Thursday, November 20, 2014

பிரயாகை-27-தன்னந்தனித்தவம்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

நம்மைப்போலவே இருக்கும் ஒருவர்மீது நமக்கு அன்பு ஏற்பட்டுவிடுகின்றது. அந்த “நம்மைபோல“ என்ற சொல்  உடம்பு போலவும் இருக்கலாம். உள்ளம் போலவும் இருக்கலாம்.

தெரிந்தோ தெரியாமலே நாம் அனைவரும் யார்போலாவது இருக்க முயற்சி செய்கின்றோம் அல்லது யார்போலவது இருப்பதுபோல் நம்புகின்றோம். ஏன் இந்த “போலாவது” என்ற நினைவு. உவமை கொண்டு ஒன்றை புரிந்துக்கொள்வதுபோல அந்த யார்போலவது என்பவரைக்கொண்டு நாம்மை நாமே புரிந்துக்கொள்கின்றோம். புரிந்துக்கொள்ள முடியாவிட்டாலும் நாம் தனியனல்ல என்ற நம்பிக்கை வருகின்றது. எத்தனை மனிதர்கள் உடன் கூடி வாழ்ந்தாலும் நமக்குள் ஏற்படும் அந்த தனிமையை விரட்ட அந்த “போலாவது” பயன்படுகின்றது.

துருபதன் தனது வாழ்வில் அடைந்த பெரிய இடியால் எத்தனை பெரிய தனிமையை உணர்ந்தான் என்பதை அறிந்திருந்தோம். அந்த தனிமையில் இருந்து அவன் மீண்டப்பின்பு சகுனியை தன்னை போன்றவர் என்று உணர்வது எத்தனை பெரிய அகத்தின் ஆவல். //இந்த பாரதவர்ஷத்தில் எனக்கு மிக அருகே இருக்கும் மனிதர் அவரே// என்ற துருபதனின் வார்த்தையில் தான் தனியன் இல்லை என்பதை அறிய முடிகின்றது. 

ஒத்த எண்ணங்கள் ஒன்றை ஒன்றுத்தேடித்தேடி இணைந்துக்கொண்டு பெரும் வலையாக ஆகின்றன. காலம்வரும்போது அது இலக்குமீது வீசப்பட்டு பறந்துச்செல்லமுடியாமல் சிறைப்பிடிக்கப்படுகின்றது. நஞ்சு வலைகள் சிறையாகின்றன. அமுதவலைகள் கூடாகின்றன.

வஞ்சினத்தில் விழுந்து தவிக்கும் துருபதனும், ஏளத்தில் விழுந்து தவிக்கும் சகுனியும் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார்கள். ஆனால் இருவரும் பாண்டவர்களை நோக்கி வீசும் வலையை நெய்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சகுனி பகடையை பழக்கிக்கொண்டு இருக்கிறான் என்பதும். துருபதன் மீண்டும் படைக்கலப்பயிற்சி செய்கிறான் என்பதும், மகளின் வளர்ச்சியில் மகிழ்ந்தும், அவளை குலதெய்வமாக கொண்டும் வாழ்கிறான் என்பது எல்லாம் ஒரே இலக்கை நோக்கி இருவரின் ஒரே பயணத்தை காட்டுகின்றது.

வெற்றிப்பெற்றவன் எங்கோ ஒரு இலக்கை நோக்கி செல்கின்றான். வெற்றிப்பெற்றவனை நோக்கி இருவர் இருபதையின் வழியாக எதிரியாக வருகின்றார்கள். வாழ்க்கை எத்தனை பெரிய ஆபத்தின் வழியாக பயணம் செய்து கொண்டு இருக்கின்றது.

வெண்முரசில்  வசகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தை எதிர்ப்பார்த்து காத்து இருக்கின்றார்கள். நான் தருமன் பிறப்பிற்காகவும், அன்னை பாஞ்சாலியின் பிறப்பிற்காக காத்து இருந்தேன்.  

எல்லாவற்றையும் சொல்லாக்கிவிடும் தருமனும், தருமனையே சொல்லாக்கும் பாஞ்சாலியும் ஒரு கோட்டின் இருமுணைகள், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரு தெய்வத்தின் வலமும் இடமும், ஒரு உலகின் மண்ணும் விண்ணும் இவர்கள் எப்படி சமமாவார்கள் என்ற வியப்பின் ஈர்ப்பில் தத்தளித்தேன்.

