Wednesday, September 23, 2015

சாப விமோசனம்:


    நம் புராணங்களில் முனிவர்களை, அவர்கள் கொடுத்த சாபங்களின் வாயிலாகத்தான் நாம்  பெரும்பாலும் நினைவு கூறுகிறோம். தவறிழைத்தவர்களுக்கு உடன் தண்டனைதான், மன்னிப்பதெல்லாம் அரிதினும் அரிது. அப்புறம் அந்த முனிவர்கள் அத்தனை தவம் செய்து என்ன பலன். அவர்களின் கடும் தவம் அவர்களை முன்கோபக்காரர்களாகவும், சிடு மூஞ்சிகளாகவும் மாற்றிவிடுகிறதா என்ன? கழுத்தில் செத்த பாம்பை போட்டவனுக்கு பாம்பு கடித்து  செத்துப்போ என்ற சாபம் முதல் தேர்க்காலால் இடறப்பட்டதற்கு கந்தர்வ உலகத்திலிருந்து நாடு கடத்தப்படும் சாபம் வரை வெண்முரசிலேயே பலவற்றை பார்த்திருக்கிறோம்.
    
முனிவர்கள் சாபம் அளிப்பது எவ்வகையில் சரியாகும்?


     சாபம் என்பது தவறு செய்தவனுக்கான தண்டனை. தண்டிப்பதற்கான தகுதியும் திறனும் உள்ள  ஒருவர் கண்ணெதிரே ஒருவன் தவறு செய்யும்போது தண்டிக்காமல் விடுவது ஒருவகையில் தன் கடமையை ஆற்றாததாகும்.


    அக்கால சமூகத்தில் நீதி வழங்குதல் அரசனிடம் இருக்கிறது, அரசன் எட்டாத இடத்தில் இருக்கும்போது அருகிருக்கும் திறன் மிக்கவர்கள், பெரு வீரர்கள் போன்றோரிடம் இருந்திருக்கும். ஆனால் இவர்களே தவறு செய்தால், யார் கேட்பது? தட்டிக்கேட்க ஆளில்லாதவனுக்கான பொறுப்பு மிக அதிகம். அந்த பொறுப்பை அவன் தவறவிடும்போது அதற்கான விலையை, மற்றவர்களைவிட அதிகமாக அவன் கொடுக்க வேண்டும். ஒரு முனிவர் யாருக்கு சாபம் வழங்குகிறார் எனப் பாருங்கள்? தவறிழைத்தவன், அதற்காக வேறொருவரால், தண்டிக்கப்பட முடியாத நிலையில் இருப்பவன். ஒன்று அவன் அரசன் அல்லது பெரு வீரனாக இருப்பான் அல்லது அந்த குற்றம் வேறு யாரும் காணாத நிலையில் நடப்பதாக இருக்கலாம். 



இத்தகைய தருணத்தில் அங்கிருக்கும், தண்டிக்கும் திறனிருக்கும்  ஒருவர் அவன் குற்றத்தை காணாததைப்போலச் சென்றாலோ அல்லது மௌனமாக சகித்துக்கொண்டு போனாலோ அவர் சமூகத்திற்கும், அந்த குற்றம் புரிந்தவனுக்கும் கூட கேடு செய்தவராக  ஆகிறார்.  ஒருவருக்கு தண்டிக்கும்  சக்தி நல்லூழாலோ அல்லது கடும் தவத்தாலோ வாய்த்திருக்கும்போது அதை பயன்படுத்தவேண்டிய சமயத்தில் பயன் படுத்தவேண்டிய பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. ஆக்வே ஒரு முனிவர் ஒருவன் செய்யும் குற்றத்திற்கு சாபமிடுதல் அவர் பொறுப்பாகிறது. இல்லையென்றால் ஏன் அந்த சக்தி அவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது? ஆகவே முனிவராய் இருந்து ஒருவர் சாபமிடக்கூடாது எனச் சொல்ல முடியாது. 


   ஆனால் முனிவர் ஒருவனால் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு அவனை மன்னித்து விடலாம் அல்லவா?  அவர் தண்டிப்பது வெறும் பழிவாங்குதல் என ஆகிவிடாதா?


