Friday, December 2, 2016

நீர் மின் படையோன்



வெண்முரசு ஒரு இயல்பான தன்னெழுச்சியில் துவங்கி, தன் வழித்தடத்தைத் தானே அமைத்துச் செல்லும் ஜீவ நதியைப் போன்றே பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் ஓவியராக ஷண்முகவேல் அமைந்தது நல்லூழ். அவர் ஓவியமாக வரையத் தேர்வு செய்யும் தருணங்கள், அதை அவர் கலை மனம் வெளிப்படுத்தும் விதங்கள் நாவலிற்கு கூடுதல் அழகை, ஆழத்தைச் சேர்ப்பவை. அவரின் ஓவியங்கள் குறித்து மட்டுமே சென்னை வாசகர் கூட்டத்தில் சுமார் மூன்று மணி நேரம் பேசி இருக்கிறோம். வெண்முரசின் ஓவியங்களில் மிக மிகத் தனித்துவமான ஓர் ஓவியம் என்று கிராதம் 43 ன் ஓவியத்தைச் சொல்லலாம்.


விருத்திரனின் புற்றிகபுரியை நோக்கிச் செல்லும் வருணனின் முடிவிலா அலைப் படையின் உறைந்த ஒரு கணத்தை அவர் ஓவியமாக்கியிருக்கிறார். என்ன ஒரு கற்பனை!! முடிவிலாது வந்து மோதும் துமிகளென அவர் வரைந்திருப்பது அபாரம். ‘உமது அலைகளின் பேருருவை முகில்களின் இடியென ஒலித்துக்காட்டுவேன்’ என இந்திரன் வருணனிடம் சொல்வதாக நாவல் நமக்கு அறியத் தருகிறது. இதற்கு வருணனின் பதில் என்னவாக இருந்திருக்கும் என்பதை ஓவியம் அறியத் தருகிறது. ஆம், இந்திரனின் மின்படையின் ஒளியை தன் ஒவ்வொரு துளியிலும் பிரதிபலித்து பல்லாயிரம் ஒளி(மின்)படைகளாக அதை மாற்றுவேன் என்றிருப்பான் வருணன். ஓவியத்தின் ஒவ்வொரு துமியுருவினரும் கையிலேந்தியிருப்பது அதையே அல்லவா!!!

இதில் முதலில் வரும் வருணனைக் கூர்ந்தால் அதில் ஒரு பிறையைக் காணலாம். இது ஒரு முக்கியமான குறியீடு. முன்பே வந்திருப்பது போல தொல்வேதத்தின் முதல் தெய்வம் வருணனே. அவன் இப்புடவியை கட்டில் வைத்திருக்கும் நெறிகளான ருதத்தைப் பேணுபவன். அதைத் தன் பாசத்தால் கட்டி வைத்திருப்பவன். தவறு செய்பவர்களைத் கொடூரமாகத் தண்டிப்பவன். தன்னை வேண்டுபவர்களின் மீது தன் கருணையை மழையாகப் பொழிபவன். தன்னை விரும்பியவர்களை வெறுக்க வைக்கும் மாயா வருணனாகவும் அவனே இருக்கிறான். பகலில் ஒளியை ஆள்பவனாகவும், இரவில் இருளை முற்றாள்பவனாகவும் அவனே இருக்கிறான். அவன் ஆளும் கடல் என்பது வானத்தில் உள்ளது. அதை பெரும்பரப்பில் நிறைந்து நின்ற ஓர் பெருங்கடலின் நீரனத்தையும் உறிஞ்சி எடுத்து வானில் நிரப்பி, அதைப் பாலையாக்கியவன் அவன் என மிகக் கவித்துவமாக வெண்முரசு சொல்கிறது. மேலும் “நீர் என்பது ஒரு ஏடு. இரக்கமற்ற ஏதோ ஒன்று எழுதப்பட்டது. இரக்கம் எனப் பொருள் அளிக்கும் வரிகள் அவை. முலையென ஊறுவது அன்னையின் சித்தம் கொண்ட உறுதி. கொலைக்கூர் வெண்தேற்றை கொண்ட பெரும்பன்றியின் முலைக்கொத்துக்களில் வெண்ணிறத்துளி என ஊறி நிற்பதும் அவ்வெண்தேற்றையென தன்னை எழுப்பிக்கொண்டதே  அல்லவா?என அவன் இருமையைக் கூறுகிறது.