தருமன் பிறந்தபின்பு சக்கரவர்த்தியாவதற்காகவே பிறந்தவன் என்று குந்தி நினைப்பதும். துருபதன் நிமித்திகரின் வார்த்தையை தனது நினைவில் ஓட்டிப்பார்ப்பதும் களிகொள்ள வைக்கின்றது.சக்கரவர்த்தினியாக ஆனவர்கள் உண்டு. சக்கரவர்த்தினியாகவே பிறந்தவள் இவள்என்றார் நிமித்திகரான சோணர்.

வாளுக்கு முன்னால் வாள் வைத்து வெல்லாம்,  பீரங்கிக்கு முன்னால் பீரங்கி வைத்து வெல்லலாம். புன்னகைக்கு முன்னால் புன்னைகை அன்றி வேறு எதை வைக்க முடியும். ஆனாலும் புன்னகைக்கு முன்னால் வெல்லமுடியும் என்று சொல் சக்கி இல்லை.
//ஒருபோதும் அவள் ஓடுவதை அவர் பார்த்ததில்லை. அவளுடைய ஓங்கிய குரலை கேட்டதில்லை. கைக்குழந்தையாக இருக்கையில்கூட அவள் வீரிட்டு அழுததில்லை. பசிக்கையிலோ ஈரமாகும்போதோ இருமுறை மெல்லச் சிணுங்குவாள். அது ஓர் ஆணை. அக்கணமே அது நிறைவேற்றப்பட்டாகவேண்டும். இல்லையேல் சினம் கொண்டு கரியில் கனல் ஏறுவதுபோல சிவந்து கைகளை ஆட்டி மேலும் அழுத்தமாக குரலெழுப்புவாள். “சக்கரவர்த்தினியாக ஆனவர்கள் உண்டு. சக்கரவர்த்தினியாகவே பிறந்தவள் இவள்என்றார் நிமித்திகரான சோணர்.
கைக்குழந்தையின் நோக்கில் கூர்மை குடிகொள்ளமுடியும் என்பதை அவர் அவளிடம்தான் கண்டார். அவரை அறிந்தபின்னர் காலடியோசை கேட்டு தொட்டிலில் திரும்பி அவரை நோக்கி ஒருமுறை கைகால்களை அசைப்பாள். இதழ்கள் விரிந்து கன்னத்தில் ஒரு மென்மடிப்பு விழும். கண்களில் ஒளி மின்னும், அவ்வளவுதான். துள்ளுவதில்லை. கைநீட்டி எம்புவதில்லை. அவர் அவளை அள்ளி எடுத்து முகத்தோடு சேர்த்து முத்தாடுகையில் தலைமேல் வைத்து நடமிடும்போது கைகளை விரித்து மெல்ல அசைவாள். சிறிய சிரிப்பொலி எழுப்புவாள். எந்நிலையிலும் அவள் தன்னை மறந்து கூவி விடுவதில்லை. அவளிடமிருந்து எதுவுமே நழுவுவதும் சிந்துவதும் தெறிப்பதும் இல்லை.
திடமாகக் கையெடுத்துவைத்து கவிழ்ந்தாள். உறுதியான கால்களுடன் எழுந்து நடந்தாள். அமர்ந்த அக்கணமே கையில் மரப்பாவையை ஏந்தி அன்னையென அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் கண்ட கருணையைக் கண்டு துருபதன்அன்னையே!” என்று கைகூப்பினார். “புடவியைப்புரக்கும் பேரருள் தன்னை அன்னையென்று காட்டி நம்மை வாழ்த்துகிறது அரசேஎன்றார் சித்ரகர்.// இப்படி படைக்கப்பட்ட பாஞ்சாலியை எப்படி வெல்வது. தருமத்தின் மென்மைபோல அவளும் மென்மையின் மென்மை. தருமத்தின் கூர்போல அவளுக்குள் உள்ள கூரும் அகம் அஞ்ச வைக்கிறது.
அவளிடமிருந்து எதுவுமே நழுவுவதும் சிந்துவதும் தெறிப்பதும் இல்லை. ஜெவுக்கு யார் இந்த வார்த்தைகளை அள்ளித்தருகின்றார்கள். தமிழ் அன்னை புன்னகைத்து புன்னகைத்து தன் முத்துக்களை மென்மையாக்கி பரிசளிக்கின்றாளோ? மூன்று வார்த்தைகளில் நெஞ்சத்தை அள்ளும் பாஞ்சாலியை படைப்பார் என்று நினைக்கவே இல்லை. உள்ளம் உருகுகின்றது. துருபதன்போல “அன்னையே” என்று பாஞ்சாலியின் பாதம் தலையில் வைக்க துடிக்கின்றேன். 
என்ன ஒரு தவம் செய்திருப்பான் இந்த துருபதன்? இப்படி ஒரு பெண்ணை பெருவதற்காக அர்ஜுனன் அவனை இன்னும் ஐந்தாறு முறை தேர்க்காளில் கட்டி இழுத்தாலும் தெய்வங்கள் புன்னகைக்குமோ? ஸதியைப்பெற்ற தட்சன்போல இவனும்தான் எத்தனை கர்வம் கொள்ளமுடியும். தட்சன் நெஞ்சில் நிறைந்த காதலால் ஸதியைப்பெற்றான் என்றால், நெஞ்சில் நிறைந்த வஞ்சத்தால் துருபதன் பாஞ்சாலியைப்பெருகின்றான். அழகும், அறிவும் கொண்ட பெண்ணைப்பெற்ற தந்தை எல்லாம் மருமகனை எதிரியாகவே நினைக்கும் கொடுமையை காலம் படைத்து வைத்திருக்கின்றதோ?
“தந்தையே எந்தப் பேரன்பின்பொருட்டும் அரசன் அறம் மீறலாகாது.” என்ற பாஞ்சாலி சிலம்பும், இடையணியும்,கைவளையும் அணிந்த தருமன்போலவே தெரிகின்றாள். அப்படி படைத்த ஜெவை வணங்குகின்றேன்.

