Saturday, March 14, 2015

வெண்முகில் நகரம்-37-மணிபூரக நாயகி




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

இந்த பூமி மிகமிக அற்புதமானது. தேவர்களுக்கும் கிடைக்காத ஒன்று. மகாவிஷ்ணு, பிர்மா, இந்திரன் மற்றும் மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும் சான்றோரும் மீண்டும் பூமிக்கு வந்து கர்ம, ஞான, பக்தி மார்க்கத்தால் இறைதரிசனம் பெற்று மீண்டும் அவர்கள் அவர்கள் இடத்திற்கு செல்கின்றார்கள். இத்தனை அற்புதம் நிரம்பிய ஒரு செயற்களம் பூமி. ஒவ்வொரு செயலையும் ஒரு யுத்தமாக கொண்டால் மிகபெரிய யுத்தக்களம் பூமி. ஒரு கணம்கூட யுத்தம் முடிவடையாத போர்க்களம் பூமி. போர் என்று தெரியாமலே போரில் இருக்கின்றோம். 

பூமியில் சின்னச்சின்ன யுத்தத்தில் தொடங்கி பெரிய பெரிய யுத்தம்வரையும் மிககொடுமையானதாகத்தான் இருக்கிறது. மாற்றியோசித்துப்பார்த்தால் பெரிய பெரிய இன்பத்தின் ஒரு சின்னச்சின்ன துன்பம்தான் பூமியில் உள்ளது. சுனாமி பெரும்கொடூரமானதுதான் ஆனால் சுனாமிப்போன்ற ஒரு அலையில் சிக்கி நீந்தும் ஒரு அனுபவம் என்பது இயற்கை அன்றி யார்வழங்க முடியும். தீபத்தின் சுடரை தூண்டிவிடும்போது விரல்நுனி சுடுப்படும்போது தோன்றும் வலியும் சுகஅனுபவமும் அக்கினி குழியல் விழும்போது ஒவ்வொரு செல்லும் அனுபவிக்கும் விந்தையை விவரிக்க யாரால் முடியும். பெரும் அனுபவங்கள் இயற்கையால் எதிர்பாராமல் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கிறது. இன்று கர்ணன் போருக்கு சென்றதும் பெற்ற அனுபவமும் இயற்கையால் கட்டமைக்கப்பட்டதுதான். இது  நடக்கவேண்டும் என்று அது முடிவுசெய்கின்றது. அதை நடத்துபவன் முடிவு செய்யவதால் அது நடப்பதுஇல்லை. அவனைக்கொண்டு அது நடத்திக்கொள்கின்றது. 

காம்பில்யத்தை நோக்கி செல்லும் அஸ்தினபுரியின் படைகள் நெருப்பின் இடையில் செல்வதும் வெல்வதும் இறப்பதும் என்பது இயற்கையின் ஒரு தாண்டவம் அல்லது இயற்கையின் ஒரு யோக அனுபவம். இந்த அனுபங்களை தனிமனிதனாக செய்யமுடியாது அப்படி செய்தாலும் அந்த அனுவங்களை அனுபவிக்க முடியாது, மனம் வேறு ஒரு தளத்தில் சென்று நி்னறுவிடும் தனித்து நின்றுவிடும். அப்படி நடக்காமல் இருக்கவே அந்த அனுபவத்தில் மனம் இருக்கும்படி இயற்கை இதை எல்லாம் செய்கின்றது. இப்படி நடக்கும் போரில் இயற்கையே இதை எழுதி நடத்தி நடந்து செல்கிறது. உயிர் உள்ள மனிதர்கள் எல்லாம் இயற்கையின் பிடியில் தோல்பாவையாக ஆடி மகிழ்கின்றார்கள். வெல்வதும் தோற்பதும் அங்கு ஒன்றாகத்தான் இருக்கிறது. வென்றவன் தோற்றவன் என்பது எல்லாம் கோட்டுக்கு வெளியில் நின்றுப்பார்ப்பவர்களுக்குதான். கோட்டிற்கு உள்ளே உள்ள அனைவரும் ஒரே வெளியில்தான் இருக்கிறார்கள். ஒன்றுபோல இருக்கிறார்கள். ஒன்றையே உணர்கின்றார்கள் ஒன்றை அனுபவிக்கின்றார்கள். பூரிசிரவஸ் அடையும் அந்த அனுபவம்தான் யோகம் பயில்பவனின் முதல் அனுபவனம். போரில் வென்றவன் மட்டும் இல்லை போரில் செத்தவன்கூட வீரசொற்கம் அடைந்துவிட்டான் என்று சொல்கின்று சொல்கின்றார்கள். கடமையை செய்வதிலே பலன் இருக்கிறது. கடமையை செய்தபின்பு கிடைப்பது பெரும் பயன் இல்லை. கடமையை செய் பயனை எதிர்ப்பார்க்காதே என்பதும் இதுதானா? இறப்பு நிச்சயம் என்று தெரிந்தும் அந்த விளையாட்டில் விழுவது அந்த கணமாகி இருக்கும் யோகத்திற்காகத்தான் என்று நினைக்கின்றேன். பூரிசிரவஸ் கண்களின்வழியாக நடத்தப்படும் இன்றைய அத்தியாயம் ஒரு யுத்தயோகம் என்று சொல்லலாம்.பூரிசிரவஸ் காண்பது ஒரு யுத்தயோகம் மாறாக கர்ணன் அடைவது மணிபூரக நாயகி தரிசனம். 

