமாள்

உத்தரனின் மாறுதல்


ஜெ

உத்தரனின் மாறுதல் எப்போதும் மேனேஜ்மெண்டில் சொல்லப்படும் ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. ஒருவனுடைய பர்சனாலிட்டியை மாற்றுவது கிரைஸிஸ் மட்டும்தான். வேறு எதுவுமே மனிதர்களை உண்மையில் மாற்றுவதில்லை. கிரைஸிஸ் வரும்போது எப்படியாவது மேலே வருவதற்காக மூளையும் உடலும் அடித்துக்கொள்கின்றன. தள்ளிவிட்டால் தானாகவே நீச்சல்வரும். வராவிட்டால் செத்துவிடுவான் என்பதும் உண்மை

மாதவன்

ரத்தவாடை

அன்புள்ள ஜெ

உத்தரன் போரைக் கண்டதுமே மாறிவிடுவது ஆச்சரியமாக இருந்தாலும் வாழ்க்கையில் ஆச்சரியம் அல்ல. வீணாய்ப்போகிறார்கள் என சில பையன்களை பார்ப்போம். சிலசமயம் ஏதேனும் தொழிலில் ஒரு ‘ரத்தவாடை’ கிடைக்கும். அப்படியே ஆளே மாறிவிடுவார்கள்.
உத்தரனைப்பற்றிய இரண்டு உவமைகள் கச்சிதம். சிம்மம் தன் குருதியால் குருதியை அறிகிறது. ஒரு நூலை ஒரே பார்வையில் வாசிப்பதுபோல அவன் ராணுவத்தைப்பார்க்கிறான். எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறான்

சண்முகம்

பிரயாகை'அன்புள்ள ஜெ,

வணக்கம். வாழ்வில்  மற்றுமொரு இனிய தருணம், தங்களோடு பகிர்ந்துகொள்ள. மகள் பிறந்திருக்கிறாள். இரண்டரை வருடங்களுக்கு முன் முதல் மகவு பிறக்கும் முன்னே பெண் பிள்ளையாக இருந்தால் 'பிரயாகை' என்பது நானும் மனைவியும் எண்ணம் காத்த பெயர். முதல் குழந்தை ஆண் மகவு.  ஆகவே பெயர் காத்து, இரண்டு வருடங்கள் கழிந்து பிரயாகை பிறந்திருக்கிறாள்.

உங்களைச் சந்தித்தும், கடிதம் எழுதியும் நாட்களாகிறது.  நேரம் ஒழிந்து வாசிப்பிற்கு செல்லும் மனதை பெரும்பகுதி வெண்முரசு ஆட்கொண்டு விடுகிறது. உங்களை வருத்தி  (புற உலகில்) உங்களில் நிகழும் தவம் வெண்முரசு. எழுத்திலோ பேச்சிலோ உங்களைத் தொடர்பு கொண்டு நாட்களாயினும், அகம் மானசீகமாக உங்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருந்து கொண்டிருக்கிறது. அது இவ்வாழ்வின் நற்பேறு. நன்றி ஜெ.

நன்றி,
வள்ளியப்பன்

முக்திமுக்தன், பெயருக்கு ஏற்ற படி அவன் அளவில் முக்தி அடைகிறான்.. இங்கிருந்தோ அல்லது அவன் மனதில் இருக்கும் அந்த இடத்திற்க்கோ.

சுபாஷினி, கரவு காட்டில், முக்தன் ஆனே இல்லை என்கிறாள்.. போர்க்களம் காணபோகும் தருணம் முக்தன் அவனை கரவு காட்டில் குடும்பம் குட்டியோடு, குதிரையுடனும் பின் சுபாஷினியுடனும் காண்கிறான்.

 ப்ருஹந்நளை இனி அர்ஜுனன் தான் என்று போர்களத்தில் குதிரையுடன் பார்த்த பின், அவன் மீள மீள வின் மீன்களை பார்ப்பதும்.. பின் இறப்பதும்.

எல்லாம் கோர்வையாக வந்திருக்கின்றது.

கொல்வதின் ஊடாக அவன் அவனை ஆண் என்று உணர்ந்து முக்தி அடைகிறானோ... என்றும் தோன்றுகிறது.

எனக்கு ஒரு அளவில் முக்தன் அர்ஜுனனின் பெண் வடிவின் ஒரு பிம்பம் என்றும் தோன்றுகிறது. அது கர்ணனின் அம்பு பட்டு, நெஞ்சில் உதை வாங்கியது போல், இனி வெளிவரப்போவதில்லை.. ஒரு வேளை வின்னை பார்த்து முக்தி அடைகின்றதோ?!?

நன்றி
வெ. ராகவ்

Sunday, August 20, 2017

முக்தனின் இறப்பு

 
 
முக்தனின் இறப்பு என்னையும் மிகவும் பாதித்து விட்டது. நாள் பூராவும் அவனின் நினைப்பு மனதினடியில். வேறு வேலைகளைனிடையிலும், வாசிப்பிலும் கூட ஒரு நெருடல், ஏதோ இழந்ததைப் போல. 

ஒரு உப கதாபாத்திரம் இவ்வளவு வாசிப்பவர்களின் உணர்வுகளை பாதிப்பது ஆச்சரியமே..! நீங்கள் கூறியது போல முக்தன் நெஞ்சில் மெல்லிய உதை போல அம்பு தைத்து விழும் போது நானும் நெஞ்சு கூட்டில் குருதி நிரம்பி விழுந்தேன்.

தனக்கு கொடுக்கப் பட்ட தூதுப் பணியை 
முடித்து விட்ட திருப்தியுடன் சென்று விட்டான் 

கண்ணீருடன்,

ராதிகா