//மெல்ல நடந்து வந்து பட்டுப்பாவாடையை இடக்கையால் பற்றி ஒதுக்கி வலக்கையால் நீண்ட கூந்தலை எடுத்து முன்னால் கொண்டுவந்து தொடைமேல் போட்டுக்கொண்டு பீடத்தில் அமர்ந்தாள். இளமையிலேயே அவளுடைய கூந்தல் கன்னங்கரிய நீரோடை போல ஒளியுடன் பெருகி தொடைகளை எட்டியிருந்தது. கூடவே வாழும் கருநாகத்தை கொஞ்சுவதுபோல அவள் அதைத் தொட்டு வருடிக்கொண்டிருப்பாள்// ஜெவின் பாத்திரப்படைப்பில் இந்த வரிகளில் பாஞ்சாலியை, நாகக்குடை நிழலில் ஊர்காக்கும் ஊர்க்காவல் தெய்வமாகவே காண்கின்றேன்.
துருபதனின் விழிகளில் எந்த மாற்றமும் தெரிவதில்லை, ஒன்றும் சொல்வதில்லை, முகத்தில் எந்த அசைவும் இல்லை என்று சொல்லிக்கொண்டு வந்த ஜெ பாஞ்சாலியின் சிலம்பொலியை செவி கூர்ந்தார் என்பதில் அவரின் தவம் தெரிய வைக்கின்றார். அந்த சிலம்பின் மெல்லிய ஒலியை மந்திர ஒலி என்று நமக்குள் கேட்க வைக்கின்றார். //சிலபோது அவளுக்கு முலைகளும் விரிந்தகைகளும் இருப்பதாக அவர் எண்ணிக்கொள்வதுண்டு//  துருபதனின் தெய்வ தரிசனத்தைக்காட்டுகின்றார்.  

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யப்பட்டும்
பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இதுபோலும் தவம் இல்லையே-இந்த அபிராமி அந்தாதிப்பாடல் துருபதனுக்காக எழுதப்பட்டதோ? துருபதன் இருந்த தன்னந்தனித் தவத்தை சொல்கின்றதோ?

துருபதன் தன்னந்தனி தவத்தால் விளைந்த பாஞ்சாலி அன்னையே வாழ்க!

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.