Friday, October 24, 2014

பிரயாகை 1- ராமராஜன் மாணிக்கவேல்




பிரயாகை-01

அன்னை பெரியநாயகி சமேத ஸ்ரீபிரகதீஸ்வரர் அருள்புரியும் கங்கைகொண்ட சோழபுரம் சிவலிங்கத்தைப்பற்றி ஒரு பழமொழி சொல்வார்கள். “மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று”

வாழ்க்கையில் எவ்வளவு இருந்தாலும் “இல்லை” என்ற நிலையில்தான் வாழ்க்கை சென்று நிற்கும் என்பதற்கான பழமொழிஅது.
அறிந்தாலும்,அறியாவிட்டாலும் அந்த இல்லாமையில் சென்று நிற்கவேண்டும் என்பதை மனிதமனம் எப்படியோ உணர்ந்து இருக்கிறது அதனால் அது மீண்டும் மீண்டும் விருப்பு, வெறுப்பு என்ற நூலால்.  “இருக்கு” என்ற வாழ்க்கை முழத்தை நெய்ய முயற்சி செய்கின்றது.

விரும்புவதால் அருகிலும், வெறுப்பதால் தொலைவிலும், தொலைவில் இருந்துக்கொண்டே விரும்பியும், அருகில் இருந்துக்கொண்டே வெறுத்தும் நெய்யப்படும் இந்த வாழ்க்கை கடல்போலும், உடல்போலும் அலையாலும், அசைவாலும் பெருகிக்கொண்டே இருக்கிறது. அலையும், அசைவும் எந்த பொருளும் உடையது இல்லை ஆனால் பார்வையாளனுக்கு அது பொருள் விளாங்கா பெரும் பொருளாக இருப்பது பிரமதரிசனம்.
ஒருவன் வாழ்க்கையை விரும்பி இழந்துபோகிறான். ஒருவன் வாழ்க்கையை வெறுத்து பெற்றுக்கொள்கிறான். இழந்துபோனவன் இழந்த நிலையிலும் தான் இருந்ததை உணர்கின்றான். பெற்றுக்கொண்டவன் பெற்றநிலையிலும் தான் இழந்துபோனதை உணர்கின்றான். விரும்பினாலும், வெறுத்தாலும் எதனுடனும் இணைப்பை அறுத்துக்கொள்முடியவில்லை என்பதை விளக்கும் ஆசிரியர் திரு.ஜெ சுருசி, சுநீதி என்னும் பாத்திரங்கள் உடல் அல்ல, அகம் என்பதையும் அவற்றின் பெயர் காரணங்களே பாத்திரங்களாகி உள்ளன என்பதையும் அற்புதமாக காட்டி உள்ளார்.

சுநீதி, சுருசி என்னும் தராசுத்தட்டுக்களுக்கு இடையில் குறிமுள்ளாய் நிற்கும் உத்தானபாதன் பெயர்கூட எத்தனை பொருத்தமானது. ஒருபாதம் உயர்த்தப்படும்போது, ஒருபாதம்தாழ்த்தப்படுகின்றது. சமமாய் நிற்கமுடியாத இரண்டில் சமமாய் நிற்கும் தருணத்தை எதிர்ப்பார்த்து நிற்கும் உத்தானபாதன் அகம்படும்பாட்டை அவனே சொல்லும்போது மானிட உலகம் முழுவதும் உத்தானபாதனாய் மாறும் பெருங்கணம் ஏற்படுகின்றது.   
//உத்தானபாதன்நான் தவிக்கிறேன் தந்தையே. இந்த இருமுனை ஆடலால் என் வாழ்வே வீணாகிறதுஎன்றான்//
அந்த பெருங்கணத்தின் ஆடலில் ஆடமல் நிற்கும் பிரமத்தின் குரலாய் ஒலிக்கும் சுயம்புமனு, இருமையின் அசைவின்மை நிற்கும் புள்ளியை தொட்டுக்காட்டி ஆனந்தத்தின் ருசி அறியவைக்கின்றார்.
//சுயம்புமனு புன்னகை செய்துமானுடர் அனைவரும் அந்த லீலையை அறிவர். அதை ஏற்கமறுத்து பதறி விலகிக்கொண்டும் இருப்பர்என்றார்//

