Tuesday, December 22, 2015

வெய்யோன்மொழி



அன்பிற்கினிய ஆசான் ஜெ அவர்களுக்கு,\

நலமாகவே இருக்கிறேன். உங்கள் பதில் மிகுந்த மன எழுச்சியை அளித்தது.
மிகச்சுருக்கமாக, மிகச்சரியாக என்னுடன் பேசிவிட்டீர்கள். நன்றி.

வெய்யோன்…… தொடக்கமே காண்டீபத்தை விஞ்சும் படைப்பாக மலரப்போவதைமுன்னறிவிக்கிறது. உங்கள் எழுத்தாற்றல் மீண்டும் ஒருமுறை உச்சம்தொடப்போவதை உணர்கிறேன்……இதுவரை என் விழிதொட இயலாத….மனம் உணர இயலாத பலவற்றை உணர முடிவதுபோல உணர்கிறேன்.வார்த்தைகள்…….. பொறுத்தால் எல்லாவற்றையும் எடுத்துரைக்க வேண்டியிருக்கும் போல…..

“திகைத்து விலகிச் சுழன்று விழுந்துருண்டு கூந்தல் பரப்பி தரையில் கிடந்த
அவள் தலையில் விழிகள் இறுதி நோக்கை சிலைச்செதுக்கென
மாற்றிக்கொண்டிருந்தன. தெறித்த குருதி அரைவட்டமென, செவ்வரளி மாலைச்சுழலென குடில்சுவரிலும் நிலத்திலும் படிந்திருந்தது. உடல் விதிர்த்து
சுவரோடு முதுகொட்டி நின்று நடுங்கிக்கொண்டிருந்தனர் பிற உடன்வயிற்றோர்..”

 “உன் நெறியில் சென்று குன்றாச்சிறப்பை அடைக. விண்நோக்கி உதிர்க”

“அறுந்து விழுந்த மணிமாலையென மொழி கீழே விழுந்து சொற்கள் உருண்டு
மறையக்கண்டு நின்ற அவன்…”

“கொல்லும்தோறும் பெருகும் சினமும் வெல்ல வெல்ல எழும் வேட்கையும்……”

கண்முன் தலை விழுந்தது ஆசானே…..சிலைச்செதுக்கென மாற்றிக்கொண்டிருந்தன…உடன்வயிற்றோர்….விண்நோக்கி உதிர்க…… சொல்லாட்சிகளில் மனம் பூரிக்கிறது…….

பரசுராமன் மேல் விழுந்த மழைத்துளியென…… அவையிலமர்ந்த முகமற்ற ஒருவனென….உணரவைத்து விட்டீர்கள்…….அனைத்து அரியணைகளுக்கும் மேல் அமரும் தகுதிகொண்டவனாக வெய்யோன் இருப்பான்என்பது புலனாகிறது. ஆனால் ஒவ்வொருமுறையும் ஒன்றையொன்று விஞ்சும் படைப்புகளை நீங்கள் தந்துவிடுவதால் அப்படிச்சொல்லவும் தயக்கமாகஇருக்கிறது……

உங்கள் நேரத்தை விரிவான கடிதங்கள் வீணடிக்கும் என்று உணர்வதால்….
சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்……
வணங்குகிறேன்,

பிரபு
சேலம்.