ஆத்மாவை யாரும் அறியமுடியாது ஆனால் ஆத்மா தான் விரும்புகின்றவர்களுக்கு தன்னை வெளிப்படுத்தும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ”அவன் அருளாளே அவன்தாள் வணங்கி” என்கின்றார் மாணிக்கவாசக சுவாமிகள். பாஞ்சாலத்தின்மீது போருக்கு செல்லும் கர்ணன் விரும்பாமலே இது நடக்கின்றது. போர்வேண்டாம் என்று அவன் போரை நிறுத்திவிட்டான் அதன்பின்பு துரியோதனால் இந்த போர் நடக்கின்றது. இந்த போர்கூட அவன் தூக்கத்தில் இருந்து எழுந்து ஓடுவதுபோல் இருக்கிறது.

‘’அறைக்குள் பூரிசிரவஸ் வந்து “மூத்தவரே” என அழைத்த ஒலியில்கவசங்களுடன் படுத்துத் துயின்றுகொண்டிருந்த கர்ணன்எழுந்துவிட்டான்அதேவிரைவில் தன் ஆவநாழியை அணிந்துவில்லை எடுத்தபடி வெளியே ஓடினான்’’

அன்புள்ள திரு.ஜெ எத்தனையோ அற்புதங்கள் நிரம்பிய காவியம் வெண்முரசு ஆனால் இந்த மேல்கண்ட வரியை நீங்கள் அமைத்ததை எண்ணி எண்ணி வியக்கின்றேன். எத்தனையோ கடிதங்கள் உங்களுக்கு எழுதிவிட்டேன், நீங்களும் சலிக்காமல் படித்து எத்தனை எழுத்துபிழை இருந்தாலும் பரவாஇல்லை என்று வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றீர்கள் அந்த கடிதங்கள் எல்லாம் நான் எதையாவது கண்டதால் எழுதினேனா என்று தெரியவில்லை இன்று இந்த வரியை திருப்பிபடித்தபோது எதையோ கண்டுக்கொண்டதுபோல் உள்ளது. நன்றி.

ஜீவன்கள் ஒவ்வொன்றும் எத்தனையோ கவசங்கள் அணிந்துக்கொண்டுதான் துயில்கின்றன. யாரோ ஒருவர் வந்து எழுப்புகின்றார்கள். எங்கேயோ போக, எந்த யுத்தத்திலோ வெல்ல ஓடுகின்றோம். வெல்கின்றோமா? தோற்கின்றோமா? என்பது தெரியவில்லை. அது தெரியவேண்டிய அவசியமும் இல்லை. யுத்தத்தல் நாமும் இருக்கின்றோமா என்பதுதான் கேள்வி. யுத்தத்தில் இருந்தால் வாழ்க்கையில் இருக்கின்றோம் என்று அர்த்தம். கர்ணன் அன்று எழுந்து ஓடாமல் இருந்து இருந்தால் துஞ்சினார் செத்தாரில் வேரல்லர் என்று வைக்கப்பட்டு இருப்பான். எதற்காக சென்றோமோ அதற்கும் அப்பால் ஒரு காட்சி கிடைத்து கண்களை கல்லாகிவிடுகின்றது.  வாழ்க்கை இப்படியும் செய்கின்றது. ஏன் செய்கின்றது. அது வாழ்க்கையின் தப்பா? இல்லை, மனம் இயங்கு தலத்தின் தப்பு. 

