Friday, August 12, 2016

விழைவின் நாகம்

 
அன்புள்ள எழுத்தாளருக்கு...

இன்றைய 'சொல்வளர்காடு - 23'-ல் பாண்டவர்கள் நினைவுகூறும் பகுதி. 

குகைநுழைந்த நாகத்தைக் கைச்சுழற்றிப் பிடித்திருக்கும் பீமனிடம் அதை விட்டுவிடுமாறு குந்தி கூறுகின்றாள். பின் ஏழு நாட்களுக்கு அவள் தன் இயல்புநிலையிலிருந்து உள்வாங்கித் தனக்குள் எங்கோ தொலைந்து விடுகிறாள்.

அந்த நாகம் தான் என்ன? அந்த நாகம் நினைவுறுத்துவது தான் என்ன? 
குந்திக்கும் கர்ணனுக்கும் மட்டுமே தெரிந்த நாகங்கள் அவை.

கர்ணனைப் பெற்றெடுக்கும் முன் அக்கருவை அழிக்க வரும் முதுநாகினியைத் தீண்டிக் கொன்ற நாகம், குந்தியின் விழைவு ஈர்த்த நாகம். யாதவர்குடியில் மணத்திற்கு முன் மைந்தர் பெறுதல் இயல்பே எனினும், குந்தியுடைய க்ஷத்ரிய விழைவே அவளைக் குந்திபோஜரிடம் மகளாகப் போகச் செய்தது. தம் குடி சல்லியரை விடவும் உடற்குறை பாண்டுவை தேரச் செய்தது. அவ்விழைவாக அவள் மனதில் ஊர்ந்து கொண்டிருந்த கசப்பினாலான நாகமே, உண்மையான நாகத்தை ஈர்த்துக் கர்ணனைக் காத்தது.

அதே போல், மைந்தருடன் தனிவனத்தில் மகிழ்ந்திருக்கும் போது வந்த உண்மையான நாகம், அவள் மனதில் பதுங்கிக் கிடந்த அந்த கசப்பு நாகத்தை, அச்ச அரவத்தை வெளிக் கொணர்ந்து போட்டது. தன் கைத்தவறிப் போன குழந்தை, இனி என்றுமே தன்னுடன் வந்து சேர இயலாதவாறு எதிரிகளுடன் இணைந்து கொண்ட பிள்ளையை அவளுக்கு நினைவுறுத்தி விட்டது. அதுவே அவளை தனக்குள் உள்ளிழுத்துக் கொண்டது.

கர்ணனுக்கும் அது போல் ஒரு நாகம் உள்ளிருந்து கொண்டிருக்குமா? அவனை கைவிட்ட அன்னையின் மேல் வஞ்சம், தன் பிறப்பின், தன் வளர்ப்பின் காரணமாகச் சுமக்க நேர்ந் இழிவுத் தொடரின் அனல், காதல் விளைந்த ஒரே ஒரு பெண்ணின் நிராகரிப்பின் கசப்பு, அவள் முன் அடைய நேர்ந்த அவமானங்களின் தணல், கட்டி வந்த அரசிகளின் அலட்சியத்தின் முன் நிற்கவியலா தவிப்பு... கடும் நஞ்சூறும் பெருநாகங்களின் கூட்டம் ஊர்ந்து கொண்டிருக்கும் பாதாளமே அவன் மனம்.

அந்த நாகங்களே அவனை எங்கும் தொடர்கின்றன. நாகர்குல மூதன்னை அவற்றுள் ஒரு நாகத்தையே அவன் பின் காண்கிறாள். இறுதியில் நாகர்குல வேதத்தைக் காப்பதாக அவனைச் சொல்லெடுக்க வைத்ததும் அவையே.

இன்றைய அத்தியாயத்தில், குகை நுழைந்த நாகத்தைக் கைச்சுழற்றிப் பிடித்தவன் பீமன்.

குந்தி கர்ணனை 'மூத்தவர்' என்று அழைக்கச் சொல்லி இரட்டையரிடம் சொன்ன முதல், கர்ணனை முதன்முதலில் தம் எதிரி என்று உணர்ந்தவன் பீமனே. தருமனும், விஜயனும் அழுது கொண்டிருக்கையில் 'பிடரிமயிர் சூடிய நாய் சிம்மமாகாது' என்று அரங்கில் கூவியவன் அவனே. கர்ணனுக்கு முன் நிற்க முடியாதவன் என்று பாஞ்சாலியில் நுட்பமாக குத்தப்பட்டவன் அவனே. (அவளுக்குத் தெரிந்திருக்குமா பீமன் அறிந்தது?). கர்ணனுக்கு எதிர்நின்று, தன்னுயிர் கொடுத்து அர்ஜூனனைக் காக்கப் போவதும் பீமனின் குருதியே. 

இன்று குந்தியின் விழைவை எழுப்பிய நாகத்தைச் சுழற்றிப் பிடித்தவன் அவன். அது குந்தியின் விழைவையே அவன் அறிந்து பிடித்தது. அதைத் தூர எறிந்தது, அவளுக்கு நிறைய உணர்த்தியிருக்கும்.

நன்றிகள்,
இரா.வசந்த குமார்.