Friday, September 22, 2017

அணிபரத்தையர், கடவல்லூர்மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

1) வெண்முரசில் அணிபரத்தையர் வரவேற்பதற்கு வருகிறார்கள். இவர்களை ஏன் அழைத்தார்கள் என சிந்தித்ததுண்டு. கம்பனும் காமமும்-6 [http://www.jeyamohan.in/1702] படித்தபின் அது ஏன் என்று புரிந்தது.

2) கடவல்லூர் அன்யோன்யம் [http://www.jeyamohan.in/919] படித்தேன். சொல்வளர்க்காடில் வரும் வேத பாடசாலைகளும் விவாதங்களும் நினைவுக்கு வந்தது.

3) உலகின் நீளமான நாவல் வரிசையில் வெண்முரசு முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது [https://en.wikipedia.org/wiki/List_of_longest_novels]. சாதனையாக (கின்னஸ், லிம்கா) பதிவு செய்யலாமே. "கி.ரா"வுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என சொல்லி இருந்தீர்கள். நாம் செய்யும் சாதனைகளை பதிவு செய்தால், இந்திய அளவில் தெரிந்தால் தானே அங்கீகாரம் கிடைக்கும்.  

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை

கருக்கிருள்இனிய ஜெயம்,

என்ன சொல்ல?  வெய்யோன் நாவலில் ,துச்சலையின் மைந்தனை  இவ்வாறுதான்  தூக்கிப்போட்டு  பந்தாடி விளையாடினார்கள்  பால கௌரவர்கள்.  கொஞ்சமும்  மாறாமல்   இன்று  அபிமன்யுவை அப்படித் தூக்கிப்போட்டு விளையாடுகிறார்கள்.    உண்ணவும்  சண்டை  செய்யவும் மட்டுமே அறிந்தவர்கள். 

அன்று  உடல் முழுக்க வண்ணக் குழம்புகளால்  நிறைந்து நின்றனர். இன்று  உணவாலும் மதுவாலும் முழுக்காட்டப்பட்ட உடலுடன் திளைக்கிறார்கள்.   வெகு விரைவில்  குருதி கொண்டு  குளிக்கப்போகிறார்கள் .    உண்ணவும்  சண்டை போடவும் மட்டுமே   அறிந்தவர்கள்.  கொடுப்பதில் உவகை எய்துபவர்கள். துரியனுக்காக உயிரை கொடுக்கப் போகிறவர்கள்.  அபிமன்யு அறிவான்  அந்த கைவிடு படைகளின் விசையான வஞ்சத்தை.    இவர்கள் ஏதும் அறியாதவர்கள் .   அவர்கள் அத்தனை பேரையும் கொல்லவேண்டும்  என்ற  குந்தியின்  வஞ்சத்துக்கு மட்டுமே பலி ஆகப் போகிறவர்கள்.   பிரலம்பன்  அந்த அம்பின் முனையில்  குருதியைக் காணும் போது ,ஒரு திடுக்கிடலுடன் வியாசரின் நினைவு எழுந்தது.   அத்தனை பேரும்  வியாசரின் பிள்ளைகள் அல்லவா? 


'கொட்டம்பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.


இளைய கௌவரவர்களுடன்,அபிமன்யூ அடிக்கும் 'கொட்டம்' தாங்கவொண்ணா சிரிப்பை வரவழைக்கிறது!.உற்சாகமான கட்டங்களில் உங்கள் எழுத்துக்களில் சர்வ சாதாரணமாக  'பகடிகள்' தெறித்து விழுகின்றன!. 
"பன்றிக்குமேல் ஊனில்லை, விஷ்ணுவுக்குமேல் தெய்வமும் இல்லை” என்றான்." 
"லட்சுமணன் கைகளைத் தூக்கி “ஏனென்றால் மாமனிதர்களைக் கண்டு தெய்வங்கள் அஞ்சுகின்றன. ஆகவே அவர்களுக்கு மேலும் திறன் கொண்ட மைந்தர்களை அளிக்கின்றன” என்றவன் உரக்க நகைத்து “அல்லது திறனே அற்ற மைந்தர்களை அளிக்கின்றன” என்றான்."

அன்புடன்,
அ .சேஷகிரி.

பறந்தெழத் துடிக்கும் அக்கினிக் குஞ்சு (எரிதழல் -1,2 )


