Tuesday, July 22, 2014

சூரியன்

ஜெ,

சூரியவழிபாட்டின் பிரம்மாண்டமன சித்திரங்கள் பிரமிக்கச்செய்கின்றன. உண்மையில் இவ்வளவு பெரிய சூரிய கோயில்களும் சூரிய விழாக்களும் அன்றெல்லாம் இருந்தனவா? மேலும் சூரியவழிபாட்டுக்கும் இந்திரவிழாவுக்கும் ஏராளமான ஒற்றுமைகளும் உள்ளன. ஒரே தெய்வத்தையே இரு வகையிலே வழிபடுவதுபோல உள்ளது. இந்த ஒற்றுமை எப்படி வந்தது?

சன்முகவேல் வரையும் ஓவியங்கள் உங்கள் எழுத்துக்கு மிகப்பெரிய ஒரு கனவை அளிக்கின்றன.இன்று வந்த சூரியர் கோயில் விழா ஒரு அற்புதம். காலமெ மறைந்துபோய் அங்கேயே சென்றுவிட்டது போல தோன்றியது

ராம்மோகன்



அன்புள்ள ராம்,

ரிக்வேதகாலத்திலேயே வழிபடப்பட்ட இரு பெரும் தெய்வங்கள் சூரியனும் இந்திரனும். மகாபாரத காலத்துக்குப்பின்னரும் நெடுங்காலம் சூரிய வழிபாடும் இந்திர வழிபாடும் மிகப்பிரபலமாக இருந்தன. பின்னர் இந்திர வழிபாடு மறைந்தது. இந்திரனுக்குரிய சடங்குகள் பலவும் கிருஷ்ணனுக்கு அளிக்கப்பட்டன. சூரியவழிபாடு இன்றும் நீடிக்கிறது. சூரியனுக்கு பிரம்மாண்டமான ஆலயங்கள் இருந்திருக்கின்றன. அவை மொகலாயர் ஆட்சிக்காலத்தில் இடிக்கப்பட்டன. அவற்றின் இடிபாடுகளும் அடித்தளங்களுமே பிரமிப்பூட்டும்படி உள்ளன.

இந்திரன் சூரியன் இரு தெய்வங்களுமே வளத்தின், உயிராற்றலின் தெய்வங்கள். இந்திரன் மேகங்களின், மழையின்,புல்வெளிகளின் தெய்வம். ஆகவே மேய்ச்சல்நில மக்களின் முதற்பெருந்தெய்வம்.  சூரியன் ஒளியின் விளைச்சலின் தெய்வம். ஆகவே வேளாண்குடிகளின் தெய்வம். இது ஓர் எளிய வாய்ப்பாடுதான் . ஆனால் இது இவ்விரு தெய்வங்களையும் புரிந்துகொள்ள உதவக்கூடியது. ஒரு பொத்தாம்பொதுவான நோக்கில் அர்ஜுனனை இந்திரன் மைந்தனாகவும் கர்ணனை சூரியன் மைந்தனாகவும் உருவகித்ததையும் புரிந்துகொள்ள உதவும்-- இதையே முற்றான விடையாகவும், புராணங்களை விளக்கும் வாய்ப்பாடாகவும் கொள்ளாமலிருந்தால்

இரு தெய்வங்களுக்குமான பெரும்பாலான சடங்குகள் சமானத்தன்மை கொண்டவை. அவை வளசடங்குகள் என்பதே காரணம். மண்ணிலும் கன்றிலும் குடும்பத்திலும் விளைச்சல் பெருகி வளம்பெறவேண்டும் என்று  வேண்டும் சடங்குகள் அவை

ஜெ