Monday, July 7, 2014

அகமும் அறமும்- ராமராஜன் மாணிக்கவேல்

அறமும் அகமும் போடும் கோலம்

அன்புள்ள திரு.ஜெயமோகன் ஐயா வணக்கம்.
கணித சூத்திரப்படி இருபுள்ளிகளுக்கு இடையில் ஒரு நேர்க்கோடு. வாழ்க்கையும் இருபுள்ளிகளுக்கு இடையில்தான். ஒன்று அறம் வைக்கும் புள்ளி. மற்றது அகம் வைக்கும் புள்ளி. இடையில் வாழ்க்கைதான் எத்தனை வடிவங்களில்.
விதைத்தவனே அறுக்கணும், தொடங்கியவனே பொறுப்பேற்றகணும். அறம் மலர்ந்து திரளும் கனிவிதைகள் எல்லாம் வளரும்போது வான்திறந்து புனிதநீர் பொழிய வளர்கின்றது. அறம் கருகி விழுந்து குவியும் சாம்பலில் இருந்து முளைக்கும் விசச்செடியெல்லாம் மனம் கிழிந்து உடல்அறுந்து வழியும் ரத்தத்தில் வளர்கிறது. அறம் தூவும் விதையும், அகம்தூவும் விதையும் இனி காடாக இங்கே விதைக்கப்பட்டுவிட்டது.
சேவகனுக்கும் சேவகனாகி சேவைசெய்யும் கண்ணன், அறநூல்கள் அத்தனையும் அறம்படிக்க ஆசிரியனாக்கிக்கொள்ளும் கண்ணன், தருமனுக்கு அறம் உரைக்க பீஷ்மனை கைக்காட்டும்போது அப்பேர் பெற்ற பீஷ்மன் எப்படி இருப்பான், குருசேத்திரப்போரில் ஆயுதமே எடுக்கமாட்டேன் என்ற ஆயுத்தையே தன் விரலாக கொண்ட கண்ணனை ஆயுதம் எடுக்க வைப்பேன் என்று சபதமிடும் பீஷ்மன் எப்படி இருப்பான்? என்று   எனக்குள் எழுந்த ஆவலை “ஒரு கணமேனும் தன்னைப்பற்றிநினையாதவர்களுக்கு மட்டுமே உரிய கருணை நிறைந்த புன்னகை கொண்டிருந்தான்.”என்றும் ” ஆயுதப்பயிற்சியே அவரது யோகம்” என்றும் காட்டி அசத்திவிட்டீர்கள்.
”அவரது உயரத்துக்கு அரண்மனையின் அத்தனை நிலைவாயில்களும் சிறியவைஎன்பதனால் ஒவ்வொரு வாயிலுக்கும் அவர் குனிந்துகொள்ள வேண்டியிருந்தது.”என்று சொல்லி விழி விரியவைத்து ”யாசிப்பவர் போல கைகள் அவரையறியாமல்நீண்டன” என்ற இடத்தில் முகத்தில் அறைந்து கொண்டு விழி துடைக்க வைத்துவிட்டீர். அறத்தின்வேர் அத்தனை கூர்மையா? எத்தனை பெரிய மலையையும் நெக்குவிட   வைத்து நகர்த்திவிடுமா?