      வெண்முரசு பல இழைகளாக பல்வேறு நாயக நாயகியர் கதைகளை உள்ளடக்கிய பெருங்காப்பியம். அந்த காப்பிய பேராலமரத்தின் வேர் மற்றும் கிளைகளாக சில முக்கிய கதை நிகழ்வுகள் இருக்கின்றன.  அதில் மூல வேரென இருப்பது  ஒரு அறப்பிழை. அந்தப் பிழை அம்பையின் துயரத்திற்கு காரணமானது.  தனி ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி அது.  ஒரு அக்கினி குஞ்சென தோன்றி அணையாது இருந்து வருவது.  அது  பெருந்தீயென எழுந்து அஸ்தினாபுரத்தை அழித்துவிடாமல் இருக்க     பீஷ்மர் விதுரன் தருமர் முயல்கின்றனர்.   ஆனால் அத்தழல் அணையாமல் இருந்து கொண்டே வருகிறது. சகுனியின் உள்ளத்தில் அவன் சகோதரி  காந்தாரிக்கும் அவளின் மகன் துரியோதனனுக்கும் இழக்கப்பட்ட வஞ்சமாக  அது எரிந்துகொண்டு இருக்கிறது.  குந்தியின் உள்ளத்தில் தன் பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட வஞ்சத்தின் காரணமாக அந்தத் தீ எரிந்துகொண்டிருக்கிறது.  பீஷ்மர் அத்தழலை  தன்னால் தனிக்க முடியாது என்று அறிந்து அதற்கான முயற்சியெலாம் கைவிட்ட நிலையில் இருப்பதாகத் தோன்றூகிறது.  தருமன் சூதாட ஒத்துக்கொண்டதே  அவனுடைய இறுதி முயற்சியாக இருக்கிறது. இனி அவன் ஒன்றும் செய்வதற்கில்லை என்று தோன்றூகிறது. விதுரர் ஒருவர் மட்டுமே இத் தழலை மட்டுப்படுத்த முயல்பவராக இருப்பார். அதற்கு பாண்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சரிசெய்யப்பட அவர் முயல்வார் எனத் தெரிகிறது. துரியோதனுக்கு முழு  அஸ்தினாபுர அரசையும் தக்க வைத்துக்கொள்வதற்காக திட்டம்  வகுத்து செயல்படுத்துபவனாக சகுனியும், தன் பிள்ளைகளுக்கு இழந்த அரசை பெற்றுத்தருவதற்கான பெரிதும் முயல்பவளாக குந்தியும், அஸ்தினாபுரத்தில்  கோரமான போர் ஒன்று ஏற்படாமல் தவிர்க்கப்பார்க்கும் ஒருவராக விதுரும் செயலாற்றவேண்டிய காலக் கட்டத்தை எழுதழல் கூற இருக்கிறது. ஆகவே இந்த மூவரின் பார்வையில் எழுதழலில் நிகழ்வுகள் கூறப்படலாம என  நினைக்கிறேன்.       ஆகவே அவரகளின் மூவரைப்பற்றைய நிகழ்வுகள் முதலில் கூறப்படுகிறது.
      தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதும் அம்பையின் சினம் இப்போது குந்தியின் உள்ளத்தில் இருக்கிறது.   அம்பை ஆலயத்தில்  குந்தி கொடுக்கும் குருதிப்பலி,  இனி  வரப்போகும் பலிகளுக்கு ஒரு தொடக்கமாக அமைகிறது. துரியோதனனுக்கு எதிராக திரண்டு நிற்கும் பாண்டவர்களின் பெருங் கோபத்தை   சகுனி காணும் அனுமனின் பெருங்கதை உருவகப்படுத்துகிறது.  இத்தனை நாட்களாக அதை கான்பதைத் தவிர்த்திருந்த சகுனியின் கண்களுக்கு இப்போது  அது பெரிதாக தெரிகிறது.  போரைத்  தவிர்க்கமுயலும் விதுரருக்கு  அப்பெரும்போருக்கான காரணங்கள்  அம்புகள் பூட்டி நிற்கும்   கைவிடு படைகள் போன்று தெரிகிறது,   ஒரு சிறு விசை செலுத்தப்பட்டால்  பல்லாயிரம் அம்புகள் பாய்ந்தெழுந்து பல உயிர்களை பலிவாங்கும்.   இனிவரும் கதைக்கான திட்ட வரைகோட்டுப்படமென இம்மூன்றையும் கொள்ளலாம் எனத் தெரிகிறது.  இம்மூவரின் திட்டங்களை எப்படி கண்னன்  திசை திருப்பி விளையாடப்போகிறான் என்பதை காண மிகவும் ஆவலாக உள்ளது.

தண்டபாணி துரைவேல்

Thursday, September 21, 2017

சுவாலைகளின் சுவாரஸ்யங்கள்

அன்பின் ஜெ,வணக்கம்.

நீர்க்கோல -  எழுதழல்  இடைவெளியில் சிறு அலைகழிப்பு மனதில் இருந்துகொண்டேயிருந்தது. செப்டம்பர் பதினாலாம்தேதி மாலை முதலே "இன்னும் ஆறு மணிநேரம்",  " இரண்டு மணிநேரம்" என்று நண்பர்களோடு கவுண்டவுன் பரிமாறிக்கொண்டேயிருந்தேன்.

பாண்டவர்களின் முதல்படைநகர்வில் வென்று கொணர்ந்த சௌவீரத்து மணிமுடியை கூச்சத்துடன் ஏற்றுக்கொண்டவள், கொற்றவை குடிகொண்ட குந்தியாய் குருதிபலியோடு நகர் நுழைகிறாள்.

