Monday, July 6, 2015

பெண்ணின் அனுமதி


  கண்ணன், பாமாவிடம் ஜாம்பவியுடனான திருமணத்திற்கு அங்கீகாரம் பெறும் நிகழ்வு ஒரு பெரும் உளவியல் நாடகம் ஆகும். பாமா ஆளுமை மிக்க பேரரசி. கண்ணனின் மனைவியரில் ஒருவள் என்பதாக தன்னை பிறர் கருதுவதை எப்படி அவள் சகித்துக்கொள்ளமுடியும். ஒரு பெண் காதலியாக அகங்காரம் மிக்கவள், தன் காதலணை தனக்கே உரித்தான உடமையாக நினைப்பவள். ஒரு காதலியிடம் இன்னொருவளுக்கு இடம் கேட்டு அனுமதிபெறுவது சற்றும் இயலாத காரியம்.

     ஆனால் ஒரு தாயிடம் எதற்கான அனுமதியையும் எளிதாக பெற்றூவிடலாம். ஏனென்றால் தாய் கருணையின் வடிவம் தனக்கென எதுவும் நினையாமல் பிள்ளைகளுக்காக எதையும் தியாகம் செய்யத் தயங்காதவள்.

      தாயாக ஒரு பெண்  தன்னைமுழுமையாக  உணர்வது அவள் ஒரு குழந்தையை வயிற்றில் சுமக்கும்போதோ அல்லது அக்குழந்தையை  ஈன்றெடுக்கும்போதோ அல்ல. தன் குழந்தைக்கு பாலூட்டும்போதுஎன்றுதான் நினைக்கிறேன். விலங்குகள் குட்டிகளுக்கு உணவளிப்பதை சீக்கிரத்தில் நிறுத்திவிடுகின்றன. அத்துடன் அவற்றின் தாய்மைக்காலம் முடிந்துவிடுகிறது என்பதைக்க் காணலாம்.  மனித குலத்தில் ஒரு தாய்  உணவை சமைத்து பிள்ளைகளுக்கு  அளிக்கும்போதெல்லாம்  அவள்  தன் தாய்மையை உணர்கிறாள்.  இப்படி பிள்ளைகளுக்கு உணவளிப்பதில் முடிவு  இல்லாமல் இருப்பதால்தான்  தாய்மை இறப்புவரை நீடிக்கிறது. 

  உணவை ஆக்கி அளிக்கும் எவரிலும், அவர் ஆணாக இருந்தாலும், தாய்மை குடிகொள்கிறது. இந்த நேரத்தில் கெத்தேல் சாகிப்பை நினைவு கூறூகிறேன்.  

   கண்ணன் பாமாவிற்கும் இடையில், அவர்கள் கரம் பற்றிய சிறிது நேரத்திலேயே, அவனின் மற்றொரு திருமணத்தைப்பற்றிய உரையாடல் மெலிதாக துவங்குகிறது. பாமா இவ்விஷயத்தில் கண்ணனை கொல்லவும் தயங்க மாட்டேன் என எச்சரிக்கிறாள்.  காதலியாய் அவளிடம் அனுமதி பெறமுடியாது என அறியும் கண்ணன் அப்போதைக்கு பின் வாங்கிவிடுகிறான். அவள் இவ்விஷயத்தை முழுதும்  மறந்து அவனுக்கு உணவு சமைத்து பரிமாறுகிறாள். கண்ணன் உணவை உண்ண உண்ண அவளின் தாய்மை பெருகுகிறது. கண்ணன் மேல் பரிவு பெருகி அவனுக்கு தன் அனுமதியை தானாகவே அளிக்கிறாள்.
    மற்றும் பெண்ணிடம் ஒரு அனுமதியை பெற வேண்டும் என்றால் அதற்காக காரணங்களை அடுக்கி விவாதிப்பது எதிர்மறையான பலன்களையே தரும். மாறாக முகத்தை பூனை போல பாவமாக வைத்துக்கொண்டு அவள் பின்னாலேயே சுற்றி சுற்றி வந்தால் எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்பது என்னுடைய அனுபவபூர்வமான அறிவாகும்.

தண்டபாணி துரைவேல்