Saturday, August 29, 2015

ஐந்தாவது அதிசயம்.



கன்றுக்கு கனிந்து பால்கொடுக்கும் தாய் பசு. குருளையை கடித்து எடுத்துச் சென்று கருணையோடு காக்கும் புலி. தன்னைப்பற்றி தன்னோடு வரவேண்டும் என்று தருக்கிப்பாயும் குரங்கு. சினத்தால் உண்டு செறித்துவிடும் பன்றி என்று பக்தியின் நான்கு வகையை தொல்நூல்கள் சுட்டுகின்றன.

இந்த நான்கில் ஒன்றைப்பற்றிக்கொண்டு மானிட ஜென்மம் கடைதேறிவிடுகின்றதா? இல்லை, இந்த நான்கு வழியும் பற்றவில்லை. முன்செய் புண்ணிம் இருந்தும், முன்செய் புண்ணியம் இல்லாமல் இருந்தும்,  வினைவழி செல்லும் வாழ்க்கையின் ஏதோ ஒரு புள்ளியில்  மானிடன் சிக்குண்டு உழன்றுக்கொண்டே இருக்கிறான். இப்படி பிறவிப்பெருங்கடலில் உழலும் மனிதனுக்கு கருணைக்கொண்ட அருணகிரிநாத சுவாமிகள் அத்தன்,சித்தன், அப்பன்,குமரபெருமானிடம் இப்படி முறையிடுகின்றார்.

பொற்பதத்தினைத் துதித்து நற்பதத்தில் உற்ற பத்தர்
     பொற்புரைத்து நெக்குருக்க அறியாதே
புத்தகப் பிதற்றை விட்டு வித்தகத்து உனைத் துதிக்க
     புத்தியிற் கலக்க மற்ற நினையாதே 

முற்படத் தலத்து உதித்து பிற்படைத்து அகிர்த்ய முற்றி
     முற்கடைத் தவித்து நிதம் உழல்வேனை
முட்ட இக்கடைப்பிறப்பினுள் கிடப்பதைத் தவிர்த்து
     முக்தி சற்றெனக்கு அளிப்பது ஒருநாளே

வெற்பளித்த தற்பரைக்கு இடப்புறத்தை உற்றளித்த
வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில்வீரா
வித்ததை தத்வம் முத்தமிழ்ச்சொல் அத்தம் சத்தம் வித்தரிக்கும்
மெய்த்திருத்தணிப் பொருப்பில் உறைவோனே


கற்பகப் புனக்குறத்தி கச்சடர்த்த சித்ர முற்ற
கற்புரத் திருத்தனத்தில் அணைவோனே
கைத்தரக்கர் கொத்து உகச் சினத்து வஜ்ரனுக்கு அமைத்த
கைத்தொழுத் தறித்துவிட்ட பெருமாளே! -திருத்தணி திருப்புகழ்

நன்றி கௌமாரம்.காம் http://www.kaumaram.com/thiru/nnt0288_u.html

முன்னமே பிறந்தவன் நான், பின்னும், பின்னும், தீவினை செய்து வயதால் சிறியன் என்று வாசல்தோறும் தவித்து உழல்கின்றேன்.

பிறவிப்பெருங்கடலில் இருந்து கடைதேற நான்கு வழி இருக்கிறது இந்த நான்கு வழியில் ஒன்றையும் நான் கடைப்பிடிப்பது இல்லை.

திருஞானசம்பந்தர், திருமாணிக்கவாசகர் போன்றவரை நாடி பசுவென இறைவன் வருகின்றான். லட்சுமணன், காரைக்காள் அம்மை, ஆண்டாள், மீரா போன்றவர்கள் குட்டிக்குரங்கு தாய் குரங்கைப் பற்றிக்கொள்வதுபோல பற்றிக்கொள்கிறார்கள். அன்னை சீதை, பரதன், சுந்தரமூர்த்தி சுவாமிகள் போன்றவரை புலிக்குருளை என அவன் விருப்பப்படி வைக்கிறான். ராவணன், ஹிரண்யன், கம்சன் என்னும் அரக்கர்கள்கூட, இறைவனை பெரும்சினம் கொள்ளவைத்து, பன்றி குட்டியை திண்பதுபோல தங்களை திங்க வைத்து முக்தி அடைந்துவிடுகின்றார்கள்.  