"அவர்கள் நாடாள்வதை நான் காணவேண்டும்… அதற்காக முப்புரத்தையும் எரிப்பேன்"

அம்பையின் ஆலயத்தில் தன் கையால் பலிகொடுக்கையில் குந்தியின் முகபாவனைகள் அபிமன்யுவிடனான உரையாடலினூடாக வெளிப்படுகிறது.

விதுரரோடும், சகுனியோடும் நானும் அஸ்தினபுரியை சுற்றிவந்தேன். வடக்குவாயிலின் வழியே 
சட்டம் அடிக்கப்பட்ட சாளரத்தை சகுனியின் குதிரை நெருங்குகையில்  மனக்குதிரை முன்பாகவே ஓடி சிவையை தொட்டுவிட்டது.

"பெரீந்தையே!!!" என்று கர்ணனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு வலம் வந்த இளைய கௌரவர்களின் குறும்பு சற்றும் குறையாமல் அதகளமாய் இருக்கிறது.

வெய்யோனில்  மீண்டும் மீண்டும் வாசித்து சிரித்த பகுதி கர்ணன் இளைய கௌரவர்களை சந்திப்பது. 

[
எனக்கு மொத்தம் ஏழு புள்ள, அதுல ரெண்டு பொம்பளபுள்ள, என்னால அந்த ரெண்டதான் அடையாளம் கண்டுபிடிக்க முடியும், அதுவும் அவங்க ரெண்டுபேராலயும் என்ன அடையாளம் கண்டுபிடிக்கமுடியும்கிறதுனாலதான்..

யாரோட புள்ளன்னு எப்படி கண்டுபுடிப்பீங்கன்னு கர்ணன் கேக்கையில் துச்சலன் சொல்லும் பதில்.

நாலுவயசுக்கு மேலேயிருக்குற பசங்கள மட்டும் அழைச்சிகிட்டு போகலாமான்னு கர்ணன் கேக்க,

அதுக்கு முதல்ல எண்ணனுமே, அதுக்குண்டான கணக்குநாயகங்கள் அமைச்சுப்பணியில இல்ல இருக்காங்க..
என்று சொல்லும் துர்முகன்
]
அதற்க்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கிறது எழுதழலில் அவர்களின் அட்டகாசம்.

 "எப்போது எண்ணிப்பார்த்தாலும் ஒன்றிரண்டு குறைந்தும் கூடியும்தான் எண்ணிக்கை இருக்கிறது" என்று செவிலி பிரலம்பனிடம் அங்கலாய்த்து கொள்ளும்போதும் அதே சுவாரஸ்யம்.

 இளையயாதவர் குறும்பனைத்தையும் 
குத்தகைக்கு எடுத்தவனாய் அபிமன்யூ.  அபிமன்யுவை பார்ப்பதற்க்கு முன்னால் "தலையெழுத்துன்னு ஒண்ணு இருக்கு" அப்படீன்னு யார் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்கமாட்டான் பிரலம்பன்.

இது மூன்றாவது முறை. கடந்த இரு முறையும் "பேரரசே.." என்றும் "பிதாமகரே.." என்றும் இடைமறிக்கும்
 விதுரரை "இன்னும் ஒரு அடிவிழுந்தா ஆள் குளோஸ், அமைதியா வேடிக்கை பாக்கவேண்டியதுதானே, எதுக்கு குறுக்கால புகுந்து இந்தாளு துரியன காப்பாத்துறாருன்னு.." முன்பு விதுரரை கடிந்துகொண்டதுண்டு.

இம்முறை துரியன் உயிர்காக்கும் விதுரர், நிஷாதத்து அமைச்சராய் தெரிகிறார்.

 நிருதனும்,முக்தனும்,சுதீரனும் பிறவியெழுந்தவண்ணம் இருக்கிறார்கள்.

சிலந்திவலையாய் பின்னிச்செல்லும் கௌரவவனத்து
காலடித்தடங்களைப்போல் 
பரபரவென பலதிசைகளில் பற்றிக்கொண்டிருக்கிறது
எழுதழல்.

கைவிடுபடை விசையாய்
வஞ்சம்கொண்டிருக்கும் ஆழ்மன அபிலாஷைகள் சுவாரஸ்ய சுவாலைகளாய் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.

யாருடையது எரிந்து தணியப்போகிறது?.
யாருடையது கணன்று எரியப்போகிறது?.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.

இனியவைஅன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

வெண்முரசின் நாட்கள் இனியவை.  சீனு அந்த பக்கம் இருந்து வலது கை நீட்டி அபிமன்யுவின் தோளில் போட்ட அதே சமயம் நான் இந்த பக்கம் இருந்து அவனது தோளில் கை போட்டேன்.  இப்படி அபிமன்யுவிடம் தோழமை பெருகுகையில் ஒரு சகோதரி அவனுக்கு காதல் கடிதம் வேறு போட்டு விட்டார்.  எடுத்த எடுப்பிலேயே எல்லோராலும் விரும்பப்படும் ஒருவன் ஆகி விட்டான்.  தொலைக்காட்சி மகாபாரதத்தில் அரைகுறையாக கண்டு அவனது பரிதாபத்துக்குரிய சாவு மட்டுமே அறிந்திருந்தேன்.  துரியோதனனின் நல்லாட்சி பற்றி கூறி நியாயம் செய்தது போலவே, அபிமன்யுவின் மறைவிற்கு என்பதை விட அவனது துடிப்பான வாழ்விற்கு மையம் தருகிறீர்கள்.  மரணத்தினால் அல்லாமல் வாழ்வினால் அவன் நினைவு கூறத்தக்கவன் என்று.  எப்படியும் அது எல்லோருக்கும் வரும், சீரியசாக யோசித்து இப்போதே கவலைப்பட விரும்பவில்லை.  உவகையின் தருணங்கள் நிரந்தரம் நிலைப்பவை.


