Sunday, August 14, 2016

நசிகேதனின் கதை






ஜெ

இப்போது சொல்வளர்காட்டில் வரும் பெரும்பாலான கதைகளை உபநிஷத் வாசகர்கள் பெரும்பாலும் கேட்டிருப்பார்கள். அவற்றை நீங்கள் நுட்பமாக மறுஆக்கம் செய்கிறீர்கள். உதாரனமாக கடோபநிஷத்தில் வரும் நசிகேதனின் கதையில் அவன் அப்பா நோஞ்சான் மாடுகளை தானமாகக் கொடுப்பான். அதைக்கண்டு கோபம் கொண்டுதான் என்னை எப்போது கொடுப்பீர்கள் என்று நசிகேதன் கேட்பான். கோபத்தில் உன்னை எமனுக்குக் கொடுத்துவிடுவேன் என்று அப்பா சொல்வார். அர்க்யஜலத்தை கையிலே வைத்துக்கொண்டு சொன்னதனால் கொடுத்துவிட்டதாக ஆகும்.ஆகவேதான் அவன் எமனைத்தேடிச்செல்கிறான். ஆனால் அந்தக்கதைக்கும் பிறகு வரும் உபநிஷதத்துக்கும் சம்பந்தமில்லை. அது தனிக்கதையாகவே இருக்கும். 

இந்நாவலில் நீங்கள் அந்த உரையாடலே வேறு ஒரு தளத்தில் நிகழ்வதாக எழுதியிருக்கிறீர்கள். தத்துவவிவாதம் மேலும் கூர்மையாக நிகழ்கிறது. அதேபோல அத்தனை கதைகளும் ஒன்றோடொன்று இணைந்து ஒரே கதையாக வரும்போது மொத்தமாக ஒரு பெரிய சித்திரம் உருவாகி வருகிறது. அந்தக்கால ஞானவிவாதமே கண்முன் வந்து நிற்பதைப்போல உள்ளது. அதுதான் இந்நாவலை தனியாகவே ஒரு பெரிய தத்துவவிவாதப்படைப்பாக ஆக்குகிறது

வேணுகோபாலன்