மெல்ல மெல்ல இந்திரன் வருணனை வென்று முதன்மை கொள்ளத் துவங்கிய போது வருணன் கொஞ்சம் கொஞ்சமாக அவன் இருண்ட பகுதிகளை மட்டும் ஆள்பவனாக மாற்றப் படுகிறான். எனவே தான் அவன் இரவை ஆளும், மேற்கின் அதிபனாகிறான். பகலை மித்ரன் கையில் கொடுக்கிறார்கள். அவனது இருமைகள் இரு ஆளுமைகளாக, தனித் தனி தெய்வங்களாக மாற்றப்படுகின்றன. அவன் மாயை அவனிடமிருந்து மற்ற தெய்வங்களுக்கு அளிக்கப்படுகிறது. அவனது இருமை சென்று சேர்ந்த ஒரு தெய்வம் ருத்ரன். அவன் அழிப்பவன், நோய்களைத் தருபவன் (சொல்வளர்காடில் சுப்ர கௌசிகர் செய்யும் மகாருத்ர வேள்வி நினைவுக்கு வருகிறதா!!). அவனே வைத்தியநாதனாக நோயைத் தீர்ப்பவனாகவும் இருக்கிறான். உக்ரானாக இருப்பவன் மித்வனாகவும் குறிப்பிடப்படுகிறான். இந்த ருத்ரனின் அகோர(அ-கோர சாந்த) வடிவாக சிவம் இருக்கிறது. மிக இயல்பாக இந்த நீட்சியை ஒரு பிறை காண்பித்து விடுகிறது.

இனி ஷண்முகவேலைப் பற்றி – மேலே எழுதியவை அனைத்தையும் அவர் மறுக்கக் கூடும். இதையெல்லாம் எண்ணி அல்ல தான் வரைந்தது என்று சொல்லக் கூடும். சொல்பவர் தான் அவர். சென்னை கூட்டத்தில் அவரது வெண்முரசு ஓவியங்களை முன்வைத்து விவாதிக்கையில் தாம் இயல்பாக வரைந்தவை தான் அவை என்றும், இத்தனை அடுக்குகளை எண்ணி உருவாக்கவில்லை என்றும் கூறினார். அதுவே உண்மையாக இருக்க வேண்டும். முன்பு ஜெ ஒரு கடிதத்தில் எழுதியது போல, திட்டமிட்டால் வெண்முரசே எழுத இயலாது. அதைப் போன்றதே அதற்கு வரைவதும். ஆனால் இயல்பாக ஒரு கலை மனம் அக்கலைஞன் வாயிலாக வெளிப்படும் நேரம் ஒரு தெய்வ கணம் தான்!!!! ஜெ வுடன் பல முறை நேரில் பேசியிருக்கிறேன். என் மனதில் நான் அவரில் வெளிப்படும் ஒரு தேர்ந்த வாசகனை மட்டுமே அறிகிறேன் என்றே உணர்ந்திருக்கிறேன். ஜெ என்னும் படைப்பாளியிடம் பேசியதில்லை என்றே தோன்றும். வெண்முரசைப் பற்றி விவாதிக்கையில் கூட வெண்முரசின் ஒரு தேர்ந்த வாசகராகத் தான் ஜெ வைப் பார்த்திருக்கிறேன். ஜெ என்னும் படைப்பாளியை மிக நெருக்கமாகத் தொடர்பவர் என்றால் அது ஷண்முகவேலாகத் தான் இருக்க முடியும். அது சரி, ஒரு படைப்பு மனம் தானே மற்றொன்றைத் தொடர இயலும். வாழ்த்துக்கள் ஷண்முகவேல்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்