Sunday, August 21, 2016

ஒரே நேர்க்கோட்டில்




ஒரே நேர்க்கோட்டில் எதிர் எதிர் திசையில் உருண்டுவரும் பல்சக்கரங்கள் ஒன்றை ஒன்று சந்திக்கும் தருணத்தில் அவைகளின் பற்கள் சரியாக பொருந்தினால் ஒன்றை சுழற்றிக்கொண்டே இருக்கும். அது ஒரு அழகிய ஓயாத இயக்கம். அந்த இயக்கம் அழகானது மட்டும் இல்லை ஆற்றலின் சக்தியின் வெளிப்பாடு. பயன்படுத்தும்போது புதிய ஆற்றலை உருவாக்குகின்றது தன்னை சித்தைத்துக்கொள்வதும் இல்லை.  .

காத்யாயனியும் மைத்ரேயியம் எதிர் திசையில் இயங்கும் அறிவு நிரம்பிய பல்சக்கரங்கள் அவை யாக்ஞவல்கியர் இடத்தில் வந்து ஒன்றை ஒன்று பற்றி அழகாக சுழல்கின்றன. காத்தாயனிக்கு மைத்ரேயி தங்கையாக அமைகிறாள். மைத்ரேயிக்கு காத்யாயனி மகளாக அமைகிறாள். வழக்கில் அன்னையாக அமைபவளக்குதான் மகளென அமையும் நியதி உண்டு. தங்கையென அமைந்தவளுக்கு குழந்தையென அமையும் நியதிதான் இவர்கள் வாழ்வின் எதிர் திசையும் அந்த எதிர்திசையையே அவர்கள் தங்கள் இயக்கங்களாக மாற்றிக்கொள்ளும் வல்லமையும் அறிவின் வெளிப்பாடு.

//பேசிப்பேசி களைத்து அவள் துயிலும்போதும் கைகள் வெளியே என சுட்டப்பட்டிருக்கும். அச்சுட்டுவிரலை நோக்கியபடி அவளருகே அமர்ந்திருக்கையில் மைத்ரேயி பெரும் உளக்கிளர்ச்சியை அடைந்தாள். அவளருகே படுத்து அவளுக்கிணையாக தலைவைத்து அந்த சுட்டுவிரல் காட்டிய திசையை நோக்கிக்கொண்டிருந்தாள்.//-,இங்குதான் மைத்ரேயி அன்னையாய் காத்யாயனி குழந்தையாய் தெரிகிறார்கள். உண்மையில் காத்யாயனி மைத்ரேயும் குழந்தையும் அன்னையுமாக அங்கு இல்லை, மாறாக மெய்மையின் பொருள்தெரியா கறுமையின் இருட்டில் கிடக்கும் இரண்டு அகங்கள் மட்டும்.

//அப்பால் கரிய வானம் விண்மீன்சிமிட்டல்கள் பெருகிப்பரக்க வளைந்திருந்தது. வெட்டவெளி. பொருளின்மை. அறியமுடியாமை. அனைவரும் சென்றுசேரும் கருமை அது என்கின்றன நூல்கள்.//-அற்புதமான இடம். உலகில் உள்ள அனைத்து மானிட அகமும் இந்த இடத்தில் குவிந்துக்கொண்டே இருக்கிறது. காத்யாயனி மைத்ரேயி போன்ற சிலருக்கு அந்த கருமையிடம் துளங்கி ஒளியாகிவிடுகிறது.

இருட்டினும் கறுமையாகிய கரியில் இருந்து நெருப்பு உண்டானாலும் நெருப்பில் கறுமை இல்லை. கரியில் இருந்தாலும் நெருப்பு வான்நோக்கி உயரும் விழைவை நிறுத்துவதும் இல்லை. அறிவின் பிறப்பிடம் அறியாமையாக இருந்தாலும் அறிவும் தன்னை நெருப்புபோல் மேல்நோக்கியே எடுத்துச்செல்கிறது. ஒளியால் அறிவும் நெருப்பும் ஒன்று. கொஞ்சம் பிசகினாலும் காத்யாயனியும் மைத்ரேயியும் சக்களத்தி சண்டையில் இறங்கிவிட முடியும்.

காமக்குரோமோகலோபமதமாச்சர்யம் என்னும் ஆறுபகைகளும் மனிதர்களை பாடாய் படுத்துகின்றது. இப்படி சக்களத்தி சண்டையில் இறங்கிய இருவரை முன்னமே கண்டோம். அவர்கள் சுருசி சுநீதி.
//விளக்கமுடியாத விருப்புகளாலும் புரிந்துகொள்ளவே முடியாத வெறுப்புகளாலும் நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை.//-பிரயாகை.

சுருசி சுநீதி இடத்தில் நின்றுக்கொண்டு காத்யாயனியாக மைத்ரேயியாக வளர எத்தனை பெரிய அகவளச்சி வேண்டும். அந்த அகவளர்ச்சியை கல்வி அவர்களுக்கு அளித்திருக்கிறது. தாங்கள் விழைவது என்ன என்று மைத்ரேயி அறிந்து இருக்கிறாள் அதன் மூலம் அவர்கள் அறியாமை என்ற கட்டை கடந்து அறிவு என்ற விடுதலையை அடைகின்றார்கள்.. அறியும் தோறும் அறிவு என்னும் கட்டில் கட்டப்பட்டு இருக்கும் அவர்களை கட்டவிழ்க்க மெய்செல்வத்தை நாடவைக்கிறது அவர்களின் அறிவு.

பெண்கள் அழகு அழகற்றது ருசி ருசியற்றது நீதி நீதியற்றது பொருள் பொருளற்றது அறிவு அறிவற்றது என்று கடந்து மெய்பொருளை அடைய விழையவேண்டுவதே உண்மையான பெண்சுதந்திரம் என்றுகாட்டும் காத்யாயனி மைத்ரேயி வாழ்க்கை வெண்முரசு ஓங்கி முழங்குகின்றது
.
//“ஆண்களுக்கு மனைவி தோழியோ அன்னையோ மட்டுமே. பெண்ணுக்கு கணவன் பிறிதொன்றுமாகவேண்டும். சிலருக்கு தந்தை, சிலருக்கு தோழன்,சிலருக்கு காவலன், சிலருக்கு ஆசிரியன்.”//-,இந்த வரிகளின் பொருள் தெரிந்து தெளிந்து நடமுறையில் கொண்டுவரப்பட்டால் உலகம் எத்தனை அழகாக ஒளிநிறைந்தாக ஆகிவிடும். யாக்ஞவல்கியர்போல் இந்த வரிகளை உயிர்பிக்க மனம்தெளியும் ஆண்இருந்தால், அந்த ஆணை அடைந்த பெண்ணின் பெரும்தக்க யாவுள.?

கணவனான பின்பும் ஆண் தன்னை ஆணென்றெ உணரும் அறியாமை அகலவேண்டும். அந்த அறியாமையை மைத்ரேயி மூலம் யாக்ஞவல்கியர் அறிந்து அதை அகற்றி வென்றுச்செல்லும்பொது கணவனின் அறம் துளங்குகின்றது. ஆண் கணவனாவது ஒரு படிநிலை உயர்வு என்றால்,கணவன் தன்னை தந்தையாக தோழனாக காவலனாக ஆசிரியானக ஆக்கிக்கொள்ளும்போது இன்னும் ஒருபடி நிலை உயர்கின்றான், குறிப்பாக தனக்குதானே நன்மையும் செய்துக்கொள்கிறான். அது ஒரு மெய்மையை அடைதல்தான்.  

ராமராஜன் மாணிக்கவேல்