Sunday, April 17, 2016

தன்னை அவிழ்த்து அவிழ்த்து உள்சென்று தான் எதுவென அறிதல்(பன்னிரு படைக்களம் 19

 

 முதற்கவசம் ஆண்மையெனும் நிமிர்வால். இரண்டாம் கவசம் தனிமையால். மூன்றாம் கவசம் சொல்லெண்ணும் கூர்மையால். நான்காம் கவசம் விளைவு உன்னும் தயக்கத்தால். ஐந்தாம் கவசம் சினத்தால். ஆறாம் கவசம் தன்னை நோக்கித் திரும்பிய நோக்கால். சென்று சென்று முடிவிலாதிருந்தன அவை. அக்கவசங்களுக்கு வெளியே நின்று அவர்கள் தட்டிக்கொண்டிருந்தனர். அவன் அவற்றைத் திறந்து வெளிவந்தாகவேண்டுமென பின்னர் உணர்ந்தனர். அவனாலும் அது இயலாதென்று பின்பு அறிந்தனர்.

மெல்லமெல்ல அந்தக் கவசப்பரப்புக்கு அவர்கள் பழக்கப்பட்டனர். அதன் ஒவ்வொரு பூச்செதுக்கும் வளைவும் அவர்களுக்குத் தெரிந்தவையாக ஆயின. அவை அவர்களின் கனவில் எழத்தொடங்கின. அவையே அவன் என ஆனபோது அவற்றையே அவர்கள் விரும்பத்தொடங்கினர். அக்கவசத்தின் மலர்களை மெல்ல விரலால் தொடும்போதே அவர்கள் உணர்வெழுச்சி கொண்டனர். அக்கவசங்களுக்குள் எங்கோ அவன் இருக்கிறான் என்பதை அவர்கள் முற்றிலும் மறந்தனர். ஆயிரம்கவசங்களின் மனைவியரென்றே அவர்களின் ஆன்மா நம்பத்தலைப்பட்டது.
 
   அவன் புராண காலத்து அசுரன் அதனால் ஆயிரம் கவசங்களை அணிந்திருக்கிறான்.   ஆனால் நாம் இப்போது கவசங்களுக்கு பதிலாக ஆடைகளை அணிந்திருக்கிறோம். ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள், குணங்கள், பாவனைகள், தோரணைகள், என பல பல அடுக்குகளாக ஆடைகளை நாம்  அணிந்துகொண்டிருக்கிறோம். அதனால் ஒரு மனிதனைக்  காண்கையில் அவனின் உடலின்மேல் போடப்பட்டுள்ள பல அடுக்கு ஆடைகளின் தொகுதியைத்தான் காண்கிறோம்.  அவனே அந்த ஆடைகள் தரும் தோற்றத்தைத்தான் தான் என நினைத்துக்கொண்டிருக்கிறான்.  ஆனால் இந்தத் தோற்றம் அவன் உண்மையான தோற்றம் இல்லை என்பதை நாம் மறந்துவிடுகிறோம். ஒருவனை இந்த ஆடைகளைவைத்து எடைபோடுகிறோம். ஒருவனுக்கு  நாம் மதிப்பளிப்பது, இழித்துரைப்பது, பாசம் வைப்பது, நட்புகொள்வது அனைத்தும் இந்த உடைகளின் வண்ணங்களை வடிவங்களை பளபளப்புகளைக் கண்டுதான்.   மற்றவர்களின் உடலை அறியாதிருத்தல் சரி ஆனால் நாம் நம்முடலையாவது அறிந்திருக்கிறோமா? என்றாவது அனைத்து ஆடைகளையும் துறந்து நம் நிர்வாணத்தைக் கண்டிருக்கிறோமா?  ஆடைகளுடன் இருந்து இருந்து நாம் ஆடைகளையே நம் உடலின் பகுதியென உணர்கிறோம்.   எங்கு ஆடை முடிந்து நம் உடல் தொடங்குகிறது என்பதையே அறியாதிருக்கிறோம். 
  எவரோ நம்மை இந்த ஆடைக்குவியலில் நம்மை சிறை வைத்திருப்பதாக அறிகிறோம். ஆனால்    நாம் மேலும் மேலும் இந்தக் ஆடைக்குவியலை அள்ளி அள்ளி அணிந்துகொண்டும் இருக்கிறோம்.   நம் உடலை அந்த ஆடைக்குவியலின் சுமை அழுத்துகிறது. அதனுள் நாம் புழுங்கிக்கொண்டிருக்கிறோம்.   இந்தக் குவியலில் சிக்கியிருக்கும் நாம் எப்போதாவது வெளிவரமுடியுமா என சிந்திப்பதுண்டு.  ஆனால் அடுத்த கணம் இது இயலாதது என நம்புகிறோம்.  ஆடையற்றிருந்த அனுபவம் அற்ற காரணத்தால் அதைப்பற்றிய அச்சத்தில்  ஆடைக்குவியலை சகித்துக்கொள்கிறோம்.  சிறிது நேரத்தில் ஆடைக்குவியல்தான் சுகம் என பழைய எண்ணத்திற்கு திரும்பி விடுகிறோம். 

     அரிதிலும் அரிதாக யாரோ ஒரு சிலர் இந்த ஆடைக்குவியலிலிருந்து உண்மையாகவே விடுபட்டு வெளிவர நினக்கிறார்கள். ஒவ்வொரு ஆடையாக துறந்துகோண்டு வருகிறார்கள், இதுதான் கடைசி ஆடை என நினைத்து அவிழ்க்கையில் எப்போதும் இன்னொரு ஆடை அதற்கடியில் இருக்கிறது,  இறுதியில் யாரோ ஒருவன் தான் தன் இறுதியாடையையும் துறக்கிறான்.  அப்போது அவன் காணும் அவன் உடல் எப்படி இருக்கும்? அல்லது உடலென்று ஒன்று இருக்குமா? அவன் தன் ஆடைகளை உரித்து உரித்து முடிவில் உடலென காண்பது  வெறும் வெற்றிடத்தையா?   அவன்  அந்த வெற்றிடத்தை  ஒருவேளை ஆகாயம் என அறிவானோ? அல்லது அவன் தன்னைப்  பிரபஞ்சத்துளி அல்லது அந்தப் பிரபஞ்சமே,  பெரு வெளியே தான் என உணர்வானா?  ஆடைக்குவியல்தான்  தான் அந்தப் பெருவெளியென அவனை உணரவிடாமல் சிற்றுயிராய் அவனை கருத வைத்திருந்ததா?  ஆடை முழுதும் துறந்த அவன் அந்தப் பெருவெளியே தானென ஆகி அதில் கரைந்து நிற்பானா?

தண்டபாணி துரைவேல்