அன்புடன் 
விக்ரம்
கோவை

நுழைவுஇனிய ஜெயம்,


அபிமன்யுவின்   அஸ்தினாபுரி  நுழைவு, அரண்மனை நுழைவு, பாட்டியுடனான  சந்திப்பு   அனைத்தின் வழியே  துலங்கி வருகிறது  அபிமன்யு போன்ற ஒருவனின் இளமைக்கே உரிய வசீகர ஆளுமை. 

முன்பு  ஒரு பதிவில்  ஒரு மாலில் , அதன் கண்காணிப்பாளர்களால்   தான் நடத்தப்பட்ட விதம் குறித்து போகன் மனம் கசந்து எழுதி இருந்தார்.  உடையும் ,உடல்மொழியும் ,  ஒரு மாலுக்குள் புழங்க  எந்த அளவு  மறைமுக நிபந்தனையாக செயல்படுகிறது என எழுதி இருந்தார். 

அவர் என் நண்பரை  கண்டால் வியந்து வாயைப் பிளந்திருப்பார்.   எனது நண்பனுக்கு இருபத்து நாலே வயது,   மாலின் எந்த பிரும்மாண்ட வாயில் ஆனாலும்  அதன்  மையக்கோட்டில் வைத்தே நுழைவார்.   பெரும்பாலோர்   அத்தனை பிரும்மாண்ட  வாசலால் துணுக்குற்று  ஏதேனும் ஒரு ஓரத்தை சார்ந்தே நடப்பர்.    உள்ளே  யாரை சந்தித்து எதை கேட்கவேண்டும் என்றாலும் , உடலிலோ மொழியிலோ  ஒரு சிறு குழைவோ பணிவோ  இன்றி  தடாலடியாக ,நேரடியாக  கேட்பார்.    கலைந்த தலை, டீ ஷார்ட் , நைட் பேண்ட் , சாதா செருப்பு , இதுதான் பெரும்பாலும் நண்பனின் உடை.  இத்தோடுதான் பல மால்களுக்குள்  சுற்றித் திரிந்திருக்கிறோம்.   அவனைக்கண்டு   சுருங்கிய  ஒரு விழியை இதுவரை நான் கண்டதில்லை.  மாறாக    அவனுக்கு  அவன் கேட்டதற்கும்   மேலதிகமாக  எதயோ சொல்ல வருவார்கள்,  அதற்குள்  அவன் விருட்டென  வெகு தொலைவு சென்றிருப்பான். 

காரணம்  ஒன்றே ஒன்று. அவன் வழியே  கொப்பளித்துத் ததும்பும் இளமை.   அந்த  இனிய   பொழுதுகளை  ,அப்படி ஒரு இளமையின் அருகே இருந்து பார்த்தால்தான்  உணரவே முடியும்.    அபிமன்யு  முழுக்க முழுக்க அந்த  சித்திரம் வழியே ,இளமை கொண்டு பொலிகிறான் . 

அத்தனை பேரையும் கொல்ல வேண்டும்  என்று மனம் புழுங்குகிறாள் குந்தி.  அவள் மீது  அபிமன்யுவுக்கு கோபமே இல்லை.   ஏன்?  அதற்கான பதிலைத்தான் அவன்  அந்த கைவிடு படைகள் முன்பு நின்று சொல்கிறான்.  

ஆம் அது குந்தியின் வஞ்சமல்ல , அவள்  சத்யவதி கொண்ட வஞ்சத்தின் கைவிடு படை மட்டுமே.  அந்தக் கைவிடு படைகள்  கொல்ல வேண்டிய  உயிர்கள், அவை  பூட்டப்பட்ட கணம்  பிறக்கவே இல்லை.  அந்த பிறக்காத  தலைமுறையை சேர்ந்தவன்தான் அபிமன்யு.  அவனுக்கு இன்று நடப்பது  எல்லாம்    என்னவாக  பொருள் அளிக்கும்? இங்கே  அவன் செய்வதற்கு என்ன இருக்கிறது?   ஒன்றே ஒன்றுதான்  அதைத்தான் அவன்   குருஷேத்ரத்தில் செய்கிறான். 

