Saturday, July 23, 2016

கர்மயோகம்



கர்மயோகம் ராஜயோகம் பக்தியோகம் ஞானயோகம் என்னும் நான்கு யோகத்திற்குள்ளும் கர்மயோகம் இருக்கிறது. கர்மயோகம் இல்லாமல் எந்த யோகத்தையும் கைக்கொள்ளமுடியாது. கர்மயோகத்தின் அளவை கூட்டியோ குறைத்தோ மற்றையயோகத்தை கொள்ளமுடியும்.

உத்தாலகர் கர்மயோகத்தை கைக்கொண்டவராக நிற்கின்றார். ஸ்வேதகேது ஞானயோகத்தை கைக்கொண்டவராக நிற்கின்றார். கர்மம் செயல் செயல் என்று சேர்ந்து செயலில்  உள்ள விளைவை அடைகின்றது. ஞானம் விளைவு விளைவு என்று விரிந்து விளைவில் உள்ள செயலை அடைகின்றது.

உத்தாலகர் வயல் சமைத்து பயிர்தொழில் செய்கிறார், பயிர் செழிக்க நீர் நிறைய தன்னையே வரப்பாக ஆக்குகின்றார். குருநாதர் வந்து மும்முறை அழைத்போதுக்கூட வரப்பில் இருந்து வெளிவராமல் தான் செய்த செயல் செழிக்க பாடுபட்டு தன் கர்மயோகத்தை நிலைநிறுத்துகின்றார்.

//ஆருணி முதற்புலரியில் எழுந்து நீராடி நெருப்புக்கொடை அளித்தபின் கதிரெழுவதற்கு முன்னரே வயலுக்குச் சென்றான். வயல்நீரிலேயே பொழுதிணைவு வணக்கத்தை முடித்தபின் சேறளாவியும் நீரளாவியும் கழனியில் உழைத்தான். மேழிபற்றி உழுதான். நாற்று தேர்ந்து நட்டான். நீர்புரந்தான். களைகட்டினான். கதிர் கொய்து மணிபிரித்து களஞ்சியம் நிறைத்தான். மூவரில் முதல்வனென்றே ஆசிரியரால் எண்ணப்பட்டான்// என்று உத்தாலகரின் கர்மயோகத்தை காட்டவந்த ஜெ. அவனின் கர்மயோகத்தின் உச்சத்தை வயல்நீரிலேயே பொழுதிணைவு வணக்கத்தை முடிந்தான் என்று காட்டுகின்றார்.

உத்தாலகர் போன்று ஸ்வேதகேது கர்மயோகத்தை தூக்கிப்பிடிக்காமல் இருந்தான் என்பதை காட்ட ஜெ பின்வரும் செய்தியை தருகின்றார் //வேதமோதும் வைதிகர்களுக்கு வேதமே உணவும் உடையும் குடிலும் வழித்துணையும் ஆகவேண்டுமென ஸ்வேதகேது சொன்னார்.// இதன் உச்சமாக பிறதொழில் செய்தல் இழிவு என்றும் ஸ்வேதகேது சொல்அமைத்ததையும் காட்டுகி்ன்றார்.

ஞானம் தொழிலை இழிவுப்படுத்தும் காலம் வந்து உதித்துவிட்டது. 


கர்மம் ஞானம் என்று பிரிந்து தனித்தனியாக நிற்கும் உத்தாலகரும் ஸ்வேதகேதுவும். வாழும்வகை என்றும் அறிதலின்சுவையென்றும் ஒருமெய்மைகோட்டின் இரு புள்ளிகளாக பிரிந்து ஆனால் அதிலேயே இருக்கிகிறார்கள்.

//மைந்தா, இங்கு வாழ்வது குறித்து பேசும் வேதப்பொருளை மட்டுமே நானறிவேன். அங்கு என்ன என்று உசாவும் வேதப்பொருளை தேடிச் சென்றுகொண்டிருப்பவன் நீயேஎன்றார் உத்தாலகர்.//

வாழ்தலுக்காக கர்மயோகத்தின் மூலம் வரப்புக்கட்டி துளித்துளியாக சேர்த்த உலகத்தை வரப்பாய் கிடந்து உள்ளம் நீர்நிறைந்த வயலாகி “அதுவே நான்” என்பதை உத்தாலகர் அறிகிறார். இனிமைக்காக ஞானயோகத்தில் சேர்த்த அனைத்தையும் வரப்புகளில் பன்னிரண்டு இடத்தில் வெட்டி தண்ணீரைவடித்து உள்ளத்தை வெறும்வயலாக்கி நிற்கும் ஸ்வேதகேதுவிடம் “அதுவே நீ“ என்கிறார்.

தொழில் இழிவல்ல என்று ஞானம் கண்டுக்கொள்கிறது. தொழில்செய்யாமல் ஞானம் முழுமைக்கொள்வதில்லை என்பதை அறிந்துக்கொள்கிறது.  



கர்மயோகமாகவும் ஞானயோகமாகவம் வந்து நிற்கும் தந்தையும் தனையனும் இருபெரும் விளக்கில் இருந்து வரும் ஒரே ஒளி.
  
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.