Wednesday, November 18, 2015

அரிஷ்டநேமியின் துறவை தடுக்கப்பார்த்தானா கண்ணன்? (காண்டீபம் -62)



   அரிஷ்டநேமிக்கு துறவறம் புதிதல்ல. பிறந்த நாளிலிருந்தே அவர்  பாதை துறவை நோக்கி இருந்தது. கண்ணன் துறவின் நோக்கில் போகும் அவரை இரு தடவை தடுக்கப்பார்க்கிறான். ஒன்று அவன் அவரிடம் மற்போரில் தோற்று துவாரகை அரசை அவருக்கு அளிக்க முயல்வது. மற்றொன்று ரைவத மலையில் தவத்தில் இருக்கும் அவரை  மூதாதையர் கடனை நினைவுபடுத்தி நாடு திரும்ப வைப்பது. உண்மையில் அவரை அவன் தடுக்கத்தான் பார்த்தானா?

    ஒரு விண்ணூர்தி உள்நாட்டில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டு அனைத்துப்பணிகளும் நிறைவடைந்த நிலையில் இருக்கிறது.  அது விண்ணுக்கு ஏவப்படும் நாள் . அனைத்து வல்லுநர்களும் அதற்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்

கள்.  ஏவும் கட்டளைநிரல்கள் துவக்கப்படுகின்றன. அப்போது திடீரென்று  தலைமைப்பொறியாளர் ஊர்தி விண்ணேவலை நிறுத்தச் சொல்கிறார். அனைத்தும் நிறுத்தப்பட்டு விண்ணேவல் பல நாட்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.  அடுத்தமுறை  இதேப்போல் மீண்டும் விண்ணேவலுக்கான பணிகள் துவக்கப்பட்டு மறுபடியும் இடையில் நிறுத்தப்படுகிறது.   சில மாதங்கள் கழித்து மூன்றாவது முறையாக மீண்டும் விண்ணேவும் பணிகள் துவக்கப்பட்டு இம்முறை வெற்றிகரமாக விண்ணூர்தி வானில் ஏவப்படுகிறது. கணித்தபடி அனைத்தும் சரியாக நடக்கிறது. அனைவரும் பொறியாளர் குழுவை பாராட்டுகிறார்கள். 

        ஆனால் ஏன் முதல் முறையே விண்ணூர்தி ஏவப்படவில்லை? விண்ணுக்கு அனுப்பத்தானே அது இருக்கிறது.     நமக்கு அது முதல்தடவை  பார்த்ததுபோல்தான் இப்போதும் இருக்கிறது.  நம் கண்களுக்கு தெரியாத ஏதோ ஒரு பிழை பொறியாளருக்கு தெரிந்திருக்கும். அவருக்கு  எதோ ஒரு ஐயம் வந்திருக்கலாம். அல்லது கடைசி நேரத்தில் ஊர்தியில்  பழுதுஒன்றை கண்டிருக்கலாம். அதை நேர் படுத்துவதற்குத்தான் அதன் விண்ணேவல் இருமுறை தடுக்கப்பட்டிருக்கிறது என அறிகிறோம்.
     அனைவரையும் ஐயமற அறியும் கண்ணன் அரிஷ்டநேமியையும் முழுதுமாக புரிந்து இருக்கிறான். அரிஷ்டநேமி சிறுவது முதல் பற்றற்றவனாக தெரிந்தாலும் அவர் நாட்டுக்குள்தான் இருக்கிறார். நாட்டை வென்று ஆள்வதுபற்றிய ஒரு சிறு எண்ண இழை அவருள் ஓடுவதாக கண்ணன் அறிந்திருப்பான். ஆகவே அவனை தன் நாட்டுக்கு வரவைக்கிறான். நாட்டும் மக்கள் அவரை விரும்பும்படி செய்கிறான். அவரை சன்டைக்கு அழைத்து அவரிடம் தோற்று தன் அரசை அவருக்களிக்கிறான். ஒரு மிகச்சிறு கணம் அதை அனுபவிக்கும் அவர் அரசாளும் அனுபவத்தை அறிந்து மீள்கிறார். ஒரு அறியாப்  பொருளின் மீதான ஆசையை துறக்க முதலில் அந்தப்பொருளையும் அது அளிக்கும் அனுபவத்தையும் முழுதறிய வேண்டும்.  அரிஷ்டநேமியின் உயரிய உள்ளம் அந்த ஒரு கணத்தில் அரசாளும் அனுபவத்தை முற்றிலுமாக அறிகிறது.  அந்த ஒரு ஆசையில் இருந்து அவர் விடுபடுகிறார். துறவுகொண்டு ரைவத மலை செல்கிறார்.

