Sunday, April 24, 2016

அரக்கன் சிலை செய்தல் (பன்னிரு படைக்களம் 29)


     கோயில்களுக்குச் சென்றால் பல தெய்வங்களின் பலவித வடிவங்களினான சிலைகளைக் காண்கிறோம். பல தேவர்கள், அவர்களின்  வாகனமாக விளங்கும் விலங்குகள் பறவைகள் சிலைகள் எல்லாம இருக்கும். ஆனால்  வெகு குறைவாக அரக்கர்களின் சிலைகள் இருக்கும். அவைகூட பெரும்பாலும் தெய்வத்தின் காலடியில் கொல்லப்படும் நிலையில் இருக்கும். அரிதாக அவர்கள்  ஆளுமையை சித்தரிக்கும் சிலைகள் தென்படுகின்றன.  அதற்கு  ஒரு காரணம் மக்கள் தெய்வங்களின் சிலைகளையே பார்க்க விழைகிறார்கள் என்பது. இன்னொன்று தெய்வங்களின் சிலையை வடிப்பது சிற்பிக்கு ஒருவகையில் எளிதானது. முகத்தில் புன்னகையை தவழவிட்டால் போதும் காணும் பக்தன் அதில் தேய்வீகத்தை கண்டுபிடித்துக் கொள்வான.  அப்படி புன்னகை சரியாக வரவில்லையென்றால் சுவாமி தியானத்தில் இருக்கிறார் என நினைத்துக்கொள்வான். ஆனால் ஒரு அரக்கனை  அவன்  குரோதத்தை, பேராசையை, ஆணவத்தை வெளிக்கொணரும்படி சிலைவடிப்பது மிகச்சவாலானது.             
   
     ஒரு பெரிய  நாவல் உருவாவது என்பது விஷ்ணுபுரத்தில் இருக்கும் கோயிலைக் கட்டுவதுபோன்ற பெரிய வேலை. அதில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிலைகளைப்போல்  வடித்தெடுக்கப்படவேண்டும். ஆனால் ஒரு சிறந்த நாவலில் உருவத்தை செதுக்குவதற்கு அளிப்பதைவிட அதைக முக்கியத்துவத்தை அவற்றின் குணாதிசயங்களை சித்தரிப்பதற்கு கொடுக்கப்படும்.  அப்படி சித்தரிப்பில் எழுத்தாளரின் நேரடிக்கூற்று மிகக் குறைவாக இருப்பதும் அவர்களின் குணாதிசயங்கள் அவர்கள் செய்கைகளை, பாவனைகளை குறிப்பிடுவது மற்றும் அவர்களின் பேச்சுக்களின் மூலம் சொல்வது சிறப்பு.  அதே நேரத்தில் மிக நுண்ணியதாக அவர்கள் மனம் செல்லும் வழியை, அல்லது அவர்கள் ஆளுமை உருவான சித்திரத்தை அளிக்கையில் வேறுவழியின்றி அவர்களின் சிந்தனை ஓட்டத்தை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  அந்த நிலையில்கூட வெண்முரசு உரையாடல்களின் மூலமாக அதை நிகழ்த்துகிறது.   இருந்தும் பலசமயம் ஒரு கதாபாத்திரத்தின் ஆழ்மனம் செயல்படும் விதத்தை அவன் தன் எண்ணங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறான என்பதை விளக்கவேண்டிய தருணங்களில் நேரடியாக அவன் சிந்தனையோட்டத்தை சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போது கனவு, மயக்க நிலையில் காணும் மாயதோற்றங்கள் என பல வழிகளை கையாள்கிறது.


        உண்மையில் நல்லவெரென இருக்கும் நாயகப் பாத்திரங்களின் சிந்தனையை சித்தரிப்பது எளிது. ஏனென்றால் நல்லவனாக இருப்பது என்பது ஒரு வகையில் இயல்பானது. ஒருவன் திருடாமல் இருக்கிறன் எனபதற்கு அவன் நல்ல உள்ளம் காரணம் என்று ஒரு வரியில் சொல்லிச்சென்றுவிடலாம்.   ஆனால் பெரும்பாலும் கதாசிரியர்கள் நல்லவர்களின் மனங்களை சித்தரிப்பதில் அக்கறை காட்டுகிறார்கள்.  ஒரு எதிர் நாயகனை சித்தரிக்கையில் சட்டென்று அவனை  ஒரு அரக்கன்போல் ஆக்கி அவன் அப்படித்தான் என சில வரிகளில் சொல்லிச் சென்றுவிடுகிறார்கள்.  ஆனால் ஒரு எதிர் நாயகன் எப்படி உருவாகிறான் எனக் காட்டுவதுதான் இருப்பதிலேயே மிகச் சிக்கலான வேலை.
     

 நாம் ஒரு எதிர் நாயகன் சிந்திக்காமல் தன் மனம் போனபடி தீய செயல்களில் ஈடுபடுகிறான் என நினைக்கிறோம். ஆனால் உண்மையில் தீய செயல்களில் ஈடுபடுபவன்தான அதிகம் சிந்திக்கிறான்.  உலகில் பிறக்கும் எந்த ஒரு மனிதனும் ஓயாமல் சிந்தித்துக்கொண்டே இருக்கிறான். தெரிந்தே ஒரு தவறைச் செய்யப்போகும்  ஒருவன் தவறு செய்யாத ஒருவனை விட அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.  ஏனென்றால் தன்னை சமாதானம் செய்துகொள்ளாமல் எவன் ஒருவனும் எந்த ஒரு செய்கையிலும், அது நல்லதோ கெட்டதோ,  ஈடுபடமுடியாது. ஆகவே ஒரு தவறான செய்கைக்கான ஒப்புதலை அவன் தன்னிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த ஒப்புதலை அவன் எப்படி சிந்தித்து  பெற்றுக்கொள்கிறான் என்பதை சொல்லுதல் மிகச் சவாலான வேலை.  அவன் கெட்டவன் அதனால் அப்படிச் செய்கிறான் என்பதைப்போல பெரும்பாலான கதாசிரியர்கள் எளிதாக அதை கடந்துவிடுகிறார்கள். ஆனால் வெண்முரசு எதிர் நாயகர்கள் உருவாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. அவர்கள் பிறப்பிலிருந்து அவர்கள் ஆளுமை எப்படி வளர்ந்து அவர்களின் குணங்கள் எவ்வாறு  உருவாகி உறுதி பெறுகின்றன எனக் காட்டுகிறது. அவர்கள் எப்படி தன்னுடைய நடத்தைகளுக்கான சிந்தனையை உருவாக்கிக்கொண்டனர் என்பதை முழுமையாக நம் கண் முன் நடத்திக்  காட்டுகிறது.  ஜராசந்தனின் உருவாக்கம், சிசுபாலனின் உருவாக்கத்தில் வெண்முரசு கொள்ளும் சிரத்தை மிகவும் சிறப்பானது. ஆழமற்ற வாசிப்பில், இவை, அதுவும் இந்தளவுக்கு தேவையா எனத்தோன்றும். ஆனால் மிகச் சரியாக உளவியல் நுட்பங்கள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. இதை பொறுமையாக படித்து உள்வாங்கிக்கொள்ளும் வாசகன் மிகச்சிறந்த உளவியல் ஞானத்தை அடைவான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தண்டபாணி துரைவேல்