Thursday, August 18, 2016

சொற்கள்



மனிதன் மனிதனை சொற்களால் வளைக்க நினைக்கிறான் அல்லது நிமிர்த்த நினைக்கிறான். மனிதன் நிமிர்வதோ வளைவதோ இல்லை, மனிதனுக்குள் உள்ள ஒன்று பெரும் பாறையென அசையாமல் நின்றுக்கொண்டு இருக்கிறது.

மனிதனின் சொற்கள் வளைந்தோ நிமிர்ந்தோ காடுகளாய் பெருகிக்கொண்டே இருக்கின்றன. சொல்வளர்க்காட்டில் குரு சீடன் என்று சொற்கள் ஒருவரை ஒருவர் நிமிர்க்க வளைக்க பாடுப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மனிதனும் வளைந்தோ நிமிர்ந்தோ பெருகிக்கொண்டுதான் இருக்கிறான். சொற்கள் அதனினும் அதிகமாக பெருகிக்கொண்டு இருக்கின்றன.

தனது அண்ணன் பெரும் வேழம் என உலகின் தந்தையென நிற்கும் திருதராஸ்டிரன் தந்தையென மட்டும் ஆகும் இடத்தில் விதுரரின் சொற்களை திருதராஸ்டிரனை வளைக்க முயற்சி செய்கிறது. விதுரர் வளைக்கும் அந்த இடத்திலேயே திருதராஸ்டிரன் சொற்கள் விதுரரை வளைத்துவிடுகிறது.

//“ஏனென்றால் அவர்கள் உன் மைந்தர். ஓர் இருண்ட வெளியில் நீ அவர்களின் தந்தை.”//

எத்தனை முறை இந்த சொற்கள் கூர்த்தீட்டப்பட்டு உள்ளுக்குள் எதிரியின்மீது வீசி அவனை வளைக்க முயற்றிசெய்துக்கொள்கிறது. ஒரு கணத்தில் தான் முற்றாக சொற்களின் வழியாக வளைக்கப்படும்போது அந்த வளைதலில் இருந்து தப்பிக்க சொற்களைக்கொண்டு எதிரியை வளைக்க மனம் விரும்புகின்றது. வென்றும் விடுகிறது. வென்றபின்பு வென்றவன் வளைந்தஅளவு அதிகம் என்பது தெரியும்போது உள்ளம் புண்பட்டுவிடுகிறது. விதுரரும் திருதராஸ்டிரனும் ஒரே நேரத்தில் நோய்ப்பட்டுகிடப்பது தங்கள் சொற்கள் செய்த மாயம்.

நாவினால் சுட்டால் சுடுப்பட்டவனுக்கு தழும்பு ஆறுவதில்லை, சுட்டவனுக்கும் அறியாத தழும்பு ஆறுவது இல்லை.

ராமராஜன் மாணிக்கவேல்.