Tuesday, July 21, 2015

வழிகள்



வெண் முரசுவில் ஜெ  உருவாக்கும், விவரிக்கும் இந்திய நிலப்பகுதிகள்,  மற்றும் பாதைகள்  பற்றியே  தனியாக எழுதலாம்.
         
           பிரயாகையிலும் இந்திரநீலத்திலும் சேர்த்து அஸ்தினபுரி அல்லது மதுராவிலிருந்து துவாரகைக்கு  வரும் வழியயே மூன்றாகக் காட்டுகிறார்.சாத்யகி வருவது பெரும் பாலையைக் கடந்து.( இதுவே சத்யபாமா வரும் வழியும் கூட) பின் திருஷ்டத்யும்னன் வருவது கடல் வழியாக, இது விவரித்துச் சொல்லப்படவில்லை என்றாலும் அவன் அமரமுனையிலிருந்து தோரண வாயிலை  பார்ப்பதிலிருந்து அறியலாம். இப்போது அவன் போர் முடிந்து மீண்டு வருவது உஜ்ஜயினி வழியாக. இது மிகவும் சுவாரசியமானது.

       இந்திர நீலத்தின்  பகுதிகள் 38-40 படிக்கும்போது இப்படித் தோன்றியது.   சாத்யகியும் த்ருஷ்டத்யும்ணனும், நதிகள்  வழியாக காசி தாண்டி க்ருஷ்ணவபுஸ்ஸுக்கு செல்ல மதுராவிலிருந்து  சென்று பின் மதுராவிற்கு திரும்புவது  வருகிறது. ஆனால் மதுராவிலிருந்து யமுனை வழியாக காசி செல்ல பிரயாகை சென்றுதான் செல்ல வேண்டும். பிரயாகை பற்றி குறிப்புகளில்லை, மேலும் முன் ஒரு பகுதியில், பிரயாகை மகத நாட்டின் கட்டுப் பாட்டில் உள்ளதாக வருகிறது.ஆனால் மகதக் காவல் படைகளோடு மோதல் எதுவும் விவரிக்கப்படவில்லை.
       
            மேலும்  காசி தாண்டி காசிக்கும் மதுராவுக்கும் இடையே   நதியிலே கிருஷ்ணர் இவர்களை சந்திக்கிறார்.அப்போது சாத்யகியிடம்,

  // இளையோனே, உடனே சிறுகலத்தில் மதுராவுக்குச் செல்க! உமது கை நலம் பெற்றபின் பிறிதொரு போருக்கு எழுவோம்”//  என்று கிருஷ்ணன் சாத்யகிக்கு சொல்கிறார்.
          இங்கு மதுரா  இருப்பது  யமுனைக்கரையில் என்பது கவனத்தில் கொள்ளப்படவில்லையோ என்று தோன்றுகிறது. காசிக்கும் பிரயாகைக்கும் இடையில் அவர்கள்   இருந்தால்  பிரயாகை  சென்று அங்கிருந்துதான்  யமுனை வழியாக மதுராவுக்கு செல்லவேண்டும்  என்பது கவனத்தில் கொள்ளப்படவில்லையோ என்று தோன்றியது

         ஆனால், இன்று வந்தது அதை மாற்றி  இன்னும் சில புதிய யூகங்களைக் கொண்டுவந்தது.த்ருஷ்டத்யும்னனும் அவனது படையும்,.  //மதுராவிலிருந்து  யமுனையில் கிளம்பி கங்கையின் வழியாக வந்து சர்மாவதிக்குள் வழி பிரிந்து உஜ்ஜயினியை அடைந்து பாலைக்குள் வண்டிகளும் புரவிகளுமாக நிரை வகுத்து மீண்டும் தொடர்ந்தனர்.// என்று விவரிக்கிறார். இதை யோசித்துக் கொண்டே இருக்கிறேன். கங்கையிலிருந்து உஜ்ஜையினிக்கு ஒரு நீர்வழிப் பாதை? சர்மாவதி என்பது சம்பல் (chambal ) ஆக இருக்குமா? சம்பல் யமுனையில் கலக்கும் நதி. உஜையினியில் ஓடும் ஷீப்ரா  நதி சம்பலில் கலக்கிறது. ஆக அதுதான் அந்த நீர்வழிப் பாதையா? ஆனால் சர்மாவதி எனும் சம்பலுக்கு வர மீண்டும் யமுனைக்கு வரவேண்டும். யமுனைக்கு வர பிரயாகையயை அடையாமல் முடியாது.. கங்கையிலிருந்து யமுனைக்கு மாற  பிரயாகக்கு வராமல்  வர வேறு நீர்வழிப் பாதை இருக்கிறதா தெரியவில்லை. ஆனால் ஜெ இவர்களின் பயணத்தில் கங்கையிலிருந்து யமுனைக்கு மாறுவது தரை வழியாக என்றும்  விவரிக்கவில்லை. பிரயாகையும் எங்கும் வரவில்லை. வரலாற்றுக் காலத்துக்கு முன்னும் வரலாற்றுகே காலத்திலும் நிச்சயமாக இன்றை விட இந்தியாவில் நேர் வழி பாதையே அதிகம் பயன் பட்டிருக்கும். நிலப்பாதைகள் பெரும் காடுகளால் சூழப்பட்டிருந்ததால் நீர் வழியே ஒப்புநோக்க எளிதானது.,  வெண் முரசில் வரும் இந்த நீர்ப்  பாதைகளை ஊகிப்பது மிக சுவாரசிக உள்ளது..


    மேலும் இன்னொன்று, ஷததன்வா மிதிலைக்கு அருகில்தான் கிருஷ்ணனால் கொள்ளப் படுவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. கிருஷ்ணவபுஸ்  தான் மிதிலையா.? அதன் உச்சரிப்பு எப்படி? கிருஷ்ண- வபுஸ்ஸா ? அல்லது கிருஷ்ணவ புஸ்ஸா ? பல கேள்விகள் பல தேடல்கள்....

வே சுரேஷ்