Tuesday, October 21, 2014

சூரியனின் வரவு




அன்புள்ள ஜெ

குந்தியுடன் சூரியன் உறவு கொண்ட காட்சியை மழைப்பாடலில் வாசித்துக்கொண்டிருந்தேன். சூரியபுத்திரன் என்பது  அற்புதமான ஒரு கற்பனை. நான் ஒடிசாவில் இருந்த போது அங்குள்ள மகாபாரதக் கவிதை ஒன்றில் இருந்த ஒரு வரியை ஒரு ஊழியர் ஒருநாள் என்னிடம் சொன்னார்

பூக்களை காலையில் முதலில் மலர வைப்பது சூரியனாம். அதைப்போல குந்தி என்கிற மலரை சூரியன் மலர வைத்தானாம். அதன்பிறகு மற்ற வண்டுகள் வருவதுபோல சூரியனுக்குப்பிறகு பிற தேவர்கள் வந்தார்களாம்

கலிங்கநாடு அது. சூரியனின் பூமி. சூரியனை அங்கே வழிபடுகிறார்கள். கர்ணன் அங்குள்ள எல்லா ஆட்டங்களிலும் உண்டு. ஆகவே நிறையக்கதைகள் அதிலே இந்தக்கதை எனக்கு மிகவும் மனதுக்குப்பிடித்தமானதாக இருந்தது. அருமையான கற்பனை இல்லையா?

மழைப்பாடலில் குந்தியிடம் சூரியன் வரும் இடம் அற்புதமாக உள்ளது. அது ஒரு இயற்கையான விஷயமாகவும் குந்தியின் மனப்பிரமையாகவும் இருந்தது. இயற்கையாக அப்படி ஒரு பச்சை வெளிச்சம் வரும் என பழைய மாலுமிக்கதைகளில் வாசித்தேன். அப்படி வந்தபோது சின்னப்பெண்ணின் மனம் அடைந்த மயக்கமாகவும் இருக்கலாம்

அல்லது சூரியன் உண்மையிலேயே வரும் விதமாகவும் அது இருக்கலாம். ஆனால் அந்த இடம் மிகவும் அழகாக இருந்தது. சூரியன் மண்ணில் இறங்குவது என்றால் நீரில்தானே இரங்க முடியும். நீர்நிறைந்த தடாகத்தில் இருந்து அவன் எழுந்து வரும் காட்சி கிராண்ட் ஆக இருந்தது. அருமையான கற்பனை

மூலமகாபாரதத்தில் சூரியன் நேரடியாக வந்ததுபோல உள்ளது என்று நினைக்கிறேன்

நீலகண்டன்

அன்புள்ள நீலகண்டன்

மூலமகாபாரதத்தில் சூரியன் ஒரு பிராமணன் வடிவில் மண்ணில் வந்தான் என்றுதான் உள்ளது.

ஜெ