”ஒவ்வொரு பார்வையிலும் நான் இங்கிருப்பவனல்ல என்று சொல்வதுபோல,ஒவ்வொரு சொல்லிலும் இதற்குமேல் சொல்பவனல்ல என்பதுபோலஒவ்வொருகாலடியிலும் முற்றாக கடந்து செல்பவர்போல அவர் தெரிந்தார்” அப்பேர்பட்ட மனிதனும் சுயநலத்தின் முன் சுருண்டுவிடுவானா? அக்கினிமலையை விழுங்கிவிடும் சுயநல இருட்டு அத்தனை கருமையா? அல்லது அதன் படை, முன்னால் அறகவசம்அணிந்துக்கொண்டு பின்னால்  வெடிக்கும் பீரங்கியா?
“அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால்வெறுக்கப்படுகின்றது”   இன்றைய உலகைக் காட்டும் உன்னதவரிகள். குடிசையில் தொடங்கிக் கோட்டைவரை. கிராமத்தில் இருந்து கண்டங்கள்வரை எல்லா இடர்களுக்கும் அச்சம் காரணம். அச்சமே மாபெரும் பாவங்களுக்கு காரணம். பீஷமன்  வெண்முரசில் பேசும் முதல் வார்த்தையே ”அச்சம்” இந்த ஒற்றை வார்த்தைதான் மொத்த உலகத்தையும் குருசேத்திரத்தில் கொண்டு வந்து நிறுத்தி காவு வாங்க போகிறது. எங்கெல்லாம் மனித வர்க்கம் அழிந்துக்கொண்டும், அழிக்கப்பட்டும்கொண்டு இருக்கிறதோ அங்கு விழும் விதை அச்சம். இந்த முதல் வாசகத்தை பீஷ்மன் பேசியது வேண்டும் என்றெ போட்டதா,? தானாக விழுந்ததா?
 சூதரேஅறத்தின் வழிகள் முற்றறிய முடியாதவைஆனால் மனிதன் செய்யும்அறமீறல்களோ விண்ணிலும் மண்ணிலும் பொறிக்கப்படுபவைமனிதனுக்குபடைப்புசக்திகள் வைத்த மாபெரும் சூது இதுவென்று நினைக்கிறேன்” என்றார்.  மானுட வர்க்கத்தின் ஓயாத விளையாட்டை, ஓய்ந்துவிடாத விளையாட்டை அழகாக சொல்லி உள்ளீர்கள். 
காமமும், கோபமும் ஒற்றை நாணயமா?  இரண்டுபோல் இருந்தாலும் ஒன்றுதான். தலை தெரியும்போது மலர்தெரிவதில்லை.  சத்தியவதி மூடாத விழிகளின் வழியாகவே காமத்தையும் கோபத்தை திருப்பித்திருப்பிக்காட்டுகிறாள்.
சுயநலம், சுய நலத்தால் எழும் அகவேகம், அதன் வழியாக வரும் அறம் விலகுதல் ”அறுபத்தைந்து வயதிலும் மூப்பின் தடங்களில்லாத அவளுடைய அழகியகரியமுகத்தில் எப்போதும் எங்கும் தலைவணங்கியிராதவர்களுக்குரிய பாவனைஇருந்தது.” என்ற பெண்மையை எந்த நிலைக்கு தள்ளுகின்றது பாருங்கள் “நான்எட்டுத்திசைகளிலும் எண்ணியபின்புதான் இதைச் சொல்கிறேன்… இதுவன்றிஇப்போது வேறுவழியே இல்லை” என்று அகவேகத்தால் சிறுத்த முகத்துடன் சத்யவதிசொன்னாள்.  ஒரு உச்சத்தையும் ஒரு நீச்சத்தையும் சத்தியவதியை வடிக்கும் சிற்பியாக நின்ற சத்தியவதி சிற்பம் செதுக்கிருப்பது அழகு.   
பீஷ்மன் நீதிமான், நீதி உரைக்கப்போகின்றவன். தனக்குள் இல்லாத எந்த மலரையும் மரம் மலரசெய்துவிட முடியாது. அப்படி செய்தால் அதில் மணமும் தேனும் இருப்பதில்லை. தனக்குள் கொண்ட நீதியையே பீஷ்மன் வழங்குகிறான். ”தன் மனதுக்குகந்த கணவர்களைப் பெற எந்தப்பெண்ணுக்கும் உரிமையுண்டுஅந்தப்பெண்களை இங்கே கொண்டுவந்து அவர்களின் மனம்திறக்காமல் வயிறுதிறந்தால் அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும்விடாது….அன்னையேபுராணங்களனைத்தும் சொல்லும் உண்மை ஒன்றேபெண்பழிகொண்ட மண்ணில் அறதேவதைகள் நிலைப்பதில்லை….” என்றார்.