Wednesday, September 20, 2017

'முன்செல்லும் பறவை'எழுதழல் ஓங்கி வளரும் வேகம் வாசக மனங்களிலும் பற்றிவிட்டது. ஒவ்வொரு நாளும் நள்ளிரவிலேயே படித்துவிட எண்ணி இரண்டரை மூன்று மணி வாக்கில் படித்து விடுகிறேன். அதன் பின்னர் மீள் வாசிப்பு செய்ய பல குறிப்புகள் தூண்டுகின்றன.

'முன்செல்லும் பறவை' என்ற சொல்லாட்சியைப் படித்ததும் உடனடியாக சொல்வளர்காட்டில் 'செந்நிற வழிகாட்டிப் பறவை' என்ற உவமையை மனம் தொட்டெடுத்தது. 

சொல்வளர்காட்டில் மூன்று ஆதித்யர்கள் குறித்த குறிப்பு வரும் - மாதரிஸ்வான், ஆபாம் நபாத், வாக் என்று அவர்களை தருமன் விவரிப்பார்.

முதலமாவனாகிய மண்ணில் எழுந்த அக்னி பெரும்பசி உடையவன், ஆறாச்சினம் கொண்டவன், வழிகாட்டிப் பறவை. இரண்டாமவன் நீரில் உருக்கொண்டவன். மூன்றாமவன் நாவில் அனலென எழும் அக்னி. இம்மூவரும் ஒருவரை ஒருவர் அறியும் தருணமே வேள்வி என தருமன் விளக்குவார்.

மானுடர் மனங்களில் கருக்கொள்ளும் அணையா நெருப்பு, உடலெனும் மண்ணில் வெளிப்படுகிறான், நிணமென குருதியென நீரில் உறைகிறான், மானுடர் நாவில் அனலென எழுகிறான். வேள்விக்குளமென வாழ்வை அதன் பொருட்டே ஆகுதி செய்கிறான்.

மண்ணுக்காகத் தொடங்கிய போர், தீயில் பிறந்த பெண்ணுக்காகத் தொடங்கிய போர், ஆழிவண்ணன் சொல்லுக்காகத் தொடங்கிய போர் என்ற வகையிலும் இது வேள்விதான். மண்ணில் சொல்வளர்காடுகள் தோறும் அலைந்து, காடுவாழ் கிராதனென உருமாறி, மண்ணில் மலர்ந்த மாமலர் தோறும் தேர்ந்து பெற்ற அக்னி, நீருக்குள் என நீர்க்கோல வாழ்வில் மறைந்திருந்து, தூதென வாக்கில் வெளிப்பட்டு எழுதழல் வளர்கிறது. மனம் 
இப்பெருவெளி நடனத்தில் பித்தாகிறது தெளிகிறது.

வேள்விக்களம் நிரத்தப்படுகிறது. அவியாகுதலொன்றே முன் செல்லும் வழி.
சுபா
 

இளம் அபிமன்யுஇனிய ஜெயம், 

வெண்முரசில்  இன்றைய இளம் அபிமன்யுவின்  சித்திரத்தை வாசித்த பின்  தேடி எடுத்து மீண்டும் விரித்த கரங்களில் கதையை வாசித்தேன்.  பல வருடம் முன்பு  அந்தக்கதையை எழுதுகையில் நீங்கள் கொண்ட ,மொழி மற்றும் உணர்வு எழுச்சியில் இருந்து  இன்று  மிக மிக உயர்ந்து வந்திருக்கிறீர்கள். 

நீலன் மட்டும் அன்றும் இன்றும் மாறாத அதே தீவிரமும் புன்னகையும்  கொண்டவனாக விளங்குகிறான். எத்தனை லாவகமாக  உணர்வு கத்திகளை , பொம்மைகளாக மாற்றி விளையாடுகிறான்.   பிருகத்காயர்  அர்ஜுனனை நோக்கி வீசும் அதே கத்தியை,  அந்த ஆற்றல் கொஞ்சமமும் குறையாமல்  ,அர்ஜுனனைக்கொண்டு  பிருகத்காயரை நோக்கியே மீண்டும் திருப்பி விடுகிறான். 

புலன்கடந்தவனா நீ.  எனில்  உன்னை இங்கே இப்படி நிற்க வைப்பது எது ?  உனது க்ரோதம்தானே  என்கிறார் ரிஷி.  அர்ஜுனனின் வில் தழைகிறது .   அர்ஜுனா  அபிமன்யுவை நினைத்து  உன் வில்லை உயர்த்து  என்கிறான் நீலன்.  ஆம்  அர்ஜுனன்  கடக்க வேண்டியது க்ரோதத்தை . அதற்கான தருணம் இது அல்ல. இது போர்க்களம். இங்கே க்ரோதமும் ஒரு படைக்கலம் .   கிருஷ்ணன்  அதைத்தான்  மிக சரியாக இயக்குகிறான் .

ரிஷி  தந்தையின் துயரை முன்வைத்து  அர்ஜுனன் உறுதியை குலைக்க  ,நீலன்  திரௌபதியின் துயரை  முன்வைத்து அர்ஜுனனை மீண்டும் உறுதி கொள்ள வைக்கிறான். 

