Saturday, November 15, 2014

பிரயாகை 23 ஏளனத்தின் இரண்டு முகம்


அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

பிரயாகை-23 வெண்முரசு கதையில், அதற்கும்மேலாக மகாபாரதக்கதையில் ஒரு பெரும் பெர்ம்முடா முக்கோணத்தில் கப்பல்ஓட்டி கப்பலை திருப்பி வந்து காட்டிய அதிசய நிகழ்ச்சி என்றும் சொல்லலாம் அல்லது மகாபாரதத்தின் ஒளியேற்ற முடியாத பெரும் இருண்டப்பாகத்தில் ஒளியேற்றி வைத்த நிகழ்வு என்றும் சொல்லலாம்.

சகுனி தனது சுயநலத்தால், தமக்கை காந்தாரிமீதுக்கொண்ட பாசத்தால், மருகன் துரியோதனுக்கு இளவரசுப்பட்டம் கிடைக்கவில்லை என்ற எளிய பொறாமையால், எளிய மானிட உணர்ச்சியால் ஆட்பட்டு பாண்டவர்களுக்கு தீங்கு இழைத்தான் என்று நினைத்து நினைத்து மகாபாரதத்தை உள்ளவாங்கிக்கொண்டு உள்ள எனக்கு சகுனியின் பெரும் மனவிரிவுத்தெரிகின்றது.

ஒரு பெரும் பாறை அர்த்தமே இல்லாமல் அதன் அடியில் நிற்பவர்களின் தலையில் விழுந்து நசுக்கிவிட்டது என்பது எத்தனை பெரிய பிழையோ அத்தனை பெரிய பிழைதான் சகுனி எளிய மனிதன்போன்ற சுயநலக்காரன் என்பதும். 

வெண்முரசில் காந்தாரி திருமண ஊர்வலம் நகர் நுழைந்த காட்சியும், சகுனி சீர் கொண்டுவரும் நகர் நுழைந்த காட்சியும் மழைப்பாடலில் விளக்கப்பட்டது ஆனால் குந்தியின் திருமணஊர்வலம் காட்டப்படவே இல்லை. இன்று தான் அதன் தாத்தபரியம் புரிகின்றது. வெளிச்சத்தில் வந்தவன் வாழ்க்கை இருட்டாகி விட்டது. இருட்டில் வந்தவள் வாழ்க்கை வெளிச்சமாகிவிட்டது. இந்த முரண்தான் வாழ்க்கையில் விதி எனப்படுகின்றது. வாழ்க்கையை கவிதையாக்குகின்றது. இந்த கவிதைத்தருணம் சிரிக்கவும் அழவும் காரணமான வாழ்வின் உச்சத்தருணமாகி விடுன்றது.  “இடுக்கண் வருங்கால் நகுக” என்ற வள்ளுவர் வாழ்வின் முரணின் மையத்தில் நின்று இதைச்சொல்கின்றார். உலகுக்கே வெளிச்சம் கொடுத்து உலகத்தையே காணவைக்கும் சூரியன் அஸ்தமிக்கும்போது எத்தனை எண்ணிறந்த விளக்குகள், விண்மீண்கள், நிலா தோன்றினாலும் தன்னைத்தான் காணமுடியாத இருளில் விழுந்துவிடுகின்றது. சூரியன் இருட்டில் என்ன நினைத்துக்கொள்ளும்?

பாரதவர்ஷத்தையே விடியவைத்துவிடலாம் என்ற நினைத்த சகுனி இன்று அஸ்தமித்தபோது சூரியன்போல் உள்ளான்.
//ஒளிமிக்க பல்லாயிரம் பந்தங்களுடன் வந்தவன் இருளில் திரும்பிச்சென்றான்// என்று சூதர்கள் பாடுவார்கள் என்ற சகுனியின் அகம் தெரியும் அதே நேரத்தில் அவன் வாழ்வின் சூரியனும், அது அஸ்தமித்த தருணமும் தெரியவருகின்றது.