       ஒரு குற்றம் நடக்கும்போது மூன்று இடங்களில் அதன் பாதிப்பு நேர்கிறது. ஒன்று அதனால் நேரிடையாக துன்பத்திற்கும் உள்ளாகும் நபர் அல்லது நபர்கள். இரண்டாவது  அவ்விடத்தின் சமூக சூழல் பாதிப்படைகிறது. சமூகத்திற்கு ஒரு தவறான செயல் நடத்திக் காட்டப்படுவதன்மூலம் சமூகத்தின் நல்லியல்பு களங்கப்படுத்தப்படுகிறது. மேலும் சிலர் அந்த செயலை செய்வதற்கான முன்னுதாரணமாகிறது. மூன்றாவது அந்த குற்றம் செய்தவன் உள்ளம் மற்றும் அவன் ஆளுமை  சீர்கேடடைகிறது.   ஆகவே ஒருவனுக்கு அளிக்கும் தண்டனை இந்த மூன்று காரணங்களுக்காக ஆகும். ஒரு முனிவர் ஒருவன் குற்றத்தினால் தன்க்கு ஏற்பட்ட துன்பத்தை சகித்துக்கொள்ளலாம். ஆனால் மற்ற இரண்டு பாதிப்புகளுக்காக அவர் தண்டனை கொடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளார்.


    சாப விமோசனம் தேவையா? தண்டிக்கும் ஒருவருக்கு தண்டனையை எப்போது முடிக்க வேண்டும் என்பதும் அறிந்திருக்க வேண்டும். மீளா நரகம் அல்லது இனி அவனுக்கு விடிவே இல்லை என தீர்மாணிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் அத்தவறுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது என்பதில் நிவாரணம் பெறுகிறார். சமூகம் அவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையின் மூலம் அக் குற்றம் தன்னால் ஒத்துக்கொள்ளமுடியாதது என தெரியப்படுத்திகொள்கிறது அதன் மூலம் தன் சூழலை காத்துக்கொள்கிறது. ஆனால் குற்றம் புரிந்தவன் அடைந்த பாதிப்பு அவன் தன் தவறை உண்மையில் உணர்ந்துகொள்ளும்ரை அவனுக்கு தொடர்ந்திருக்கிறது. கொடுக்கும் தண்டனை அக்குற்றத்தை அவன் உணர்ந்துகொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும்.


முனிவர்கள் அளிக்கும் சாபத்தை பாருங்கள், அந்த குற்றம் சம்பந்தப்பட்டதாகவே அந்த தண்டனையும் இருக்கும். அதன் மூலம் அவன் தன் குற்றத்தை உணர்ந்துகொள்ள வழிவகுப்பதாக இருக்கும்.
  சித்ரரதனின் சாபமும்  விமோசனமும்:  சித்ரரதன் சிற்றுயிர்களுக்கு அவ்வளவு முக்கியம் அளிக்கத்தேவை இல்லை என இருந்தவன். அவனை சிற்றுயிராக போகும்படி சபிக்கப்படுகிறான்.  ஆனாலும் அவன் செய்த குற்றத்தை உணரமலேயே இருக்கிறான். அவனை பார்த்தன் தோற்கடிக்கப்படும்போதுதான் தன் நிலை உணர்ந்து இப்படியான தன் வீழ்ச்சிக்கு தான் செய்த குற்றமென்ன என யோசிக்க முற்படுகிறான். அர்ச்சுனன் உயிர்களை கொல்லக்கூடிய  வீரன் என்பதாலேயே, உயிர்களை கொல்லாமம்  துன்பப்படுத்தாமலும் இருப்பதன் மேன்மையை கற்பிக்கப்பட்டு அறிந்திருப்பவன். அவனால் சித்ரரதனுக்கு அவன்  குற்றத்தை சரியாக உணரவைக்க முடிகிறது. குற்றத்தை உணர்ந்த சித்ரரதன் சாபவிமோசனம் பெறுகிறான்.

தண்டபாணி துரைவேல்