சாத்தியகி போன்ற எளியவர்கள்தான் உலகில் அதிகம்,  இறைவன்கூட இருப்பதுபோலவே இருந்து, இறைவன் தொண்டன் என்று நினைத்தும் தீவினையில் விழுந்து இந்த கடைப்பிறப்பில், அந்த வாசால் படியில் அல்லது வேறுஒரு வாசல் படியில் என்று தவித்து தவித்து கிடந்து கடைதேற வழியின்று நொந்து சாகின்றார்கள். அவர்கள் கடைதேறுவது எப்படி?

இறைவன் கருணைமிகுந்தவன் அவன் மந்தையைவிட்டு பிரிந்த ஆட்டை கைவிடுவதில்லை, அந்த ஒற்றை ஆட்டுக்காக மந்தையையே சற்றுநேரம் விட்டுவிடுகின்றான், மந்தையை விட்டுபிரிந்த அந்த ஒற்றை ஆட்டைத்தேடி தேவக்குமாரன் அலைகிறான்.  கண்டு எடுக்கிறான். அள்ளி தன் நெஞ்சத்தில் அனைத்து முத்தமிடுகின்றான்.

தேவக்குமாரனாக சென்றும் தேடிக்கண்டுக்கொள்ளமுடியாத புதர்மறையும் ஆடாக இருந்தால் விட்டுவிடுவானா? அங்கு ஓநாய் என்றே ஆகின்றான். அவன் அள்ளி எடுத்தும் அனைப்பான், வேட்டையாடி தின்றும் களிப்பான்.  எந்த ஒரு ஆடும்  தனித்து தவித்து அநாதை என்று சாவ அவன் ஒருபோதும் விடுவதில்லை.

ஐந்தாவது வகை ஆசிரியர் ஒருவர் உண்டென்று இப்போதறிந்தேன்என்றான். “எந்தப்புதருக்குள் எவ்வகை வளைக்குள் சென்றொளிந்தாலும் காலடி மணம் முகர்ந்து தேடி வரும் ஓநாய். காத்திருந்து கைபற்றும் வேட்டைக்காரர். அவரிடமிருந்து நான் விழைந்தாலும் விலக முடியாது.-இந்திரநீலம்-87


பகவான் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் நற்குருவை தேடி அடையவேண்டும் என்று சொல்வார். பேருக்கு குரு என்று இருப்பர் இடம் மாட்டி அல்லல்படக்கூடாது என்று சொல்ல வந்தவர் “நல்லக்குரு, ஒரே கடியில் இரையை கொன்று விழுங்கிவிடும் விடம்கொண்டநாகம், அல்லாதவர் என்றால் இரைக்கும் துன்பம், பாம்புக்கும் துன்பம்” என்பார்.


சாத்யகி நீலனை ஐந்தாவதாக அறிவதுதான் அற்புதம். அதுதான் அவனின் புதிய வழி, அவனுக்கு என்று அவன் கண்ட வழி, அந்த வழியில்தான் அவன் நீலனை அடையமுடியும். எத்தனை வழிகள் உலகில் இருந்தாலும், அவரவருக்கு என்று உரிய வழியை அவரவர் அறிவால்தான் அறியவேண்டும், இறைவனும் அவர் அவர் அறிவு அளவுக்கு அறிய கிடைக்கிறான். சாத்தியகிக்கு எங்கு சென்றாலும் மோப்பம் பிடித்து வரும் ஓநாய்போன்று என்று அறிய கிடைத்து உள்ளான். இதைத்தான் அபிராமிப்பட்டர் அன்னை அபிராமி இடம் இப்படி சொல்கிறார்.

கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே-அபிராமி அந்தாதி

இறைவன் நம் அறிவு அளவுக்கு அளவாவது அதிசயம்தான். சாத்தியகிக்கு அந்த அதிசயத்தை நீலன் ஒநாய் என்ற சொல்லாகி வந்து கட்டுகின்றான்.  அந்த அதிசயம்தான் உலக அதிசயம், யாராலும் உருவாக்க முடியாத, யாராலும் அழிக்க முடியாத அவரவர் ஐந்தாவது அதிசயம்.  இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வம் இருக்கு? அத்தனை மனிதன் இருக்கிறான். அவன் அவன் அறிவு அளவுக்கு அவன் அதிசய அளவாகிறான். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.