திரு.ஜெயமோகன் உங்கள் அகத்தில் எரியும் தழல்கொண்டு எழுதிய வரிகள் இவை. உலக பெண்கள் எல்லாம் ஒளி பெறவேண்டம் என்று. காலம் காலமாய் பெண்கள். அங்கங்களாய் பார்க்கப்படுகிறார்களே அன்றி, உள்ளங்களாய்ப் பார்க்கப்படவில்லை. உள்ளங்களாய் பார்க்கப் பட்டால் ஆண்களின் இயலாமைகள் எல்லாம் வலிமைகளாய் சித்திரக்கப்படும் சிடுக்குகள் அவிழ்ந்துக்கொள்ளும் என்பதால். மனம் திறந்து பெண் வளர்வதைவிட, அவர்களின் வயிறு திறந்து புல்முளைத்தால்போதும்என்று மாக்களின் கூட்டம் மேயவே காத்திருக்கின்றன. உங்களுக்குள் இருக்கும் தாய்மை தான் இந்த வரிகளை எழுத வைத்தது. வான்திறந்து வந்து மண்ணில் பாதம் வைத்த அந்த நம் முதல்தாய் வானில் இருந்து இந்த வரிக்காக வாழ்த்திருப்பாள். 
”கூர்வாள் தசையில் பாய்வதுபோல “இது உன் தந்தை சந்தனுவின் மீது ஆணையாகநான் உனக்குப் பணிக்கும் கடமை.” இது என்னக் கொடுமை  காமம் கற்ற தந்தைக்கு பிறந்த அறம்கற்ற மகனை எல்லா சித்திகளும் அறத்தைக்காட்டியே அச்சுருத்துகிறார்கள். வயிற்று மகனுக்காக வளர்ந்த மகனை திக்கு தெரியாத வனத்தில் தனியாகவே துரத்துகிறார்கள். அரச சிம்மாசனம் அத்தனை கொடியதா? பால் சுரக்கும் மார்பில் அது விஷம் சுரக்க வைக்குமோ? சிம்மாசனத்தின் வெப்பத்தில் தாய்மை உலர்ந்து எரிந்து கரிகி ஒழிந்துவிடுமோ?
வசிஷ்டர்“துயரம் இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார்.”
கிங்கரன் அருகே நெருங்கியதும் தர்ப்பையை தலைமேல்தூக்கி தன்னையறியாமல்கிங்கரனேஇதோ நீ செய்த அனைத்துப் பாவங்களையும் நான் மன்னிக்கிறேன்.விடுதலை அடைவாயாக!” என்று சொன்னார்.என்ன ஒரு அற்புதம்,மானுட உச்சம். எப்படி இது மனிதனுக்கு சாத்தியம் ஆகிறது?. இதனால்தான் இவர்கள் வானுறை தெய்வத்துள் வைக்கப்படுகின்றார்களா? இந்த விருட்சங்களின் விதைகள்தான் மானிட வர்க்கத்திற்கு அறநிழல்தரும் சோலையாகின்றனரோ?  
 பராசராஉன்னிலிருப்பது ஞானம்அது மரங்களை மடித்து உண்டு காடதிர காலெடுத்துநடந்துசெல்லும் மதகரி.. கவிதையோ இசையென்னும் சிறகு முளைத்த பறவைஅதுவிண்ணில் நீந்தும்மலர்களில் தேனுண்ணும்.. மதகரியைப் படைத்த நியதியேபறவையையும் படைத்தது என்று உணர்க” என்றார்.
பிரபஞ்சத்தின் ரகசியம் வெளிப்படும் வரிகள்.
ஏழுவகை இருப்புகளை ஒவ்வொன்றாக விலக்கலானார்.-பெண்ணின் ஏழுவகை நிலைகளை கூறியதுபோல, பெண்களில் நான்கு வகைகளை காட்படியது போல இந்த ஏழுவகை இருப்புகளையும் சொல்லி இருக்கலாம்.

நன்றி
வாழ்க வளமுடன்
அன்புள்ள
ஆர்.மாணிக்கவேல்