ரிஷியின்  இறுதி  ஆயுதத்தின் முன்  அர்ஜுனன் முற்றிலும் நிலை குலைந்து போகிறான்.    தனது  மைந்தனின் பொறுத்து  ஏழேழு ஜென்மம் நரகில் உழலும் வண்ணம் தனது  தவ வலிமை மொத்தமும் தாரை வார்க்கிறார்.    அர்ஜுனன் தடுமாறுகிறான் .   அர்ஜுனன் அம்புகளால் வானில்  மிதந்துகொண்டிருந்த  ஜெயத்ரதனின் தலை  களம் நோக்கி இறங்குகிறது.  கௌரவப்படைகளில் பெரும் ஆரவாரம்.  மகனின் தலையை  கீழிறங்கும்  எவரும்  , மகனுடன் சேர்ந்து மடியவேண்டும்  என்பதே ரிஷி வாங்கிய வரம். 

அர்ஜுனா   ஏழு ,உயர்த்து உன் காண்டீபத்தை   இந்த ரிஷியின்  அடிவயிற்று நெருப்பை  எண்ணி உனது அம்பை விடு.   முழங்குகிறான் நீலன் .  காண்டீபம் அதிர  ஜயத்ரதன்  தலை  இனி கீழேயே வராது என்னும் உயரத்துக்குப் பறக்கிறது. 

ரிஷிக்குப் புரிந்துவிடுகிறது.  அர்ஜுனனை வெல்ல இயலும்  அவன் வெறும் அர்ஜுனனாக மட்டும் இருந்தால்.  அவன் நீலனின் படைக்கருவி.   ரிஷி   நீலனின் காலில் விழுகிறார்.  நீலனின் வழிகாட்டுதலின் படி   தனது மகனின் தலையை கரங்களில் வாங்கி கீழே வைக்க   விரித்த கரங்களுடன் சென்று அமர்கிறார். 

வெண்முரசின்  ஒளியில் வைத்து இன்று இக் கதையை வாசிக்க இக் கதை கிளர்த்தும் துயரம்  அளப்பரியது.   வெண்முரசில்  அபிமன்யுவின் தோள் மேல் கை போட்டபடி அஸ்தினாபுரிக்குள் நுழைந்த உணர்வு. 

அர்ஜுனனை   அபிமன்யுவை நினைத்துக்கொண்டு அம்பு விட சொல்கிறான் நீலன். அர்ஜுனன் என்ன அங்கே அப்போது பிரலம்பன் நின்றிருந்தாலும்  அதே க்ரோதம்தான் கொண்டிருப்பான்.    

அர்ஜுனனை   ரிஷியின்  அடிவயிற்று நெருப்பை  எண்ணி அம்பு விட சொல்கிறான் நீலன்.   வெண்முரசு பின்புலத்தில்  ரிஷியின்  தவிப்பு   இப்போதுதான் முழுமையாக உள்ளே இறங்கி உலுக்குகிறது.   தனது மகன்   செய்யப்போவதெல்லாம்  தெய்வங்களும்  திகைத்து நிற்கும் பிழைகளையே .  நிச்சயம்  அவன் தலையை யாரேனும் கொய்வர்   என்பதை அவனது  தந்தை உள்ளுணர்ந்ததாலேயே  தனது தவத்தைக் கொண்டு , மகன் தலையை இரக்கும்  அவனும் அக் கணமே  தலை சிதறி இறக்கவேண்டும் என வரம் வாங்குகிறார். 

எனில்  எத்தனை காலம்  ஒவ்வொரு நாளும்  தனது மகனை கொல்லப் போவது யார் யார் என ஒவ்வொரு கணமும் முடிவிலா நரகத்தில்  வாழ்ந்திருப்பார்.   அந்த நரகத்தில்  வாழ்ந்து வாழ்ந்தே, ஏழேழு  பிறவி  நரகில் உழன்றாலும் சரி என தவ வலிமை அனைத்தையும் திறக்கிறார். 

விரித்த கரங்களுடன்  மகனின் தலையை ஏந்த காத்து அமர்ந்திருக்கிறார்.  எத்தனை வலி மிகுந்த தருணம்.  மகனை முதன் முதலாக தொடப் போகிறார்.  ஆம் முதன் முதலாக . அவனது கொய்யப்பட்ட தலையை மட்டும்.   முதல் முறையாக  அவனது சிரசு கோதப் போகிறார்.   இருவரும் அக்கணமே மரணிக்கப் போகிறார்கள். 

அபிமன்யுவணக்கம் ஜெமோ,

ஏன் எங்களை இப்படி வதைக்கிறீர்கள்..... அபிமன்யுவின் ஒவ்வொரு செயலும் சொல்லும் இப்போதே நெஞ்சில் கத்தியை பாய்ச்சுகிறதே. ஒவ்வொரு கணமும் அவனை காதலிக்க வைக்கிறீர்கள்... அவன் இழப்பை எப்படி தங்குவோம்?

நம் முன்னோர்கள் மூடர் அல்ல..... வாட்சாப் வெறியர்களின் வார்த்தைகளை சொல்லி எங்களை கெக்கலிக்க வைத்து விட்டீர்கள். அவன் பெண்களை பெயர் சொல்லி அழைப்பதும், வீரர்களுடன் அளவளாவுவதும்... ஆகா ஆகா.