இருகோடுகள் தத்துவம்போல, ஒருகோடு நீளும்போது மறுகோடு தானாகவே சிறிதாகி விடுகின்றது. ஒருகோடு சிறிதாகுவதாலேயே மறுகோடு தானாகவே நீளமாகிவிடுகின்றது. விருப்பும் வெறுப்பும் மானிட வாழ்வில் அப்படித்தான் உள்ளது  என்பதை தனது மனைவிகளின் வழியாக உணரும் உத்தானபாதன், தான் நீளும்போது ஆணாகவும், குறையும்போது மகனாகவும் ஆகின்றான். மானிடர்களுக்கு உருவம் என்பது ஒரு குறியீடுமட்டும்தான், அவர்கள் ஒருபாவனையின் மூலம்தான் தன்னை மற்றவர்களோடு பிணைத்து உள்ளார்கள் என்பை உத்தானபாதன் பாத்திரம் மூலம் விளக்குகின்றார் ஆசிரியர் திரு.ஜெ. பாவனை என்பது ஒரு கணம், ஒரு கணம் என்பதுகூட இல்லை, ஒரு நுண்கணம் அந்த நுண்கணம்தான் எத்தனை பெரிய தாக்கத்தை மனித உடல்மீது ஏற்படுத்துகின்றது. உத்தானபாதன் பலகணங்களின் கூட்டுத்தொகை.


//சுநீதியை வெறுப்பதன் வழியாகவே அவளை நெருங்கமுடிந்தது. வெறுப்பை வளரச்செய்து குரூரமாக ஆக்கி அதை குற்றவுணர்ச்சியாகக் கனியச்செய்து அதன்பின் கண்ணீருடன் அவளை அணைத்துக்கொண்டான். அத்தருணத்தைத்  தாண்டாத அவ்வுணர்வெழுச்சியாலேயே அவளுடன் உறவுகொள்ள முடிந்தது. மாறாக சுருசியின் மீதான விருப்பத்தால் அவள்முன் சிறுமைகொண்டு அதனால் புண்பட்டான். அதைச் சீற்றமாக ஆக்கி அவளை வெறுத்துத் தருக்கி எழுந்து நின்றிருக்கையில் அவள் அளிக்கும் மிகச்சிறிய காதலால் முற்றிலும் உடைந்து அவள் காலடியில் சரிந்தான். சுநீதியின் முன் ஆண்மகனாக நிமிர்ந்து நின்றான். சுருசியின் முன் குழந்தையாகக் கிடந்தான்//

சுருசி, சுநீதி என்று இருபாத்திரங்கள் உடன் வாழ்க்கை நடத்தும் உத்தானபாதன் என்னும் பாத்திரம் நமது அகம்தான். அந்த அகம் நாடும் ஒவ்வொன்றிலும் சுருசியையும், சுநீதியையும் கண்டுக்கொண்டே வாழ்ந்து செல்கின்றது.  
//எந்த மானுடனாவது உடலின் வலம் இடத் தேர்வை அவனே செய்யமுடியுமா என அவன் வியந்துகொண்டான். அது அன்னைக் கருவுக்குள் உடல் ஊறத்தொடங்கும்போதே ஒருவனில் கூடுவதல்லவா?//


இயற்கை அழகா? செயற்கை அழகா? என்று வினா எழுப்பினால், இயற்கை அழகு என்று இதயம் சொல்ல வாய் எடுக்கும்முன், செயற்கை அழகு என்று அறிவு உதாரணம் எடுத்து வைத்துவிடும். வளர்ந்த பனைமரத்தில் முளைத்ததில் இருந்து மட்டைகள் நீங்கப்படா பனைமரத்தைப் பார்க்கும் ஒரு காட்சியும், வளரவளர மட்டைகள் நீக்கப்பட்டு கூந்தலுடன் இருக்கும் பனைமரத்தைப்பார்க்கும் ஒருகாட்சியும் காணக்கிடைத்தால் எது அழகு?