   கண்ணன் மீண்டும் ரைவத மலை சென்று அவரை அவரின் மூதாதையருக்கு ஆற்ற வேண்டிய கடனை நினைவுபடுத்துகிறான். தன்னை விலங்கல்ல மனிதன் என உணரும் ஒவ்வொருவரும் அதற்காக தன் முன்னோர்களுக்கு கடமைப்பட்டவர்கள். அவர்களின் காலம் காலமாக சேர்த்திருக்கும் ஞானம்தான் அவனின் சிந்தனைத்திறனை மேம்படுத்தி வந்திருக்கிறது. கண்ணன் சொல்வது அவருக்கு சரியென தோன்றுகிறது. அதன்பொருட்டு அவர் இல்லறம் புக மீண்டும் நாடு திரும்புகிறார். அவர் மனம் இதுவரை சென்றிருந்த துறவுப்பாதை, அவர் இதுவரை அடைந்திருந்த ஞானம், இதை  மீறி அவர் மணம் புக வருகிறார். 

      ஆனால் அந்த பேரியற்கை அவர்  செல்ல வேண்டிய வழியில் போக அவருக்கு சுப்ரதீபத்தை அனுப்பிவைக்கிறது. அது அவரின் மூத்தோர் கடன் என்ற இறுதி தடங்கலை கடக்க ஆடுகள்  கொல்லப்படும் களத்திற்கு அழைத்துச்செல்கிறது.  ஆயிரக் கணக்கான ஆடுகள் கொல்லப்படும் மற்றும்  கொல்லப்பட காத்திருக்கும் காட்சி அவரெதிரில் காட்டப்படுகிறது. ஆடுகள் தன் ஆவிகளை இழந்து வெறும் ஊன்தொகுதி  என ஆகின்றன.  அந்த ஆடுகளுக்கும் முன்னோர் உண்டல்லவா. அவையெல்லாம் இறந்திருக்கின்றன.
 
 இறந்தபின்னர் மனிதனாக இருந்தாலும் ஆடாக இருந்தாலும் வெறும் அழுகும் ஊன் என ஆகின்றன.  . நாம் உடல் கொண்டு வாழும் வாழ்வை பிறிதொரு உயிரின் வாழ்வை விட உயர்ந்தது எனும் நினைப்பு ஒரு பேரகங்காரம்.  ஆடுகளுக்கு இல்லாத முன்னோர் கடன் மனிதனுக்கிருக்கிறது என்பது மனிதனின் ஆணவம் மட்டுமே  என அவருக்கு தெரிகிறது.  மனிதர் விலங்குகள் முதலிய எல்லா உயிர்களும் சமம். ஒன்றுகொன்று உயர்வு பேதம் இல்லை
 
.ஆகவே மனிதன் தன்னை ஒப்பனை செய்துகொள்வதன் மூலம் தன்னை பிறர் உயிகளிடமிருந்து உயர்த்திக்கொள்ள பார்க்கிறான். என்பதை அறிகிறார்.  தன்னை  உயர்த்திக்காட்டும் ஆடைகளை அலங்கரிக்கும் அணிகலன்களை அகற்றிக்கொள்கிறார்.மேலும் தோலுரித்து கிடக்கும் ஆடுகளுக்கிடையில் வேறுபாடுகள், தனித்த அடையாளங்கள் என ஏதுமில்லை. உடல்கொண்ட அனைத்தும்  உயர்வு தாழ்வு அற்று சமமென ஆகின்றன. ஆகவே தன் ரோமங்களையும் களைந்துகொண்டு தன் உடல் மூலம் கொண்ட இறுதி அகங்காரத்தையும் அகற்றிக்கொள்கிறார். 
 
இப்படி அவரின் அனைத்து தடங்கல்களும் அகன்றுபோக சுப்ரதீபம்  அவரை முக்திக்கு கொண்டு செல்கிறது. தரையிலிருந்து விண்ணூர்தி பொறியாளர்  பழுதுகள், தடங்கள்கள் நீக்கி விண்ணுக்கு விண்ணூர்தி செல்ல உதவுவதைப்போல் கண்ணன் இங்கு செயலாற்றுகிறான்.

   இன்று காண்டீபத்தில் தத்துவபோதனைகள் என ஒரு வரிகூட இல்லை . வெறும் காட்சி விவரணைகள்தான்.  காட்சிப்படுத்தலின் வழியாக ஒரு மகாத்மாவின் முக்தியடைதல்  சொல்லப்படுகிறது. நாமும் அங்கிருக்கும் ஆடுகள், மற்ற மனிதர்களைப்போல் அவரின் முக்திப்பெருநிலையை காணமுடிவது  என்பது  நமக்கு கிடைப்பதற்கரிய  பேரனுபவமாகும்.  இவனுபவத்தை எனக்கு வழங்கிய வெண்முரசை தொழுது வணங்குகிறேன்.   
 
தண்டபாணி துரைவேல்