//“அது சற்று முன்புவரை… இனிமேல் நான் இறந்தால் அருகே இறந்துகிடக்கும் உடல் உம்முடையது.”//
//நுழைவது கூட எளிது… வெளியேறுவது கடினம்…” அபிமன்யூ “மெய்யாகவா?” என்றான். “அப்படியென்றால் அதுதான் என் இடம்… வருக!”//

இப்படி எல்லாம் வேறு கோடிட்டு காட்டுங்கள்.. கடவுளே, செஞ்சோற்று கடன் தீர்த்த கர்ணனுக்கு கூட இப்படி வருந்த மாட்டோம் போலிருக்கிறதே. உப பாண்டவர்களையும் இப்படி உருவகித்து விடாதீர்கள், தாங்க மாட்டோம்.

அன்புடன் 
சுவேதா 

Tuesday, September 19, 2017

கதைமுகம்வணக்கம்.

இப்போது தான் எழுதழல் வாசித்து முடித்தேன். ஏற்கனவே எத்தனையோ முறை வாசித்த மகா பாரத கதை தான் ஆனால் ஏன் இதற்கு முன் அறியாத கதை போல புதிதாக உணர வைக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை ஒவ்வொரு சம்பவமும் விரிவாக சொல்லப்படுவது காரணமாக இருக்கலாம்.

துரியோதனன் பற்றிய நல்ல விடயங்கள் எனும் போது இதுவரை எனக்கு அவன் சிறந்த நண்பன் என்றது மட்டுமே. ஆனால்மிகச் சிறந்த ஆட்சியாளன் என்பதையும் அறிகிறேன்.

நன்றி

அனிதா

அன்புள்ள அனிதா
வழக்கமான கதைகள் ஒற்றைப்படையாகவே கதைமாந்தர்களைக் காட்டமுடியும். ஏனென்றால் பிரபல ஊடகம் அப்படி. ஆனால் இலக்கியம் அவர்களை முரணியக்கம் கொண்டவர்களாகவே முன்வைக்கும்

ஜெ

பலிவணக்கம் ஜெ. எழுதழல் அமைதியாகத் தொடங்கி உள்ளது. இனிது நிறைவேற வாழ்த்துகள்.
எழுதழல் நல்ல தலைப்பு வினைத்தொகை
பெண்கள் தாமே அறுத்துப பலிகொடுக்கம் வழக்கம் இருந்தி ருக்கிறதா?

சாணியை என்பது சாணங்களை என்று இருக்கலாமா?

;தீப ஆராதனை’ என்பதை சுடராட்டு என அழகாகத் தமிழாக்கி இருக்கிறீர்கள்

வளவதுரையன்

அன்புள்ள வளவதுரையன்

பழங்காலத்தில் பலிகளை அவர்களே கையால் இடுவதே வழக்கம். கேரளத்தில் சென்ற தலைமுறையில்கூட அம்மச்சிகள் கைகளால் பலிகொடுத்தார்கள். நானே கண்டிருக்கிறேன்

ஜெ

செந்தழல் போற்றுதும்அன்புநிறை ஜெ,

செந்தழல் போற்றுதும் எழுதழல் போற்றுதும்.

காற்றே இல்லாத பின்னிரவில் தொடங்குகிறது எழுதழல். 

அலுவல்கள் ஓய்ந்து துறையில் மானுடர் மயங்கும் நேரம். துயிலற்ற கங்கை வழிந்து கொண்டே இருக்கிறாள்.   
காலமென்னும் பெருவெள்ளத்திலும் அழியாத கனலோடு கங்கையின் கரையில் அம்பை அணையாநெருப்பெனக் காத்திருக்கிறாள். இருளில் மறைந்ததால் இல்லையென்று நம்ப விழைந்த அனைத்தும் ஒளி கொள்வதற்கு முந்தைய தருணம். 

நெருப்பை அஞ்சிக் கால்பரப்பும் ஆடு மலர் கண்டதும் நாக்கு நீட்டுகிறது. பலிக்களம் வரை விழைவு கொள்ளும் எளிய உயிர்கள்.

முழவொலியில் உயிர்த்து எழும் தேவென காற்று தீண்ட சிறுமொட்டு  பெருங்கனலெனக் களிகொள்கிறது. காடு வெந்து தணியக் காற்றே வாகனம். மாருதனின் துணையோடு களமெரித்தாடப் போகும் அனல்மகளுக்காகக் காத்திருக்கும் செங்களம்.


நோக்கியே நெடுங்காலமாகிவிட்ட அம்பாதேவி, எவரும் வர மறந்த அஜபாகர்  ஆலயம், கண் முன் இருந்தும் மக்கள் மனதில் மறைந்து போன அனுமனின் கதாயுதம், மறக்கவே முடியாத தெய்வவாக்கென தீர்க்கசியாமர் சொற்கள், குருதி மழை, 
உபாலன் மரணம், துரியன் பிறப்பு நினைவுகள் என்று மனதின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் நினைவுகள் மேலெழும் தருணம்.