இந்த சிக்கலான தருணத்தில் இதுவும் வாழ்வின் ஒரு அனுபவ தருணம் என்று அறிந்து, யாரையும் வசைப்பாடமல் ஏற்றுக்கொள்ளும் இடத்தில், தனது அக சமநிலையில் நிற்கும் சகுனி அவன் அக ஆழத்தை நம்மை ஆராயச்சொல்கின்றான். 
//சகுனிமருகனே, அரசு சூழ்பவன் ஒன்றை எப்போதும் அறிந்துகொண்டே இருப்பான். மானுடர் என்ற பேரில் பேருருவம் கொண்டு இப்புவியை நிறைத்திருக்கும் காமகுரோதமோகங்களின் பெருந்தொகையை. அதன் அளப்பரிய சிறுமையை. அதன் பெரும் சலிப்பை. பேராசையும் நன்றியின்மையும் கோழைத்தனமும் நிறைந்தது அது. எங்கும் தீயதையே நோக்கும். எதிலும் தன் சிறுமையையே பேருருவாக்கி கண்டுகொண்டிருக்கும்…”
துச்சாதனனின் பெருந்தோள்களில் மேலும் ஒருமுறை தட்டிஅவர்களை ஆள்பவன் வெல்கிறான். ஆட்படுபவன் அதனால் அவமதிக்கப்பட்டு அழிகிறான்என்றார் சகுனி. “அவர்களை வெறுப்பவன் அவர்களை வதைக்கத்தொடங்குவான். அவர்களை வழிபடுபவன் அவர்களால் ஆட்டிப்படைக்கப்படுவான். அவர்களை புரிந்துகொள். அவர்களிடமிருந்து விலகியே இருஎன்றார்// 
இந்த பெரும்ஞானமொழிகளை, வாழ்வியல் நுட்பங்களை சகுனியின் வாயினால் கேட்கும்போது நமது அகம் அசைந்து நெகிழ்ந்துவிடுகின்றது. அவன் பாதத்தை துரியோதனனும், துச்சாதனனும் வணங்கினார்கள் என்பதும், பீதமகர் பீஷ்மரே அவனை உரியையோடு, தருமன் இளவரசன் என்று அறிவுக்கும் இடத்தில் நீ இருக்கவேண்டும் என்பதும் எத்தனை பொருத்தமானது. வெறும் ஒற்றை உறவு முறைக்காக அவன் கொண்டாடப்படவில்லை என்பதும். சகுனி திரும்பி காந்தாரம் சென்றால் திரிதராஷ்டிரன் கண்ணீர் விட்டு அழுவான் என்பதும் வெறும் ஒப்புக்கு உரிய வார்த்தைகள் இல்லை என்பது நன்கு தெரிகின்றது. சகுனி மகாபாரதத்தின் எதிர் எண்ணங்களால் ஆன ஆளுமை உடைவன் இல்லை. நன்மை தீமை அணைத்தையும் சரியாக அறிந்து, எதை எங்கு செய்யவேண்டும் என்பதை அறிந்த ஞானம் உடையவனாகவே வெண்முரசில் மிளிர்கின்றான். நேர் எதிர் எண்ணங்களின் அசையா சமப்புள்ளியில் நிற்கின்றான் என்பதை இன்றைப்பதவுக்காட்டுகின்றது.
வெண்முரசில் சகுனி பாத்திரம் ஒரு அற்புத சிருஷ்டி. திரு.ஜெவின் கைவண்ணதிற்கு ஒரு மகுடம். 
திரு.ஜெ இந்த பதிவின் மையமாகக்கொண்ட ஏளனம் என்ற சொல், சகுனியின் கண்கொண்டு விளக்கப்படுவது அவன் பாத்திரத்தை உச்சத்திற்கு கொண்டு செல்லும் அதே நேரத்தில் வெண்முரசை மற்ற மகாபாரதத்தில் இருந்து உச்சத்திற்கு கொண்டு செல்கின்றது அதனால்தான் இந்த பகுதி பிரயாகை-23யை பெர்ம்முடா முக்கோணத்தில் இருந்து திரும்பி வந்த கப்பல் என்றேன். 
