Thursday, November 13, 2014

பிடிக்காதவருடைய கடிதம்



அன்புள்ள ஜெ,

 நான் சாருவின் தீவிர வாசகன். சாரு என் ஆசான். என் வாழ்க்கைமுறையை மாற்றி அமைத்தவர். அவருக்கு இதுவரை ஒரு கடிதம் கூட எழுதியதில்லை.

உங்களை எனக்கு பிடிக்காது. உங்கள் மொழியில் சொல்வதென்றால் 'விளங்க முடியா விருப்புகளாலும் புரிந்துகொள்ளவே முடியாத வெறுப்புகளாலும் நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை'.

உங்களது ஊமைச் செந்நாயும், யானை டாக்டரும் எனக்கு பிடித்த சிறுகதைகள். காடு நாவல் அவ்வளவாக பிடிக்கவில்லை. உங்கள் எழுத்தில் உள்ள பகடி மிகவும் பிடிக்கும்.

 கருணாநிதியை பிடிக்காதவர்கள் கூட அவரது உழைப்புக்கு தலை வணங்குவார்கள். பலரும் சொல்வது போல் நீங்கள் ஒரு எழுத்து ராட்ஸசன். வெண்முரசு தொடரெல்லாம் மனிதரால் எழுத முடியாது. உங்களது உழைப்புக்கு தலை வணங்குகிறேன். பிரயாகை தொடரை முதலிலிருந்து படித்து வருகிறேன். இன்று எழுதிய சகுனியும் ஓநாயும் பாகம் கிளாசிக். அதை எழுதிய உங்களது கையில் முத்தமிடுகிறேன்...

அன்புடன்,
சரவணன்


அன்புள்ள சரவணன்

நன்றி

வெண்முரசை வாசிக்கையில் நீங்கள்  ஒன்றை உணரமுடியும். இலக்கியத்தை நாம்தான் பல்வேறு வழிகளாகப் பிரித்துக் கொள்கிறோம். இலக்கியம் ஒன்றே. குறிப்பாக செவ்வியல் என்பது அனைத்துவகை அழகியல்களையும் ஒன்றாக்கியது. அதில் மிகைக் கற்பனை முதல் யதார்த்தவாதம் வரை குரூர அழகியல் முதல் மெல்லழகியல் வரை இருக்கும்

வாசியுங்கள். மீண்டும் உரையாடுவோம்

ஜெ