Monday, July 28, 2014

சிவக்குமார் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்கள் வெண்முரசை தினம் தோறும் மிகுந்த ஆவலுடன் படித்து வருகிறேன். இப்போதெல்லாம் ஒரு நாள் விடிந்தால் ஆஹா இன்று வெண்முரசு படிக்க போகிறேன் என்பதே மிகுந்த ம்கிழ்ச்சி தருவதாய் இருக்கிறது. பிறகு முடிந்த வரை தனிமையிலேயே தான் இதனை பருகுகிறேன். கடந்த வருடம் இதே போன்றதொரு ஜுலை மாதத்தில் தான் கிஸாரி மோகன் கங்குலியின் ஆங்கில மகாபாரத மொழி பெயர்ப்பை வாசித்து முடித்தேன். இதே சமயத்தில் தான் ஃபேஸ் புக் மூலமாக தங்கள் விஷ்ணுபுர வலைதளத்தை அறிந்து தங்கள் வலைதளத்தை அறிந்து உங்கள் விஷ்ணு புரம் வாசித்து உங்கள் எழுத்துக்களுக்கு வந்து சேர்ந்தேன். அதன் பின் கொற்றவை. 

உண்மையில் விஷ்ணுபுரம் என்னை அதிகமாக கவரவில்லை. ஒரு வேளை அது என் அதீத எதிர்பார்ப்பின் காரணமாக இருக்கலாம். ஆனால் என் ஒப்பீடு தங்கள் கொற்றவையுடனும் தற்போது எழுதி வரும் வெண்முரசோடும் தான். தங்களின் எழுத்துக்களில் கொற்றவையே சிறந்த புதினமாக எனக்கு தெரிகிறது. பிறகு அதனை விஞ்சக்கூடிய அளவில் தற்போது வெண்முரசு ஒரு மாபெரும் விஸ்வரூபம் போல் பிரம்மாண்டமாய் என் முன் நிற்கிறது. விஷ்ணுபுரத்தை நான் குறை கூறுவதாய் நீங்கள் நினைக்க கூடாது. முதிரா இளமையின் நினைவுகள் எப்போதும் அழகு தான். ஆனால் அதில் some maturity is missing. அவ்வளவுதான். இன்னும் மகாபாரதம் பற்றியும் கூட பல கேள்விகள் எனக்கு உண்டு. உங்கள் பொன்னான நேரத்தை இப்போதைக்கு வீணடிக்க விரும்பாததால் ஒரே ஒரு கேள்வி. அது ஏன் கம்ப ராமாயணம் அளவு வில்லிபுத்தூராரின் மகாபாரதம் தமிழில் பிரபலமும் முக்கியத்துவமும் அடையவில்லை? கம்ப ராமாயணம் போல் முழுமை தன்மை அதற்கு இல்லை என்பதாலா? 

பி.கு. கல்லூரி முதலாமண்டு தான் நான் கடைசியாக தமிழில் எழுதியது. அதன் பின் தமிழில் எழுதும் வாய்ப்பே இல்லை. நீங்கள் தான் 1999-க்கு பின் தற்போது 2014-ல் என்னை தமிழில் எழுத வைத்திருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் தாமதமாகி இருந்தால் கால் எழுத்து எங்கு வரும் ரெண்டு சுழி ந மூணு சுழி ந-ல-ள-இடுதல் இவையெல்லாம் மறந்து போயிருக்கும். இப்போதும் கூட தமிழில் டைப் செய்வது மிக மிக கடினமாகவே உள்ளது. ஜெயமோகன் எனும் மனிதராகிய நீங்கள் மற்றும் உங்கள் எழுத்தின் மீதான அன்பும் ஆர்வமுமே என்னை தமிழில் எழுத தூண்டுகின்றன. மிக்க நன்றி ஸார்.

சிவக்குமார்

சென்னை 



அன்புள்ள சிவக்குமார்


கம்பராமாயணத்தில் உள்ள காவியச்சுவை வில்லிப்புத்தூரார் காவியத்தில் இல்லை. கணிசமான பகுதி செய்யுளில் சம்பிரதாயமான அணிகளுடன் சும்மா சொல்லிச்சென்றதுபோல் இருக்கும். கம்பராமாயணத்தில் அத்தனை செய்யுட்களும் மணிகள்

விஷ்ணுபுரம் பற்றி. இருக்கலாம், ஆனால் இலக்கியத்தில் முதிர்ச்சியான நிலைக்குச் சமானமாகவே முதிராத இளமையின் வேகத்துக்கும் மதிப்புண்டு. அங்கே அடையப்பெற்ற சில கனவுகள் இங்கே சாத்தியமில்லை. இங்கே அடைந்த சில விவேகங்கள் அங்கே இல்லை என்பதைப்போல

ஜெ