Saturday, February 14, 2015

நீர்விளையாட்டு



ஜெ,

பீமனும் திரௌபதியும் கொள்ளும் உறவை அற்புதமாகச் சித்தரித்திருந்தீர்கள். அது ஒரு பெரிய லீலை. அவன் மார்பில் அவள் உதைத்து உதைத்து எழும் சித்திரம் மனசிலேயே நிற்கிறது. அதைப்புரிந்து கொள்வது மிகவும் கடினம். அவன் அவளை தன் மார்பிலே வைத்திருக்கிறான் என்றும் கொள்ளலாம். அவர்கள் இருவரும் நீந்தி திளைக்கிறார்கள். அவர்களின் அந்த கங்கையே ஒரு பெரிய குறியீடுபோல இருந்தது. கண்ணுக்குத்தெரியாத கருமையான பிரவாகம் அது இல்லையா?

அவர்கள் ஆடும் நீராட்டை பலமுறை வாசித்துக்கொண்டிருந்தேன். வான்மீகி ராமாயணத்தில் சீதையும் ராமனும் ஒரு சுனையில் ஜலகிரீடை செய்த காட்சி வருகிறது. அது அவர்களின் காதலின் குறியீடாக அமைந்திருக்கும். இது இவர்களின் காமத்தின் குறியீடாக அமைந்திருக்கிறது. அது இரண்டுபேரையுமே அள்ளிக்கொண்டு செல்கிறது. இரண்டுபேருமே அதில் மூழ்கித்திளைத்து கொண்டாடுகிறார்கள்

பீமனின் இயல்பும் அற்புதமாக இருந்தது. அவன் அவளுக்கு நீச்சல் சொல்லிக்கொடுக்கவில்லை. நீந்தவைக்கிறான். அவளும் அவனுக்கு காமத்தைக் கற்றுக்கொடுக்கவில்லை. கூடவே நீந்துகிறாள். கூடவே அவர்கள் சொல்லிக்கொள்ளும் குறைந்த சொற்களும் அழகாக இருந்தன

சண்முகம்