Monday, April 18, 2016

சகுனங்களில் தென்படும் வருங்காலம் (பன்னிரு படைக்களம் 20)


 

 சகுனம் பார்த்து வருங்காலத்தைப்பற்றி குறி சொல்லுதல் என்பது பழங்காலத்தில் இருந்து இன்னும் வழக்கத்தில் இருந்துவருகிறது.  உலகின் அனைத்துப் பகுதி மக்களிடம் இது இருந்து வருகிறது.  இது வெறும் மூடத்தனம் என்று சொல்லி விடுவது எளிது.   ஆனால் வெறும் மூடத்தனமாக இருந்தால்  இந்த வழக்கம் எப்படி இவ்வளவு நாட்களாக பழக்கத்தில் இருக்கிறது. இதன் பின்னால் ஏதேனும் தர்க்கம் சார்ந்த பொருள் இருக்குமா என சிந்தித்துப் பார்க்க நினைக்கிறேன். 
  

வெண்முரசில் இத்தகைய சகுனங்களின் மூலம் வருங்கால நிகழ்வுகளை கோடிட்டு காட்டுவது பல முறை வந்திருக்கிறது. காந்தாரி திருமணமாகி வரும் போது சிவப்பு நிறத்தில் மழை பொழிவது, துரியோதனன் பிறப்பின் போது ஏற்படும் தீய சகுணங்கள், இப்போது அஸ்தினாபுரத்தில் காகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போன்றவை அவற்றில் சில.  உண்மையில் அவற்றுக்கு பொருள் இருக்கிறதா?
 

 வருங்காலத்தை யூகிப்பது என்பதில் அனைவருக்கும் திறமை இருக்கிறது. இதுவரை நாம் அறிந்திருக்கும் புள்ளிவிவரங்களை வைத்து   கடந்தகாலத்தில் அடைந்த அனுபவங்களைகொண்டு நாம் நன் அன்றாட வாழ்க்கை சம்பந்தமாக நாம் யூகித்து அதன்படி நடந்து பலமுறை நம் செயல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் இது யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய செயல். அனால் சிலர் எத்ரிபார்க்காத ஒன்று நடக்கப்போகிறது என்று யூகித்து சொல்வார்கள். அது நடக்கும்போது வியப்பாக இருக்கும். அவர்களால் அப்படி சொல்ல முடிந்ததற்கு காரணம், நாம் காணாத ஒன்றை அவர்கள் கண்டிருக்கலாம். நமக்கு தெரியாத  விவரம் அவர்களுக்கு தெரிந்திருக்கலாம். நாம் சிந்திக்காத கோணத்தில் அவர்கள் சிந்தித்திருக்கலாம். அதனால் அவர்கள் நம்மால் யூகிக்கமுடியாத ஒன்றை யூகிக்க முடிந்திருக்கலாம்.
   
 
 இவற்றுக்கெல்லாம் மேலாக எவ்வித  மேலதிகமான தகவலோ அனுபவமோ இல்லாமல் நம்மை யூகிப்பதில் சிலர் தோற்கடித்துவிடுகின்றனர். பெண்கள்  பலசமயம் இப்படி சரியாக எதிர்வருவதை யூகிப்பார்கள். நம்மால் அப்படி யூகிக்க முடியாமல் போவதற்கு நம் தர்க்க அறிவு ஒரு  காரணம். ஏனென்றால் நாம் நம்முள் தர்க்க அறிவோடு எண்ணும்போது  நம்மை அறியாமல் ஒரு சாய்வு நிலை  எடுத்துக்கொண்டு  சிந்திப்போம். அரசியல் தத்துவம் போன்ற சாய்வுகளோடு, அதீத தன்னம்பிக்கையோடு சிந்தித்து எடுக்கும் முடிவுகள் தவறிப்போய்விடலாம். பெண்கள் பெரும்பாலும் இப்படி தத்துவ்ங்கள் அல்லது அரசியல் காரணங்களை பெரிதென கொள்ளுவதில்லை. அவர்கள் தன் சுய சிந்தனையைவிட உலகத்தில் என்ன நடக்கிறது என கூர்ந்து கவனிப்பதன்மூலம் தன் யூகங்களை அடைகிறார்கள். 
      
