Wednesday, October 15, 2014

யானைகள்



அன்புள்ள ஜெ

முதற்கனல் அதன் கூர்மையான கதையால் நம்மைக் கவர்கிறது என்றாலும் காலம் போகப்போக மழைப்பாடல்தான் மனதில் விரிந்துகொண்டே இருக்கிறது. காரணம் அதன் டீடெயில்கள். நான் தினமும் ஒரு குறிப்பு எடுப்பேன். அதைத்தான் கடிதமாக அனுப்புகிறேன்

இன்று மழைப்பாடல் பற்றி எழுதினேன். அதில் முக்கியமானவை விரிவான காட்சிப்படுத்தல்கள்தான். குறிப்பாக யானைகள்.வடக்குதிசைநோக்கி எப்போதெல்லாம் கதைபோகிறதோ அப்போதெல்லாம் யானைகள் வந்துவிடுகின்றன. நுட்பமாக யானைகளின் நடத்தை காட்டப்பட்டுள்லது. அது யானைகளை கண்ணெதிரே காட்டுகிறது

குறுக்காக மழைப்பாடல் வண்ணக்கடல் இரண்டையும் யானைகளை வைத்தே தொகுத்துப்பார்க்கமுடியும் என்று நினைத்துக்கொண்டேன். வடக்குக் கொட்டிலில் யானைகள் இருப்பது மழைப்பாடலிலேயே வந்துவிட்டது. காலகீர்த்தி மறக்கமுடியாத யானை.

யானையை துண்டுகளாக்கி அடக்கம்செய்யும் இடம் படபடப்பூட்டியது. கடைசியாக அஸ்வத்தாமா என்ற யானை. மூலத்தில் ஒற்றைவரியாக வரும் அந்த யானை பெரிய கதாபாத்திரமாக ஆகிவிட்டது

ஒருயானைபோல இன்னொன்று இல்லை. ஒவ்வொரு யானையும் ஒரு கதாபாத்திரம். மகாபாரதம் என்ற நதியில் மனிதர்கலைப்போலவே அவையும் ஒழுகிச்செல்கின்றன

சண்முகம்