Tuesday, February 10, 2015

அடங்கும் கணங்கள்



ஜெ,


தருமன் பாஞ்சாலி முதலிரவுக்காட்சியை எப்படி எழுதுவீர்கள் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். வெண்முரசில் முதலிரவுக்காட்சிகளையே தனியாக எடுத்துவைக்கலாம். பலவகையானவை.திருதராஷ்டிரந் காந்தாரி முதலிரவு என்பது பெண் ஆணுக்கு சமர்ப்பணம் செய்வது. பாண்டு குந்தி முதலிரவுக்காட்சி என்பது ஒரு பெண் கணவனை அம்மாவாக நின்று ஏற்றுக்கொள்வது. விதுரர்- சுருதை முதலிரவுக்காட்சி என்பது கணவன் உள்ளத்தில் ஒரு இடத்தை பெண் கண்டடைவது

இதில் தருமன் மனைவிக்கு தண்ணீர் கொண்டு கொடுத்து பணிவிடை செய்கிறான். அவளும் கம்பீரமாக அதை வாங்கிக்கொள்கிறாள். அவன் கைகளை அவள்தான் முதலில் பிடிக்கிறாள். காமத்தையே அவள்தான் அவனுக்குச் சொல்லிக்கொடுக்கிறாள். ஒரு juvenile ஆணுக்கு முதிர்ச்சியானபெண் காமத்தைச் சொல்லிக்கொடுப்பதுபோல அது இருந்தது

நுட்பமான உணர்ச்சிகள் வழியாக செல்கிறது. அவனுடைய numbness பல இடங்களில் அற்புதமாகச் சொலப்பட்டிருந்தது. அவள் தன்னை விழுங்கிவிடுவாள் என்ற எண்ணம். அதிலுள்ள கவற்சி எல்லாமே. அவர்கள் நடுவே உள்ள உரையாடல்கள் நுட்பமானவை. அவளுக்குத்தெரியும் அவனுடைய மனதில் என்னென்ன கதைகளெல்லாம் ஓடுகின்றன என்பது. அவன் அவளிடம் ஒன்றையுமே ஒளிக்க முடியாது.

சம்பத்குமார்