Saturday, July 11, 2015

சியமந்தகக் காலம்

ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றைய இந்திரநீலம் - 39 வெகு சுவாரஸ்யம். கங்கையினுள் கிருஷ்ணவபுஸ் துறைமுக போர்கள காட்சிகள் அமர்க்களம். நானும் திருஷ்டத்யும்னன் மற்றும் சாத்யகியுடன் கலத்தின் அகல்முனயிலிருந்து அம்பு தொடுத்தாற் போல உணர்ந்தேன். நீங்கள் செய்யும் போர் விவரிப்பும், உவமைகளும் எப்பொழுதும் போல பிரமிக்க வைக்கின்றன. திருஷ்டத்யுமனும், சாத்யகியும் மிகக் குறைந்த வீரர்களுடன் கிருஷ்ணவபுஸின் பன்னிரு மரக்கலங்களையும், காசியின் போர் படகுகளையும் முறியடித்து தப்பியது மிக விறுவிறுப்பான சம்பவக் கோர்வை. நாளை கிருஷ்ணன் வருகை நடந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடும்.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம். இந்த சியமந்தக மணிக்காக நடந்த சம்பவங்கள் எப்பொழுது நடந்தன? நான் அறிந்த வரையில் பாண்டவர்கள் வாரணவதத்தில் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்ததாக செய்தி வந்தபோது கிருஷ்ணரும், பலராமரும் அஸ்தினாபுரம் செல்லுகிறார்கள். அப்போதுதான் சியமந்தக மணிக்காக சதி திட்டம் உருவாகி சத்ரஜித்தும் கொல்லப்பட்டு மணியும் களவாடப் படுகிறது. பிறகு கிருஷ்ணர் சததன்வாவை கொல்கிறார். இவையெல்லாம் பாண்டவர்கள் திரௌபதியை மணப்பதற்கு முன்பு. ஆகையால் இச்சம்பவங்களில் திருஷ்டத்யும்னனின் பங்களிப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

ஆனால் உங்களது விவரிப்பு படி இச்சம்பவங்கள் இந்திரபிரஸ்தம் அமைக்கப்பெறும் காலக்கட்டத்தில் நடப்பதாக வருகின்றன. எப்படியிருந்தாலும் கதை மாந்தர்களும், அவர்களின் ஆளுமைகளும், மணிக்கான அவர்களது விழைவும், அதனால் ஏற்படும் சிக்கல்களும் எங்களை கட்டிப்போடுபவை. தினமும் இரவு பன்னிரண்டு மணிக்காக காத்திருக்க வைப்பவை.  

ராதிகா