இயற்கை வெளிப்படுத்தவும். மறைக்கவும் எதுவும் இல்லாமல் இருக்கிறது. செயற்கை வெளிப்படுத்தும் ஒன்றில் ஒன்றை மறைத்து வைக்கின்றது, மறைக்கும் ஒன்றில் வெளிப்படுத்துகின்றது. வெளிப்படுத்தியும், மறைத்தும் வைக்கும் செயற்கைகள்தான் காமக்குரோதமோகம் கொண்ட மனிதனுக்கு அழகு.


சுநீதி இயற்கையாக இருக்கிறாள்
//“அடியவளின் அறைக்கு வரவேண்டும்என்று அவன் கைகளைப் பற்றினாள். காலகாலமாக சொல்லப்பட்டு வரும் சொற்கள். இந்தச் சொற்களின் ஓரத்தில் சற்று வஞ்சம் இருந்திருந்தால், புன்னகையில் எங்கோ வன்மம் கலந்திருந்தால், விழிகளுக்குள் குரூரம் மின்னியிருந்தால் இவளுக்கு இக்கணமே அடிமையாகியிருப்பேன்”//

சுருசி செயற்கையாக இருக்கின்றாள்
//“சொல்என்று அவன் சொன்னதும் முதிரா இளம்பெண்ணின் பேதைமையும் நட்பும் நாணமும் கலந்த நளின அசைவுகளுடன் முகம் சிவந்துஇல்லை, ஒன்றுமில்லைஎன்றாள் சுருசி. அப்போது அவளை முதிரா இளம்பெண்ணாகவே மனம் உணர்வதை எண்ணி வியந்தான்//
காமக்குரோத மோகத்தில் ஆழும் மனிதனுக்கு அதில் எப்படி ருசி ஏற்படுகின்றது என்பதை சுருசியின் பாத்திரத்தை கொண்டும், நீதி எப்படி எந்த நுண்புனைவும் இல்லாமல் வரட்சியாக இருப்பதால் கைவிடப்படுகிறது என்பதை சுநீதியின் பாத்திரத்தின் மூலமும் விளக்கும் விதத்தில் திரு.ஜெ மானிட அகத்தின் விருப்பு வெறுப்பு என்ற நிலைப்பாடை அழியா சிற்பமாக செதுக்கி வைத்துவிட்டார்.

இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்கு உலகு-என்னும் திருக்குறளை பாத்திரங்களாக்கி நடனமிடவைத்த பகுதி இன்று.

எவ்வளவு அவமானப்படுத்தினாலும், உதைத்தாலும் ஆணவத்தை சுமக்க மண்டியிடும் மனம், அச்சப்பட்டு, குழைந்து, கனிந்து நிற்கும் அன்பைக்கண்டு கூசி உதறிவிடுகின்றது. அன்பு நாயிடமும், மனிதனிடமும் ஒரே மாதரிதான் இருக்கிறது.

//வலத்தொடையில் துருவனின் கைகள் படிந்தபோதுதான் அவன் அறிந்தான். குனிந்து நோக்கியபோது அடிபட்டுப் பழகிய நாய்க்குட்டியின் பாவனை கொண்ட கண்களைக் கண்டான். அத்தருணத்தை உணர்ந்து கூசிய ஒளியற்ற புன்னகை. அக்கணம் எழுந்த கடும் சினத்துடன்சீ, விலகுஎன்று அவன் துருவனை தள்ளி விட்டான்//

நெருப்பில் இளகும் மெழுகு, தண்ணீரில் கெட்டிப்படுகின்றது. மனத்தை மெழுகென்றவன் வாழ்க!

நன்றி