Saturday, July 12, 2014

கனவு -சுரேஷ்பாபு



அன்புள்ள ஜெ,

பணிவான வணக்கங்கள்.

இன்று அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் தூக்கம்கலைந்து எழுந்துவிட்டேன். பக்கத்திலிருந்த மடிக்கணினியை உயிர்ப்பித்து இன்றைய வேங்கையின் தனிமையை படித்தேன்.  அதன் பிறகு காலை சைக்கிள் பயிற்சி, ஜிம் இப்போது அலுவலகம் என எங்கிருந்தாலும் நான் ஒரு கனவுக்குள் இருப்பது போலவே இருக்கிறது.

இன்றைய பகுதியின் வர்ணனைகள் அந்த சாலைகளையும், நதியையும், கிராமங்களையும் கனவாக கண்முன் நிறுத்தின. பின்னர் வரும் பீஷ்மரின் கனவு, 'உணவாகவே வாழும் தந்தை'.

அம்பை, சிகண்டி விசித்திரவீரியன் என பொதுவாக அதிகம் விரும்பப்படாத பத்திரங்களி்ள் கூட  உன்னத பக்கங்களைப் பார்த்த பிரமித்த நேரத்தில் இன்னொரு உன்னத பாத்திரம் உர்வரை.

அவளின் கனவு பீஷ்மருக்கு எந்த ஆச்சர்யமும் அளிக்காது, ஏனென்றால் அது அவரது கனவுதான், அவரை கவனிக்கும் மிக உன்னதமான பெண்ணான  அவளுக்குள் அவரது தவிப்பு கனவாக வருகிறதோ என நினைக்கிறேன்.

பீஷ்மர் அம்பை உள்ளிட்ட இளவரசிகளை கவர்ந்துவரும் அத்தியாயமும், சிகண்டி நகர் புகும் அத்தியாமும் அதன் தெறிக்கும் வேகத்தினால் எனக்கு மிக நெருக்கமான அத்தியாயங்களாக இருக்கின்றன.

ஆனால் இன்றைய அத்தியாயம் எனக்குள்ளே வரும் கனவாக உள்ளுறைகிறது.

அன்புடன்
சுரேஷ் பாபு.


அன்புள்ள சுரேஷ்

நன்றி

பீஷ்மரின் அந்தப்பயணம் ஒருவகை அகப்பயணம். ஆழ்ந்த நிலையில் செய்யும் பயணங்கள் உண்மையில் நம் அகத்துக்குள் நாம் செய்யும் பயணங்களே

ஜெ


நன்றி ஜெ.

அந்தப்  பகுதியயின் நடையும் விவரிப்பும் இது ஒரு ஆழ்ந்த அகப்பயணம் என்பதை  காட்டுகிறது. அதுதான் வாசிப்பின்போது கிடைத்த பரவசம் என உங்கள் விளக்கத்துக்குப்  பிறகு  இப்போது புரிந்து கொள்கிறேன்.

இன்றைய பகுதியில்வரும் சிகண்டியின் கனவு இன்னும் தெளிவாக்குகிறது.


நன்றி

சுரேஷ் பாபு.