Friday, November 21, 2014

மானுடச்சதுரங்கம்

இனிய ஜெயம், 

மற்றொரு மனிதனின் உளவியல் அசைவை அறிந்து அரண்மனைக்குள் ஒவ்வொருவரும் காய் நகர்த்துவது, ஒரு பிரும்மாண்ட சதுரங்கப் பலகை ஒன்றின் முன் அமர்ந்து சிக்கலானான அசைவு ஒன்றை கடக்க அடுத்த கட்ட நகர்வை யோசிப்பது போல  அகத்துக்கு ஒரே சமயம் பரவசமும் தினவும் அளிக்கும் அனுபவமாக இருக்கிறது.

“நல்லவர்கள் பிறரை நம்புகிறார்கள். ஆகவே அவர்கள் பிறரை கூர்ந்துநோக்குவதில்லை. ஆகவே பிறரை அவர்கள் அறிவதுமில்லை. தீயவர்கள் பிறரை அணுவணுவாக கூர்ந்து நோக்கி அறிந்துகொண்டிருக்கிறார்கள். நம்மை நன்கறிந்த ஒருவர் நாம் அவரை சற்றும் அறியாமலிருக்கையில் மிக எளிதாக நம் அகத்தை மாற்றிவிடமுடியும். அரசருக்கு இப்போது அதுவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது”

இந்த வரி என்னை அட என யோசிக்க வைத்தது. மனித அக அசைவு அனைத்தையும் சீட்டுக்கட்டு எண்ணைகளை யூகிப்பது போல ஒரு வரிசையில் நிறுத்திவிடலாம் போல என நினைத்து முடித்த அடுத்த பத்தியிலே அடுத்த வரி வருகிறது. 'மனித அகத்தை கணித்தல் வெட்ட வெளியின் தீபம் எந்த திசையில் அசையும் அன்பதை கணிப்பது போன்றது ' 

நாவலின் மற்றொரு முக்கிய அம்சம் கணிகனின் வருகை. இந்த நாவலுக்குள் அனைவருக்கும் எதோ ஒரு வகையில் ஹச்தினாபுரியுடன்  வாளும் கூர்மையும் போல ஒரு தொடர்பு இருக்கிறது. ஆனால் இந்த கணிகன் யார்?  ருஷ்ய அரச குடும்பத்தை ஆட்டிவைத்த ரஸ்கின் போல, இவனுக்கும் குரு வம்சத்துக்கும் என்ன சம்பந்தம்?  

கணிகனுக்கு இந்தக் களம் தனது கோணல் புத்தியின் ஆற்றல்களை  சொத்தித்துப் பார்க்கும் ஒரு உறைகல் மட்டுமே. நாவலுக்குள் இயங்கும் மனித மன கொடூர வெளிப்பாடுகளின் உச்சம் இதுவே என்று படுகிறது.

விதுரனின் மனைவி சுருதை மற்றொரு அற்ப்புதம். திருதுறாஸ்ட்ரர்  மனதில் விதைக்கப்பட்ட பொறாமை எனும் எதிர் அம்சாத்தை, அதன் குணத்தை நேர் நிலை அம்சமாக  அவள் மாற்றி அமைக்க முயல்வது  சுவை. 

ஒரு ஆற்றலின் பலவீனம் எதுவோ அதையே பலமாக மாற்றுவது.  பிரயாகை எனும் உளவியல் சதுரங்கத்தின் அத்தனை அசைவும் ஒன்றுக்கு ஒன்று பிணைந்து  மீள இயலா பிரமிப்பை அளிக்கிறது.

கடலூர் சீனு