Tuesday, April 12, 2016

ஆசுரம்



வாழ்க்கை புதுப்புது மனிதர்கள் மீதேறி புதுப்புது ஆடலை நிகழ்த்தி  மீண்டும் மீண்டும் ஒரே நிலைப்புள்ளியில் வந்தே நின்று அமைதிக்கொள்கிறது.

காசி மன்னனுக்கு மகளாகப்பிறந்து ஒன்றென வளர்ந்து விசித்திரவீரியனுக்கு மனைவியாகி திருதராஷ்டிரனையும், பாண்டுவையும் பெற்ற அன்னைகள் அம்பிகை அம்பாலிகைகள் குழந்தைகள் பொருட்டு நெஞ்சம் பிரிந்து உள்ளம் கறுத்து நொந்து இறுதியில் பாண்டுவின் இறப்பில் ஒருவரை ஒருவர் தழுவி ஒருவராகி காடேகுவார்கள். 

அதே காசி மன்னனுக்கு மகளாகப்பிறந்து அன்னதை அணிகை இருவரும் ஒருவரென வளர்ந்து பிருஹத்ரதனை மணந்து ஒருவரென வாழ்ந்து குழந்தையின் காரணமாக இருவரென பிரிந்து, ஒருவரை ஒருவர் விளக்கி வாழ்ந்து,  பெற்றக்குழந்தை பாதிப்பாதி என்று கண்டுக்கொண்டு மீண்டும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக்கொண்டு கண்ணீர்விடுகிறார்கள்.

அவர்கள் அணைத்துக்கொள்வதும் இவர்கள் அணைத்துக்கொள்வதும் ஒரு கணத்தின் சிறு நிகழ்வுதான் அதற்குள் வாழ்க்கையின் எத்தனை பெரிய நாடகம் நடந்து முடிந்துவிடுகிறது. அந்த நாடக்தின் இறுதியில் வந்து நிற்கும் தருணத்தில் மானிட உணர்வுகள் அன்றென்றும் இன்றென்றும் வேறு பட்டு நிற்பதில்லை. 


உறவாக, நட்பாக, சுற்றமாக கூடி வாழும் மானிடர் ஏதே ஒரு கணத்தில் பிரிந்து ஏதோ ஒரு கணத்தில் வரும் பெரும் துயரத்தை ஆழத்தில் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது. அந்த துயரும் அவர்களை வந்து அடைகிறது. அந்த துயரின் வழியாக அவர்கள் அனைத்து குற்றங்களையும் மறந்து இணைகிறார்கள்.

கௌதமர் கொடுத்த கனியை இரண்டாக பிரித்து தனது மனைவிகளுக்கு பிருஹத்ரதன் கொடுத்தபோது இருமனைவியரும் மகிழ்கிறார்கள், மீண்டு விட்டோம் என்று பிருஹத்ரதனும் மகிழ்கின்றான். ஆனால் இதை எல்லாம் கண்டு பத்மர் நீள்மூச்செறிகிறார்.   வரும் நிலையறியாத மனிதர்கள் அருகில்தான் வரும் நிலையறியும் மனிதரும் இருக்கின்றார். ஆனால் அவரையும் தாண்டி தெய்வத்தின் ஆடல் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது

ராமராஜன் மாணிக்கவேல்