Tuesday, March 17, 2015

தழலின் மாயங்கள்



அன்பு ஜெயமோகன்,

          வெண்முகில் நகரம் முப்பத்து நான்காம் அத்தியாயத்தில் கர்ணன் திகைத்து நிற்கும்படியான ஒரு வாக்கியத்தைச் சொல்கிறான் பூரிசிரவஸ். அவ்வாக்கியத்தின் எதிர்பாராத பொருளால் நான் திகைத்துப் போனேன். ”நம் நிழல்களின் ஆடல் நம்முடையதல்ல. அவை தழலின் மாயங்கள் மட்டுமே” எனும் அவ்வாக்கியத்திலிருந்து பலநாட்கள் என்னால் விடுபட முடியவில்லை. தொடர்ந்து அது பற்றியே சிந்தித்துக் கொண்டும் இருந்தேன்.

          அடர்ந்த இரவின் தீப்பந்த வெளிச்சத்தில் நின்று கொண்டிருக்கும் நமக்கு அருகே ஒரு சுவர் இருக்கிறது. தீப்பந்த ஒளியால் சுவரில் நம் உடலின் நிழல் தெரிகிறது. நம் உடலின் நிழலை நாம் கர்வத்துடன் கவனித்துக்கொண்டிருக்கும்போதே அது நடனமாடத் துவங்குகிறது. நம் உண்மை உடல் அசையாமல் இருக்க, நிழல் உடலோ நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் நடனமாடிக்கொண்டிருக்கிறது. அதை உணரும்பொழுதில் அதிர்ந்து போகிறோம். நம் உடல் எனும் அடையாளம் சட்டெனக் கலைந்து அமைதியாகிறோம். தீப்பந்த வெளிச்சம் காற்றில் அசைய அவ்வசைவே நம் உடலின் நிழலையும் ஆட வைத்திருக்கிறது. நாமோ உடலின் நிழல் என்பதால் நம்முடையது என்றே முரசறைகிறோம். கொஞ்ச நேரத்திலேயே அது அப்படியன்று எனத்தெரிந்து பின்வாங்குகிறோம்.

          உடலின் நிழலே உடலாகிவிடாது என்பது எளிய தெளிவுதான். என்றாலும் உடல் தரும் புலன்மயக்கத்தில் உடலின் நிழலையும் உடலாகவே கவனிக்கத் துவங்கி விடும் ஆபத்தில் மாட்டிக்க்கொள்கிறோம். உடம்பில்லா விட்டால் நிழல் வாய்ப்பில்லை என்றாலும், நிழலின் வடிவங்களைத் தீர்மானிக்கும் ஆற்றல் உடலுக்கு இல்லை என்பதையும் நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். நிழலை உடலாகக் காட்டுவதே அறிவு. அது தருக்கங்களால் நிழலைத் தொடர்ந்து உடலாகக் காட்டப்போரடியபடியே இருக்கும். உடலையும், நிழலையும் தள்ளி நின்று பார்க்கவைப்பதே ஞானம். அது எவ்விதத் தருக்கத்தையும் சார்ந்து நிற்காமல் சாட்சியாளனாக மட்டுமே நிறக நம்மைத் தயார்செய்யும்.

          தீப்பந்த வெளிச்சத்தை இயற்கையாகவும், சுவரை உலகாகவும், வாழ்க்கையை என்னுடலாகவும் கொண்டு ஒரு காட்சியை வரைந்து பார்க்கத் தூண்டிய உங்களுக்கு அன்பார்ந்த நன்றி.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.