Saturday, March 28, 2015

யானைகளின் பாகன்



யானைகளை எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாலும் எனக்கு சலிக்காது, ஆனாலும் அதன் அருகே நெருங்கமாட்டேன், யானை மனிதர்களை விரோதியாக காணும் விலங்கினம். அன்பே உருவானதுபோல தோன்றும் கோயில் யானைகள் பழக்கப்படுத்துதல் என்ற சங்கிலியால் கட்டுபோடப்பட்டவை. அந்தக் கட்டை எந்த நேரத்திலும் அது உடைத்துக்கொண்டு ஒரு வனவிலங்காக அதன் இயல்பை அடையக்கூடும்.  ஆகவே ஒரு யானைமேல்  எனக்கு இருக்கும் நேசத்தைவிட அதன்மேல் இருக்கும் அச்சம் எனக்கு அதிகம்.  ஒரு சிறந்த பாகனால் மட்டுமே அதை நாட்டுவாழ்க்கைக்கு உட்படுத்தமுடியும். அதே நேரத்தில் அதை போர்யானையாக மாற்றி பலரை கொல்லவைக்கவும் முடியும். 

    திருதராஷ்டிரர் ஒரு யானை என்றே அனைவராலும் கருதப்படுவது அவர் அத்தகைய இயல்பை கொண்டிருப்பதால்தான்.  அவர் விதுரர் என்ற பாகனால் வழி நடத்தப்படும்வரை ஒரு கோயில் யானையைப்போல மிக இனியவராக இருப்பார்.  அவர் சற்றே கோபத்திலேயோ அல்லது வேறு உணர்ச்சியினாலோ சற்றே தடம் மாறும்போது விதுரனின் சொற்கள் அவரை நேர்வழி செலுத்துகிறது. ஆனால் விதுரனின் சொற்கள் அவர் காதில் விழாத நேரத்தில் அவரால் பாதகமான செயல்களை செய்ய வைக்க முடியும்.  சகுனி போன்றவர்கள் அவரை ஒரு போர் யானையாக மாற்றிவிடமுடியும்.  அதனால் பல தீங்குகள் நடப்பதற்கு  அவரை காரணப்படுத்தமுடியும்.

   பலராமனும் ஒரு யானையைப்போல. இன்னும் முழுமையாக பழக்கப்படுத்தாத பெரு விலங்கு, உணர்ச்சிகளால் ஆளப்படுபவர்.  தன் கண்களால் காண்பதை மட்டுமே காண்பவர். அதைத்தாண்டி பார்க்கும் யுக்தி கைவரப்படாத  ஒரு பெரிய குழந்தை. அவரை ஒரு கட்டுக்குள் வைப்பதும் அவரை ஒரு பாதையில் செலுத்துவதும் மிகவும் கடினம்.  குழந்தையை ஒரு தாய் சிறப்பாக கையாள்வதைப்போல கண்ணன் அவரை கையாள்கிறான். ஒரு திறமையான குழந்தைவளர்ப்பவர்  ஒரு செயலை குழந்தை தானே செய்வதைப்போல்  செய்யவைக்கவேண்டும். அது எடுக்கக்கூடாத பொருளை குழந்தையின் கைபடும் இடத்தில் வைக்கக்கூடாது. அது சாப்பிட வேண்டிய உணவை அக்குழந்தையே விரும்பி சாப்பிடும் வகையில் சுவைசேர்த்து வண்ணம் தந்து அதன் கண்ணெதிரில் வைக்கவேண்டும்.  குழந்தை எதை விளையாடவேண்டும் எதை கற்க வேண்டும் என்பதை திட்டமிட்டு அக்குழந்தையே அதை விரும்பி செய்யும் வண்ணம் நிகழ்த்தவேண்டும்.  கண்ணன் பலராமரை கையாள்வது அத்தகையது
   
ஒரு அரச அவை கூட ஒரு யானையைப்போன்றதுதான். திறமையான முன்னவர் இல்லாத அவை மதம்கொண்ட யானையைப்போல கட்டற்றுபோய் பெரும் குழப்பத்தில் முடியும். ஒரு பாதையில் செல்லும் பெரிய யானை அதுவாக சுதந்திரமாக நடந்து செல்வதுபோல் தோன்றும். ஆனால் அதன் மேல் அமர்ந்திருக்கும் ஒரு நல்ல பாகன் சிறிதாக சில ஆணைகள் இடுவதன் மூலம், தன் கால்களை சற்றே அழுத்துவதன் மூலம், தேவைப்படும்போது அங்குசத்தால் மெல்ல அடிப்பதன் மூலம் அவன் நினைக்கும் பாதையில் யானையை நடத்தி செல்கிறான்.   அஸ்தினாபுர  பேரவையை கண்ணன் குறைவான சொற்களைக்கொண்டு தான் நினைக்கும் வழியில் செலுத்துவது  மிகவும் அழகு.

கண்ணனை இப்படி புரிந்து எழுத வெறும் சிந்தனையில் மட்டும் கண்ணன் இருந்தால்  போதாது. அவனை தன் நாடி நரம்பினுள் எல்லாம் ஜெயமோகன் நிறைத்திருக்கவேண்டும்.



தண்டபாணி துரைவேல்