ஏளனம் என்ற சொல் அதற்கு உரிய இரண்டு முகங்களையும் இன்று காட்டுகின்றது. ஏளனம் என்பது பொதுவாக மற்றவரின் முன்னால் நம் அகம் வதைப்படுவது. மாற்றிக்கொள்ள முடியாத கழிவிரக்கம் கொள்ளும் தருணம் என்பதுதான் நாம் புரிந்து வைத்திருக்கும் ஒன்று. இதை தாங்கிக்கொள்ள மனதைப் பழக்கப் படுத்தக் கற்றுக்கொள்ளவேண்டும் அல்லது அதை மித்து கடந்து செல்லக்கற்றுக் கொள்ளவேண்டும்.
“நமக்கும் கீழே இருப்பர்கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு” என்பது தாங்கிக்கொள்ள சொல்வது.
“போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்பது கடந்துபோகச் சொல்வது.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று-என்று சொல்லும் வள்ளுவர். அறத்தை கூர் பார்க்கும் இடமாக பிறனபழிப்பது என்பதை வைக்கின்றார் என்றால் ஏளனம் மனித வாழ்க்கையில் அகம் தொடும் ஆழம் புரியும். வாள் வெட்டா ஆழத்தை வசை சென்று வெட்டுவதை அறிந்திருக்கின்றோம். வாழ்ந்து கெட்டக்குடும்பங்களில் ஆட்கள் வெளியேறிய பின் திறந்த தகவுகள் ஒரு காட்சியையும், வாழ்ந்துக்கெட்டக்குடும்பத்தின் ஆள்நடமாட்டம் உள்ள குடும்பத்தில் திறக்கப்படாத கதவுகள் ஒரு காட்சியையும் காட்டுகின்றன. திறந்த கதவையும், திறக்காத கதவையும் தட்டித்தட்டி அசைப்பது ஏளனம் மட்டுமே. 
ஏளனத்தில் விழும் தருணங்களையே கண்டும், கேட்டும் இருக்கும் நமக்கு இன்று ஜெ காட்டும் ஏளனம் வேறு ஒரு முகம் கொண்டது. ஏளனம்  தீண்டாதவனின் பெருமையைக்கண்டு மக்கள் அடையும் ஏளனம். மணலை அள்ளி விழுங்கிவிட வரும் அலை அலைகள் பாறைகளில் அறைந்து தாழ்ந்து திரும்புவதுபோல. காட்டையே தின்றுவிடும் தீ மலையை திங்கமுடியாமல் தனிவதுபோல, எளியமனிதர்களின் ஏளனம் ஏமாற்றத்தில் விழும் கணம். தோல்வி அடைந்தாலும் அந்த ஏளனம் மட்டும் ஒரு பொருளாகி நிற்கும் கணம். . அரிசந்திரன் முன்பு இந்த உலகம் கொள்ளும் ஏளனம். மகாத்மா காந்தியின் முன்பு இந்த உலகம் கொள்ளும் ஏளனம். ”கோட்டி(சிறுகதை)”முன் இந்த சமூகம் கொள்ளும் ஏளனம். செல்லம்மாள் கடன் வாங்கி கஞ்சிக்காச்ச வைத்திருந்த அரிசியை குருவிகளுக்கு போட்டு ரசிக்கும் பாரதியை கண்டு சமூகம் கொள்ளும் ஏளனம். சுதேசிக்கப்பலை ஓட்டி அதற்காக செக்கும் இழுத்த வ.உ.சியைக்கண்டு நீதிக்கற்றவர்கள் கொண்ட ஏளனம். இன்றுகூட வெண்முரசு எழுதுவதற்காக திரு.ஜெவுக்கு வரும் வசைகள்,   எல்லாம் ஏளனத்தின் இன்னொரு முகம். பாறையை திங்கமுடியாத தீ ஸ்தம்பிக்கும் தருணம். 
