Monday, July 14, 2014

இந்திரவிழா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 

தங்களுடைய வென்முரசை தினமும் படிக்கிறேன் , அதில் வந்த இந்திர விழா பற்றிய விவரணை சிந்திக்க வைக்கிறது , சிவராத்திரியில் குடிக்கப்படும் பாங்கு , ஹோலி திருவிழா போன்றைவைகளை  நினைவூட்டுகிறது . ஆனால் ஆடவரும் பெண்டிரும் வரைமுறையின்றி கலந்தார்கள் என்று குறிப்பிட்டிருப்பது  போல் இருந்தது , அப்படி என்றால் நம் நாட்டில் இப்பொழுது மேலை நாடுகளில் உள்ளது போல இச்சைப்படி உறவு என்ற நிலை இருந்ததா , எப்பொழுது அந்நிலைமை மாறியது 


ராஅம குமரன்


அன்புள்ள ராமகுமரன்,

இந்தியாவெங்கும் பழம்பண்பாட்டில் 'வளச்சடங்குகள்'எப்போதும் இருந்துள்ளன. போரிலும் நோயிலும் மரணம் முதன்மையாக இருந்த அந்தக்காலத்தில் பிறப்பு மிகப்புனிதமானதாகக் கொண்டாடப்பட்டது. நிலவளம் கருவளம் பெருக இந்திரன் வழிபடப்பட்டான். பின்னர் அது காமனாக மாறியது. காமனுக்குரிய எல்லா குணங்களும் உண்மையில் முன்பு இந்திரனுக்குச் சொல்லபட்டவை. 

பின்னாளில் வைணவம் மேலோங்கியபோது அவையனைத்தும் வைணவத்துக்குள் இழுக்கப்பட்டன. வைணவத்திருவிழாக்களில் தேரோட்ட நாளில் கிடத்தட்ட இதேபோன்ற வளச்சடங்குகள் நிகழ்ந்தன. தேர்களில் இருக்கும் பாலியல் சிற்பஙகளுக்கும், முகமண்டபத்தில் உள்ள ரதி- மன்மதன் சிலைக்கும் காரணம் இதுவே.

வடக்கே கோலி இன்றும் இந்த விழாவின் ஒருவகை நீட்சி. பல பழங்குடிகளில் இக்கொண்டாட்டம் நீடிக்கிறது. சென்ற ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரைகூட சுசீந்திரம் திருவிழாவில் ஒருநாள் இத்தகைய கொண்டாட்டம் அனுமதிக்கப்பட்டதை அ கா பெருமாள் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். 'திருவிழாவில பெத்தவனே'என்ற வசைக்குக் காரணமும் இதுவே

மகாபாரதத்தில் குந்தி பாண்டுவிடம் பேசும் இடத்திலும் [ சாந்திபர்வம்] பிற இடங்களிலும் இத்தகைய வாழ்க்கைமுறைபற்றிய குறிப்புகள் உள்ளன- பல குறிப்புகள் அகற்றப்பட்டிருக்கலாமென அவை காட்டுகிறன

ஜெ