Tuesday, August 23, 2016

மைத்ரேயியும் காத்யாயனியும்



திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்து இருந்த அழகே வடிவெடுத்த சுலஃபை என்னும் மைத்ரேயி யாக்ஞவல்கியரை மணந்தது காதலாலா? தனக்கு உரிய கணவனை தேர்ந்து எடுக்க நாளும்  நோக்கி நோக்கி நுணுங்கி ஆராய்ந்த காத்யாயனி யாக்ஞவல்கியரை தேர்ந்து எடுத்தது காதலாலா?  

காதல் அலையென அறிபவர் அதில் நீந்திவிளையாடுகின்றனர், காதல் கடலென அறிபவர் அதில் அமிழ்ந்து கரைகின்றனர். காதல் கரை மணலென அறிபவர் அதில் நினைந்தும் காய்ந்தும் வான்நோக்கி கிடக்கின்றனர். காதல் மாயை என்று அறிந்தவர் அதை கடந்து செல்கின்றனர். மைத்ரேயியும் காத்யாயனியும் காதல் மாயை என்று அறிந்துக்கடந்தவர்கள். இருவரும் அதை அறியும் விதம் வெவ்வேறு, அந்த வேறுவேறு பாதையை வெண்முரசு அழகாக படம்பிடிக்கிறது. காத்யாயனி யாக்ஞவல்கியரில் மூழ்கி தாயாகி அதை அறிகிறாள். மைத்ரேயி யாக்ஞவல்கியரில் இருந்து தள்ளிநின்று குருகுலமாணவர்கள் தாயாகி அதை அறிகிறாள். 


ஆணோ பெண்ணோ தன்னை  உடலென எண்ணியிருக்கும் காலம் உண்டு, மனமென எண்ணியிருக்கும் காலம் உண்டு, உணர்வென எண்ணியிருக்கும் காலமுண்டு, அறிவென எண்ணியிருக்கும் காலமுண்டு உயிரென எண்ணியிருக்கும் காலமுண்டு.

மைத்ரேயி தன்னை உடலென எண்ணியிருந்த காதலத்தில் அழகென்று ஆகவே வாழ்ந்துவருகிறாள். கார்க்கியால் அது அறுபடுகின்றது. அங்கு உடலைத்தாண்டுகின்றாள். அழகுக்கு எதிராக இருக்கும் அழகின்மையை கார்க்கியின் கூனை தனக்குள் கொண்டுவந்து மனமென எண்ணிவாழ்கின்றாள். கூனை அறியும்தோறும் தன் மனதை அறிந்து கார்கியிடம் தன்னை ஒப்படைத்து யாக்ஞவல்கியரை மணவாளனாக ஏற்று தனது மனதை தாண்டுகிறாள்.  காத்தியாயினுக்கும் குருகுலமாணவர்களுக்கும் அன்னையென ஆகி, யாக்ஞவல்கியர் தன்னை நோக்குகின்றாரா தவிக்கின்றாரா என்று நோக்காமல் தன் கடமையே கண்ணாக இருக்கும் இடத்தில் உணர்வைத்தாண்டுகின்றாள். யாக்ஞவல்கியர் தனது குருகுலத்தில் தனக்கு இனி எந்த பணியும் இல்லை என்று உணர்ந்து தனிமைநாடும் இடத்தில் தனக்கும் காத்தியாயினிக்கும் அழியும் பொருள்வேண்டாம், அழியா மெய்மைபொருள் மட்டுமே வேண்டும் என்று வேண்டி தன்னையும் ஈடேற்றி யாக்ஞவல்கியரையும் ஈடேற்றும் இடத்தில் அறிவை தாண்டுகின்றாள். ஜனகரின் சபையில் கார்க்கியுடன் வினாவிடைபகரும் இடத்திலும் அவர் அங்கிருந்து பிரிந்துசெல்லும் இடத்திலும் அவர்தான்யார் என்பதையே அறியாமல் இருக்கும் இடத்தில் “அகம் பிரம்மாஸ்மி” என்னும் சொல்லின் மெய்மையின் உருவாக வந்து இருக்கும் இடத்தில் உயிரையும் வென்று செல்கிறாள்.

//சுலஃபைஎன்னை அழகிய உடல் மட்டுமென்றே எண்ணியவர்களுக்கு நான் கூறும் மறுமொழி இது. நான் மதிப்பதும் விழைவதும் என்ன என்பதற்கான விளக்கமும் இதுவேஎன்றாள்//

சிலருக்கு ஏதோ ஒரு கணத்தில் உடலைத்தாண்டும் வல்லமை வருகின்றது அந்த வல்லமையின் மூலம் நான் கடவுள் என்ற மெய்மையை அடைந்துவிடுகின்றார்கள். இதற்கு இடையில் அவர்கள் யாருடன் தன்னை இணைத்துக்கொண்டாலும் அது வெரும் இயல்பே அன்றி பிணைப்பாக இருக்கும் இணைப்பில்லை. மைத்ரேயி யாக்ஞவல்கியரை தேர்ந்தெடுத்தது காதலால் இல்லை. 

//காதல் மாயை என்றறிந்தவனே காதலில் திளைக்கமுடியும் இளம்பாணரே. மாயையை அறிந்தவன் மாயையை அடிநுனி சுவைப்பவனாகிறான்என்றான்//-வண்ணக்கடல்.

மைத்ரேயி உடலை மட்டும் இல்லை உள்ளத்தில் எழும் காதலையும் மாயை என்று தெளிந்த அன்னை. மைத்ரேயி யாக்ஞல்கியருடன் வாழ்ந்த வாழ்க்கை அதற்கு சான்று. காதலைத்தாண்டி சென்ற வாழ்க்கையிலும் ஒரு காதல் இருக்கிறது ஆனால் அந்த காதல் வாழ்க்கையை வாழ மைத்ரேயி அளவுக்கு அகவல்லமை வேண்டும். ஒரு உயிர் தன்னை ஆனமாவைரத்தூண் என வடித்துக்கொள்ள முடியும் என்றால் அதற்கு வெண்முரசின் மைத்ரேயி ஒரு முன்மாதரி.    

ஒரு பழம் உண்ணப்படாமல்போவது பயனற்றுப்போவதாக மித்திரர்போன்ற பெற்றோர்களால் நினைக்கப்படுகிறது ஆனால் ஒரு பழம் பழமாக முதிர்தலே ஒரு பயன்தான் அது கற்பகவனத்தின் உண்டியல்.  

ராமராஜன் மாணிக்கவேல்