Friday, November 28, 2014

அந்தச் சிட்டு




அன்புள்ள ஜெயமோகன்,

ஒவ்வொரு நாளும் அன்றாடப் பணிகள் காரணமாக‌ மதிய இடைவேளையில் வெண்முரசு
வாசிப்பதே என் வழக்கம். சிலசமயங்களில் மாலைக்குப் பிறகுகூட
வாசித்திருக்கிறேன். இன்றைய பகுதியைப் படித்தபிறகு உடனே உங்களுக்கு
எழுதவேண்டுமென்று கை பரபரத்தது. ஆனால் கிருஷ்ணன் வருகை குறித்து
விடியுமுன்பே படித்துவிட்டு சண்முகமும் கடலூர் சீனுவும் எழுதியதைப்
பார்த்தபிறகு சோர்ந்து உட்கார்ந்துவிட்டேன்.

நிற்க, இன்றைய அத்தியாயத்தில் "சிட்டுக்குருவியின் விரைவை யானையிடம்
எதிர்பார்க்கமுடியாது" என்கிறான் தருமன். யானையாக இருப்பதினாலேயே
சிட்டுக்குருவியின் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் அஸ்தினபுரி
திண்டாடுகிறது போலும். ஒரு சிறு குருவி போதும், அதை மன அழுத்தம்
கொள்ளச்செய்ய. பறவையின் ஒலிகள் அனைத்தையும் தவிர்த்துவிட்டு அரசுசூழவே
அது விரும்புகிறது. சில எளிய முறைமைகளாலும் வாதங்களாலும் அதை
நியாயப்படுத்தவும் முயல்கிறது.

ஆனால் கிருஷ்ணனோ அதைப் புரிந்துகொள்ள முயல்கிறான். வெளியேற்றுவதில்
பயனில்லை, அது மீண்டும் வழியறிந்து உள்ளே வரவே செய்யும் என்கிறான்.
சிட்டின் பெயர் வஜ்ரமுகி, அடடா! கிருஷ்ணனையே நினைத்துப் பெயரிட்டது
போலிருக்கிறது. நாடிழந்து துரத்தப்பட்ட சிட்டுக்களின் அரசி வஜ்ரமுகம்
கொண்டவளாக அல்லவா இருக்கவேண்டும்? கிருஷ்ணன் அந்தச் சிக்கலுக்களிக்கும்
தீர்வு சரியான சமரசம். அத்தகைய தீர்வை அளிக்குமளவுக்கு அஸ்தினபுர யானை
இன்னும் மேலெழவில்லை போல.

நினைக்க நினைக்க விரிந்துகொண்டே செல்கிறது. கிருஷ்ணனின் வருகை மீண்டும்
குருவி வழியாகவே நிகழ்ந்திருக்கிறது இல்லையா? இந்தச் சிறுகுருவியும்
காவியப்பாத்திரங்க‌ளுள் ஒன்றுதானோ?

அன்புடன்,
த.திருமூலநாதன்.


அன்புள்ள திருமூலநாதன்

அந்தச் சிட்டு மூலநூலில் இல்லை. அது ஒரு நவீன படிமம்.

அது வந்துகொண்டேதான் இருக்கிறது அர்ஜுனன் சதசிருங்கம் விட்டு வரும்போதே அவன் உணர்வது பறவைகளின் உலகை அல்லவா?

ஜெ



ஆம் ஜெ அதைத் தவறவிட்டுவிட்டேன். பாண்டவர் ஐவரும் ஐந்து வகையான பாதைகளில்நடந்தபோது தருமன் ஒலியாலான பாதையில் நடந்துவந்ததை இப்போது மீண்டும்பார்த்தேன். இன்றைய‌ அத்தியாயத்தை இப்போது இன்னும்
விரித்துக்கொள்ளமுடிகிறது.

சிட்டு படிமமாக வருவது எனக்குப் புரிந்தது. ஆனாலும் முன்பு நீலத்தில்
கிருஷ்ணன் கம்சனின் அரண்மனைக்குள் சிறுநீலக்குருவியாக வந்ததுபோலவே
இப்போதும் வருவதால் அந்தக் குருவியும் ஒரு பாத்திரமாக ஆகிவிட்டதோ என்று
எழுதியிருந்தேன்.
திருமூலநாதன்