Monday, October 20, 2014

பாண்டு -பலவீனனின் வன்மம்




ஜெ

மழைப்பாடலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே இணையத்தில் முழுமையாக வாசித்தது. ஆனால் அப்போது வாசிக்கவே இல்லையோ என்ற எண்ணத்தை அடைந்தேன். ஏனென்றால் இப்போது நான் வாசிக்கும் எதுவுமே அப்போது என் கண்ணிலே படவில்லை.

உதாரணமாக நான் பாண்டுவின் கதையை மிக எளிய ஒரு கதையாகக் கடந்து சென்றேன். கடைசியில் குழந்தைகள் பிறந்து பாண்டு ஒரு அருமையான தந்தையாக ஆனப்போதுதான் அவனை நான் கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்தேன்

ஆனால் இப்போது வாசிக்கும்போது பாண்டுவின் குணச்சித்திரம் பிரமிக்கவைக்கிறது. அவ்வளவும் நுட்பமாக அது அமைக்கபப்ட்டிருக்கிறது.பாண்டுவின் பிரச்சினை என்ன என்பதை எளிதாகச் சொல்லமுடியாது

உதாரணமாக இன்றைக்கு நான் வாசித்த ஒரு அத்தியாயத்திலேயே அவனுடைய தன்மை விதவிதமாக வருகிறது. இணைசேர்ந்த மானைக்கொன்றபோது உடலுறவின் கிளர்ச்சியை அடைந்தேன் என்று அவன் சொல்கிறான். அப்போது அவனுக்குள் ஆரோக்கியமான இயல்பான உலகத்தின் மீது இருக்கும் கடுமையான வன்மம் வெளிப்படுகிறது. அது இயல்பகாவும் இருக்கிறது

அவனுக்கு அரசியலில் அதிகாரத்தில் இருக்கும் கசப்பு நாவலில் வெளிப்படுகிறது.
விதுரன் “இந்தவகைப்பேச்சுக்களை நான் எண்ணுவதில்லை. இதிலென்ன இருக்கிறது? அரசியலாடல் என்றும் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. போர்கள் நிகழ்கின்றன. பல்லாயிரம் படைவீரர்கள் இறந்துவிழுகிறார்கள். பல்லாயிரம் விதவைகள் இருளறைகளுக்குள் சென்று அடங்குகிறார்கள்” என்றான். பாண்டு “நான் சொல்லியிருக்கிறேனே, நான் இன்னும் ஒரு நல்ல மதியூகி ஆகவில்லை. அரசியலும் கற்கவில்லை” என்றான்.

என்றபதிலில் விதுரன் மரணத்தைக்கூட இயல்பாக எடுத்துக்கொள்ளும் மதியூகியாகவும் மதியூகி என்பதையே இளக்காரமாகப்பார்ப்பவனாக பாண்டுவும் வருகிறார்கள்

அதேபோல காட்டுக்குச் செல்லுவதாக அம்பாலிகையிடம் போய் சொல்கிறான் பண்டு. அவள் அவன் காலிலே விழுந்து கதறுகிறா
 “அம்முடிவை எடுத்ததும் நேராக அவளிடம்தான் சென்றேன். உறுதியான குரலில் அவள் கண்களை நோக்கியபடி நான் வனம்புகவிருப்பதைச் சொன்னேன். அவள் முதலில் அச்சொற்களை அகத்தே வாங்காமல் எங்கே என்றாள். மீண்டும் சொன்னதும் அலறியபடி என் ஆடையைப்பற்றிக்கொண்டாள். அப்போது அவள் விழிகளில் எழுந்த வலியைக் கண்டேன். இறக்கும் மிருகங்களின் கண்களைப்போல. எனக்குள் உறைந்த பலவீனன் நிமிர்ந்து வானம் நோக்கிப் புன்னகைபுரிந்தான்.”

என்று அந்த மனநிலையை பாண்டு சொல்கிறான்.

சிலிர்க்கவைக்கும் இடம் இது. அந்தப்புன்னகையை கண்ணெதிரே கான்பதுபோல இருந்தத்

ஆனால் அச்சில் வாசிக்கும்போதுதான் இதெல்லாம் தெரிகிறது. கம்யூட்டரில் வாசிக்கும்போது ஒரு அவசரம்தான் இருக்கிறது

சண்முகம்