Sunday, August 24, 2014

நீலம் எனும் பெயர்


அன்புள்ள திரு.ஜெ வணக்கம்

நீலம் என்று மட்டும் ஏன் பெயர் வைத்தீர்கள், இப்படி பேர் வைத்திருக்காலமே அப்படி பேர் வைத்திருக்கலாமே என்று நானும் பலபெயர்களைச்சுட்டிக்காட்டினேன். நீங்கள் எதுவும் சொல்லவில்லை. சொல்வது மட்டும் பதில் இல்லை சொல்லாததுகூட ஒரு பதில்தான் காரணம் சொல்லாதபதிலில்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள் உள்ளன.


//இது அறிவில்லாத நிலையில் எழுதப்படும் நீலம். இது வேறு//

இந்த பதில் பல அர்த்தங்களை சொல்லிக்கொண்டே இருந்தது. அறிவில்லாத நிலை..அறிவில்லாத நிலை என்று மனதில் சொல்லிக்கொண்டே இருந்தேன். எப்போது எல்லாம் அறிவில்லாத நிலையில் மனிதன் நிற்கின்றான் என்றுப்பார்த்தேன்.

மிருகப்பாசம்
குழந்தைத்தனம்
தாய்மைக்குணம்
தந்தையின்தவிப்பு
பித்து
பக்தி என்று மனம்போய்க்கொண்டே இருந்தது. நேற்று நீலம் படித்தப்பின்பு எனது பதிவில் //பெரும் பக்தி பித்தேற்றும்  பக்திக்கவிதை// என்று குறிப்பிட்டு இருந்தேன். நண்பர் சுரேஷின் பதிவில் //இன்னமும் நேற்றைய நீலம்  உருவாக்கிய பரவசமும் பித்தும் துயரும்  போகவில்லை. நேற்று மாலை தாள முடியாமல் ஜெவிடம் பேசினேன்.ஒரு பித்து நிலையில் எழுதியதாகவும் காலையில்தான் படித்துப் பார்த்ததாகவும் சொன்னார்//

விஜயராகவன் பதிவில் //பித்தேறிய பாசுர நடை ! அபாரம் !// என்று உள்ளார்.

இதில் விஜராகவன், சுரேஷ், நீங்கள், நான் என்ற நால்வரும் திட்டமிட்டு பித்தென்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை  ஆனால் அது வந்து தானாக விழுந்துவிட்டது. நான் அறிந்த நால்வர்கள் நாம். கிட்டத்தட்ட இரண்டு லட்சம்பேர் படிக்கும் வெண்முரசு வாசகர்கள் மனதில் எல்லார் மனதிலும் நீலம் இந்த பித்தென்ற வார்த்தை எழுந்து வரசெய்திருக்கும் அல்லது அதை கண்டு கொள்ள வைத்திருக்கும். இந்த நிலையில் “நீலம்” என்ற அந்த சொல்தான் இந்த நாவலுக்கு உரியது என்று இப்போது புரிந்துக்கொள்கின்றேன். வண்ணக்கடல் என்ற பெயர் எப்படி வைத்தேன் என்று சொல்லி உள்ளீர்கள் ஆனால் நீலம் என்று ஏன் பெயர் வைத்தேன் என்று இன்னும் சொல்லவில்லை சொல்லலாம் என்றால் சொல்லவும்.

நான் சொன்னதுபோல நீலவானம், நீலமேகம், நீலநிலா, பச்சைப்புயல் என்ற பெயர்கள் வைத்திருந்தால் அவை எல்லாம் ஏதோ ஒரு புள்ளியில் இது யோசித்து திட்டமிட்டு வைத்த பெயர்களாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். நீலம் என்ற பெயர் தானாகவே கனிந்து நழுவி விழுந்தபெயர் என்று இன்று உணர்கின்றேன்.

பெரும்பக்தி என்றதும் ராமபக்தனாகிய ஸ்ரீஆஞ்சநேயரும், ஹரிபக்தனாகிய பிரகலாதனும்தான் ஞாபகம் வருவார்கள்.

ஸ்ரீஆஞ்சநேயரிடம் இன்று என்ன திதி என்றுக்கேட்டால் எனக்கு திதி கிதி எல்லாம் தெரியாது ராமனைமட்டும்தான் தெரியும் என்று சொல்வாராம்.
பிரகலாதன் முன்பு யாராவது அறியாமல் “க” என்ற சொன்னால்கூட அவனுக்கு கண்கள் நீர்சொரிந்து, வாயடைத்துபோகுமாம் அத்தனை எளிய துளிப்பொழிதில் அவன் ஹரி நினைவில் ஆழ்ந்துவிடுவான் என்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் பிரேமைபக்தியைப்பற்றி சொல்லும்போது சொல்வார்.

இன்றையை நீலம் தொடர்வாசிக்கும்போது அந்த பிரேமையின் கணத்தில் எழுந்தபொழுதில் பிறந்த பெயர் என்று நீலத்தின் பெயர் காரணம் அறிந்தேன்.

கற்பனையாக எதையாவது எழுதினால் இது பொய் எழுதாதே என்று மனம் சலிக்கிறது. சரி உண்மையை எழுதுவோம் என்றால் இதுரகசியம் சொல்லாதே என்றும் மனம் அஞ்சுகிறது. உங்கள் எழுத்துகள் கற்பனை என்னும் ஆடைக்கட்டிக்கொண்டு வரும் உண்மைகள் அது வந்து மனதை தீண்டும் தருணத்தில் பிரபஞ்சத்தின் உண்மையின் வெளியில் நிற்பதை உணரமுடிகின்றது. இதுதான் இலக்கியம் படிக்கும்போது கிடைக்கும் பரிசு என்று நினைக்கின்றேன்.

நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராம.மாணிக்கவேல்