 
மனித மனம், மூளை மிக ஆற்றல் வாய்ந்தது. அதன் திறனில் மிகக் குறைவான பாகத்தைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். நாம் அறியாத பலவற்றை  ஆழ்மனம் அறிந்திருக்கிறது. ஆழ்மனம் மனிதர்களின் கூட்டு மனதோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பிலிருக்கிறது. தனி ஒருமனிதனாக நமக்கு நம் எதிர்காலத்தை காண முடியாதிருக்கிறோம்,.  ஆனால் மனித சமூகம் கூட்டாக  ஒரு விராடபுருஷன் என ஆகி நம்மைவிட எதிர்காலத்தை சிறந்த முறையில் யூகிப்பவனாக இருக்கிறான்.  விராட புருஷனின் அந்த அறிவோடு நம் ஆழ் மனம் தொடர்பிலிருக்கிறது. ஆனால் நாம் அதை உள்ளிருந்து வெளிக்கொணர இயலாததவர்களாக இருக்கிறோம். அதை தியானம் மூலம் வெளிக்கொணரும் சித்து அறிந்தவர்கள் எதிர்காலத்தைப்பற்றி குறி சொல்பவர்களாக, நிமித்திகர்களாக  இருக்கலாம் என நினக்கிறேன்.  
   
 
இந்த ஆழ்மனம் அறிந்திருப்பதை வெளிக்கொணர தூண்டில்போல வெளியுலகில் நடக்கும் அதிசய நிகழ்வுகள் அமைந்து விடலாம்.   பக்கத்து நாட்டில் அல்லது அருகாமை காட்டில் இருக்கும் காகங்கள் ஏதோ ஒன்றினால பாதிக்கப்பட்டு உணவு உறைவிடம் தேடி அஸ்தினாபுரம் வந்திருக்கலாம்.  அவை எதோ தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால் அவற்றின் எச்ச்ங்களின் மூலம் நோய் பரவியிருக்கலாம். ஆனால் இது மனிதனின் அன்றாட நடைமுறைக்கு மாறானதாக இருப்பதால்  மக்களுக்கு அதிசயமாக அச்சமூட்டுவதாக இருக்கிறது. அவர்கள் இதை ஏதாவது  ஒன்று நிகழப்போவதற்கான அறிகுறியாக இருக்கலாம என நினக்கிறார்கள். இது ஒரு தூண்டில்போல நிமித்திகனின் ஆழ்மனதில் இறங்கி அது கொண்டிருக்கும் யூகத்தை வெளிக்கொணர்கிறது.  வீட்டிலிற்குள் இதுபோல நடதால் வீட்டு நபர்களுக்கான நிகழ்வை எதிர் நோக்குவார்கள். ஆனால் நாட்டில் நிகழ்வதால் நாட்டின் நிகழ்வு ஒன்றை எதிர் நோக்குகிறார்கள்.  அப்போது அவர்கள் கூட்டு மனம் துரியோதனனின் தற்போதைய நடவடிக்கை, பாண்டவர்களிடம் கலந்து உறவாடல் மிகக் குறைவாக இருப்பது போன்றவற்றிலிருந்து என்ன நிகழலாம் என யூகிக்க முயல்கிறது.  நிமித்திகர்கள் இவ்வாறு சகுனங்கள், கோள்களின் நிலைகள்  தூண்டில்களாக பாவித்து தன் ஆழ்மனதிலிருந்து  எதிர்காலத்தைப்பற்றிய யூகத்தை கொள்கிறார்கள் என பொருள் கொள்ளலாம் என நினைக்கிறேன். 

தண்டபாணி துரைவேல்