Saturday, November 21, 2015

தேரோட்டி – அமிலமழை



இனிய ஜெயம்,


இன்று சுபத்திரை கரம் பற்றி அவையை விட்டு வெளியேறி, வாயிலில் நிற்கும் வீரன் வசமிருந்து வில்லையும் அம்புகளையும் அர்ஜுனன் எடுத்துக் கொள்ளும்போது மிகுந்த பரவசம் எழுந்தது. இது அனைவருக்கும் அவன் தன்னை காண்டீபன் என தெரியப்படுத்தப் போகும் கணம் அல்லவா?

சுபத்திரை வசம் அர்ஜுனன் கேட்கிறான் ''இளைய யாதவர் சரியாக என்ன சொல்லில் சொன்னார்?''

சுபத்திரை ''சிவயோகி கிளம்பப் போகிறார்'' என்று.

ஆம் அதுதான் நீலனின் உத்தரவு சிவயோகி கிளம்ப்பட்டும். அதன் பிறகே அர்ஜுனன் சுபத்திரைக்கு தன்னை அறிவிக்கிறான். இது முதல் தருணம்.

தருனங்களுக்குள் எத்தனை அழகு? நேமிநாதர் மலையிலிருந்து தான் வணங்கிய கூழாங்கல்லை நகருக்குள் உடன் கொண்டு வருகிறார்.

அர்ஜுனன் தனது வில்லை ஊருக்கு வெளியே ஒரு மரத்தில் வைத்து விட்டு மலை ஏறுகிறான்.

நேமி அர்ஜுனன் இருவரும் மீண்டும் தங்கள் தன்னற கருவியை கைக்கொண்டு விட்டனர்.

கடுங்குளிர், அமிலமழை, அனல் குழம்பு, நச்சரவங்கள், கூர் உகிர் மிருகங்கள், சித்தம் தெறிக்கும் அமைதி, அகம் அழிக்கும் இன்மை.  அத்தனை பெரும் இடர்களும்  அஞ்சி சரியவேண்டிய ஒன்றல்ல. வணங்கிக் கடக்க வேண்டிய ஒன்று.  வணங்கிக் கடந்தவன் கதையை சொல்லி முடிக்கையில் சூதனை சுற்றி ஒருவரும் இல்லை.

அந்த சொல் நிகழ்ந்த யாருமற்ற நிலத்தை சூதன் குனிந்து வணங்குகிறான். மானசீகமாக நானும்.
கடலூர் சீனு