பாஞ்சாலியின் சுயம்வரத்திற்கு வரும் கர்ணன் பாஞ்சாலியை கொற்றவை ஆலயத்தில் வைத்துக்காண்கின்றான். மகாலெட்சுமியின் ஆலயத்தில் அவளைப்பார்க்காமல் செல்கின்றான் ஆனால் அந்த காட்சி அர்ஜுனனுக்கு கிடைக்கின்றது. ஆனால் இன்று பெரும் யுத்தத்திற்கு பின்னால் கர்ணன் மூன்றாவது மாடத்தில் வைத்து செவ்வண்ணப்பட்டுப்புடவையில் திரௌபதியைக்காண்கின்றான். செவ்வண்ணப்பட்டுப்புடவை என்பது ஒரு நெருப்பு மலர்போன்றது. திரௌபதி கறுப்பு நிறமுடையவள். கரியில் இருந்து எழும் நெருப்பு மலர்காட்சி அது. மூன்றாவது மாடத்தில் வைத்து திரௌபதியை கண்டான் என்றதும் மூன்றாவது தலமாகிய மணிபூரகத்தை ஞாபகப்படுத்தியதும் அதன் அதிதேவதை என்ன என்றுப்பார்த்தேன். லட்சுமி/லாகிணி என்று உள்ளது. ராமனுக்குதான் சீதை லட்சுமி, ராமனுக்கு அவள்தான் லாகிணி. காலமே, இயற்கையே, அன்னையே நீ விசித்திரமானவள். அர்ஜுனனுக்கு எதிரில் கர்ணணை அல்லவா ராவணனாக நிறத்தி விட்டாய்.

ஓ! அர்ஜுனா! நீதான் அன்று ”இன்றுபோய் நாளைவா” என்ற ராமனா? அதனால்தான் வில்தாழ்த்திய கர்ணன் முன் புன்னகையுடன் இன்று நீ வில்தாழ்த்தினாயா?

மாவீரா! கர்ணா! உன் கண்கள் கூழாங்கற்கள் ஆனாதை எண்ணி தவிக்கின்றேன். உனது முகம் சடலமென ஆனதை எண்ணி தவிக்கின்றேன். நீ யாரோடு ஆடினாய்? ஒரு பெண்ணோடா? ஒரு பெண்ணுடன் ஆடுவது அதுவும் மாற்றான் மனைவியோடு ஆடுவது என்பது சீதையை சிறை எடுத்த கொடுமைதானே! அறம் அறியாதவனாநீ? அதை நீ செய்யவில்லை பாஞ்சாலிக்குள் இருக்கும் தெய்வம் செய்கின்றது. நீ நாணுவதை கண்டு அது சிரிக்க தான் ஆடுகின்றது.

வான்நகும் மண்ணுமெல்லாம் நகும் நெடுவயிரத் தோளான்
நான்நகு பகைஞரெல்லாம் நகுவர் என்று அற்கு நாணான்
வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்-கம்பராமாயணம்

தருமன்போல் அறத்தையும், பார்த்தன்போல பற்றற்றதன்மையும் விரும்பும் கர்ணா! இன்று நீ இரண்டையும் கண்டுவிட்டாய். பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கின்றார். மனம் மூலதாரம், சுவாதிஸ்டாணம், மணிபூரகம் மூன்றிலும் நிற்கும்வரை மனிதன்  காஞ்சினி காமத்தில் உழன்றுக்கொண்டே இருப்பான் என்று சொல்கின்றார், இன்று உனக்கு மணிபூரக தரிசனம் காட்டிய திரௌபதியை அனாகத சக்கரத்திற்கு எடுத்து சென்றால் நீ தப்பிக்கலாம். அவள் அற்கு உன்னை விடுவாளா? நீதான் முயல்வாயா? அனாகத சக்கரத்தில் ஜோதி தரினமாமே? மணிபூரகம்வரை காமமாய் எரியும் நெருப்பு, அனாகதத்தில் அருட்பெரும்ஜோதி. எந்த பாஞ்சாலி உன்னை அலைகழிக்கின்றாளோ அவளே விழியாய் வழியாய் ஆவாள். 

அன்புள்ள ஜெ மணிப்பூரக சக்கரத்தின் லாகிணிதேவியின் தரிசனத்தை இந்த பதிவில் காட்டி அற்புத மாக்கி உள்ளீர்கள். மூன்றுதலை நான்கு கரம் கொண்ட லாகினித்தேவி. வஜ்ராயுதம்(இடி) காமத்தை தூண்டும் அம்பு, நெருப்பு, முத்திரை ஆகிய நான்கையும் தனது திருக்கரத்தில் ஏந்தி இருக்கின்றாள். இந்த அத்தியாயத்தில் வழிந்தோடும் நெருப்பு,அம்பு, இடி மற்றும் கடைசியில் வரும் சமாதானம் என்னும் முத்திரை. இவ்வளவு அற்புதமான இந்த அத்தியாயத்தை வெரும் கதையாகமட்டும் படித்துவிட்டுபோகமல் காட்சிஅருளிய அன்னை கசலகலாவல்லி சாரதா அன்னையின் பதமலர்ப்போற்றி.  



அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.