Monday, December 5, 2016

நஞ்சும் அமுதே , மாயையும் அசலே


கிராதத்தில் கடந்த இரு பகுதிகள் ஒரு சாதனை. படைப்பாளியே எழுதி எழுதித்தான் இப்போது இதை அடைகிறார் என எண்ணுகிறேன்.

 சமுத்திரம் படைப்பின் குறியீடாக வருகிறது அது மேலுக்கு அலையடித்தாலும் அடியில் அமைதியாக உள்ளது, புற்று அழிவின் குறியீடாக வருகிறது  மேலுக்கு சலனமற்று இருந்தாலும் உள்ளுக்கு இயக்கத்துடன் இருக்கிறது . புற்று அழிவின் ஆக்கம், சமுத்திரம் புற்றை அழிப்பது ஆக்கத்தின் அழிவு. 

அழிவு ஒரு கணம் பிந்தித்தான் வர சாத்தியம் உள்ளது, இருத்தல் சாத்தியமான போது தான் அழிவுக்கு தேவை எழுகிறது. மூலப் பிரகிருதி பிரபஞ்சமாக தோன்றுவதற்கு முன் காலமற்ற காலத்தில் ஆக்கமும் அழிவும் சமநிலையுடன் இருந்திருக்க வேண்டும். அழிவு சற்று பிந்தியவுடன் இப்பொருண்மய பிரபஞ்சம் தோன்றுகிறது.  

விருத்தாசுரனின் இன்றைய தேக்கம் முன்பு இந்திரனின் தேக்கமே. பால்ஹிகனும், துரியனும், குண்டாசியும் இத்தேக்கத்தில் இருந்திருக்கிறார்கள். கிருஷ்ணனும், அர்ஜுனனும் இப்போது இதில் இருக்கிறார்கள்.

மாயையும் நிஜமும் ஒன்றென்றால் நிஜமெதற்கு என்பது தேங்கியவர்களின் வலுவான கேள்வி, இவ்வாறு மாயத்திரை கணமேதும் விலகாமல் நித்தியம் மாயையில் திளைக்க இயலாது என்பது பதில். விருத்தாசுரன் நகருலா கண்டே ஆகவேண்டும். கௌமாரன் விரித்தாசுரனின் அகமே, அது அறிகிறது ஆனால் ஒரு கணம் பிந்திய ஊழ், ஏதும் செய்ய இயலாது.

 நாரதரின் ஒரு நச்சுக் கொடுக்கு இந்திரனுக்கு  தேவையாகிறது, இது முதற்கனலில் தப்பவைக்கப் பட்ட நாகத்தின் நஞ்சு,  படைப்பு சமுத்திரத்திற்குள் ஆழ ஊரும் நஞ்சு. ஊறும்  நஞ்சால் தேவம் எழுகிறது, அற்ற நஞ்சால் ஆசுரம் அழிகிறது. 

ஆழத்தில் நஞ்சுடன் அமுதளிக்கும் சமுத்திரம். நஞ்சற்றதால் அமுதும் அற்று புற்று. அமுதும் நஞ்சே என்கிற மாயையும் அசலே.     

கிருஷ்ணன்