ஏளனத்தின் இன்னொரு முகத்தை நுட்பமாக செதுக்கி கதையை அழியா ஒளிவெளியில் கொண்டு சென்று நிறுத்துக்கின்றார் ஜெ. 
தங்களிடம் உள்ள ஏளனத்தை ஏளனம் இல்லாதவர்கள்மீது ஏத்துவதால், ஏளனம் இல்லாதவர்களை தங்கள் காலுக்கு கீழாக இந்த சமூகம் பார்க்க நினைக்கின்றது. ஒரு மலை மண்ணாகிவிடுவதுபோல. இந்த தருணத்தில் திரிதராஷ்டிரன், துரியோதனன், சகுனி ஆகியவர்களின் அசைவின்மை காட்டியதோடு இல்லாதமல், மக்களின் மனதில் உள்ள ஏளனம் செயல்படமுடியாமல் போனதை காட்டும் இடத்தில் ஜெவின் நுட்பத்தை பார்க்கும்போது திரு.ஜெ வாழ்க என்று கோஷமிட தோன்றுகின்றது. ஜெ வாழ்க!
//அவர்கள் முகத்தில் முதலில் இருந்தது ஒருவகை எரிச்சல், ஆற்றாமை. பின் அது ஏளனமாக ஆகியது. பல்லாயிரம் முகங்கள் சேர்ந்து உருவாகி வந்த அந்த விராடமுகம் கொள்ளும் மெய்ப்பாடுகள் சகுனியை அச்சம் கொள்ளச்செய்தன. அதன் ஏளனம் வெயில்போல, மழைபோல ஒரு பருவடிவ நிகழ்வாக அக்கூடத்திற்குள் நிறைந்து நின்றது. கணம் தோறும் அது வளர்ந்தது. மேகங்கள் மலைத்தொடர்களாக உருவெடுப்பதுபோல. அதன்முன் சிற்றெறும்பாக அணுவடிவம் கொண்டு நின்றிருப்பதாகத் தோன்றியது// 
//அஸ்தினபுரியை இருளில் கடக்கவேண்டும் என்பது சகுனியின் திட்டமாக இருந்தது. அது ஏன் என அவர் அகம் உணர்ந்திருந்தது. அந்தத் தன்னுணர்வு அவரை கூசவும் வைத்தது. அஸ்தினபுரியின் மக்களின் விழிகளில் நிறைந்திருந்த ஏளனத்தை அவர் அஞ்சினார். அந்த ஏளனம் கழுத்தைத் தொட்ட கூர்வாள் முனைபோல எப்போதும் உடனிருந்தது// 
வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் என்பது இதுதானா? சகுனி இந்த ஏளனத்தை தீர்த்துக்கொள்ள ஆடும் ஆட்டம்தான் இனிவரும் மகாபாரதமா? சிற்றெறும்பாக அணுவடிவாக நிற்கும், இருளில் பயணப்பட நினைக்கும் சகுனியின் அகம், அகங்காரம் காணும் மறுமுனைதான் இனிவரும் ஆடலா? 
வஞ்சத்தை வஞ்சத்தால் அழிக்க நினைக்கும் துருபதன் ஒரு புறம், ஏளனத்தை ஏளனத்தால் சரிகட்ட நினைக்கும் சகுனி ஒருபுறம். 
என் எதிரிதான் நான் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறான் என்பதை நினைத்துக்கொண்டு சகுனியைப்பார்த்தால் நாளைப்பாண்டவர்கள் படும் ஏளனம். தரசுத்தட்டு இந்த இடத்தில் அசைய மறுக்கின்றது. 
ஏளனம் ஏளனமாகா திரண்டு நிற்றல்  ஒருபுறம், ஏளனமாகதவர்களுக்கு எதிராக ஏளனம் திரண்டு நிற்கும் மறுபுறம். எதையும் துள்ளியமாக அளக்க ஜெவால் மட்டும்தான் முடியும் என்று முக்கியமான இடத்தில் நிறுத்திக்காட்டுகின்றார்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.