முற்றாக மூடி சட்டம் அடிக்கப்பட்ட சாளரம் என்ற வரியை வாசித்ததும் விதுரரின் அன்னை உருவம் மனதில் எழுந்தது. அடுத்ததாக இயல்பாக சம்படைக்குச் சென்றது. சகுனியின் மனவோட்டம் செல்லும் திசை சில நொடிகள் முன்னதாக வாசகரின் மனதில் தோன்றுகிறதெனில் கதையின் களமும் நிகழ்வுகளும் மாந்தரின் ஆளுமைகளும் எவ்வளவு தெளிவாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன!.

இதே சாளரத்தில் இதற்கு முன்னர் வெறித்து அமர்ந்திருந்த சுனந்தை, சந்தனுவின் இளைய மனைவி காந்திமதி மற்றும்
மகாநிஷாதகுலத்து இளவரசியரான சந்திரிகையும் சந்திரகலையும் குறித்து கர்ணனும் சிவதரும் பேசிக் கொள்ளும் தருணம் நினைவிலெழுந்தது. 


காலமெனும் சுருதகர்ணம் ஒலித்து காஞ்சனம் எனப் பொன்னுருகும் வேளை. அஸ்தினபுரி விழித்தெழ வேண்டிய தருணம்.  வெகு நாட்களாக காத்திருந்து பாறை போலாகிய விசைகள் உயிர் கொள்கின்றன. கைவிடுபடைகள் போல துளித்துச் சொட்டும் உளக்குருதியின் நினைவோடு ஒரு மெல்லிய தொடுகையை எதிர்பார்த்தும் அஞ்சியும் மனிதர்கள்  காத்திருக்கிறார்கள்.
நெடுங்காலம் மறக்கப்பட்டுவிட்டவற்றை மறக்க முயன்றவற்றை கனவெனத் தொட்டு எழுப்பும் விடியலுக்கு முந்தைய கருக்கலில் மூன்று மாந்தர்கள் களத்தில்.

கோட்டைச்சுவர் மடிப்புக்குள் இருளுக்குள் செவிகளின் அசைவாக நின்றிருக்கும் யானைகள் போல அனைத்து மனங்களின் வஞ்சங்களும் விழைவுகளும் காயங்களும் இல்லாதிருப்பது போல தோற்றம் கொண்டு பெருங்கதவம் திறந்து விட்டு அசைவு காட்டி மறைந்துநிற்கின்றன.

நிழலும் ஒளி கொள்ள வளர்கவே எழுதழல்.

மிக்க அன்புடன்,
சுபா

அமுதகலம்அன்பு ஜெமோ சார்,
               வெகு நாட்களுக்குப் பின் அஸ்தினபுரி ... சர்மிஷ்டை யின் வாழ்வை வாசித்த பின்  வரும்  அமுதகல முத்திரை  வேறு மாதிரி தோன்றுகிறது.

இரா.சிவமீனாட்சிசெல்லையா

எரிதழல்

இனிய ஜெயம்,

மெய்யாகவே  நீண்ட வனவாசம் முடித்து,  குந்தியின் முகத்தை காண்பது போல ஒரு உணர்வு.  

  பிரயாகை துவங்கி நீர்க்கோலம் வரை ,   வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்தின் வழியே  திரௌபதியின்  ஆளுமை  புடம்போடப்பட்டு  செம்மையாகும்  சித்திரத்தை காண்கிறோம்.  

வனவாசத்தின் போது  தனது  பயணமாக கந்தமான மலையை அடைந்து மீள்கிறார் தருமர்.    அந்தப் பயணம்  அவருக்கு அளித்த எதுவும் அவரை பண்படுத்த வில்லையா?   மீண்டும் பழைய தருமராகத்தான் அவர் இருக்கிறாரா?   

பாசுபதம் அடைந்தபின் அர்ஜுனன்  என்னவாக இருக்கிறான்?

திரௌபதியை  அலைக்கழித்த ஜயத்ரதனை  துவம்சம் செய்யும்,   திரௌபதியை அவமதித்த கீசகனை  அடித்துக் கொல்லும்  பீமன்.  அதிலிருந்து இதுவரை என்னவாக இருக்கிறான்? 


அருக  நெறி தேர்ந்து அமரும் சகாதேவன்   நிலை என்ன? 


ஸ்தாயி பாவம் , விஷய பாவம்  எனும்  கருவி கொண்டு அளந்து பார்க்கலாம். 

தேவயானி, தமயந்தி கதைகள் வழியே  திரௌபதியின் விஷய பாவ  குணாம்சத்தின் பரிமாணங்கள் துலங்கும் அதே சமயம் ,இத்தனை அழுத்தங்கள் வழியே அவள்  என்னவாக  ஆகிறாள்?    ஐந்து கிராமம் கூட போதும்  எனும்  வேட்கையோ பற்றோ அற்ற  நிலைக்கு  அவள்  வரும் சித்திரத்தையே மகாபாரதம் காட்டுகிறது.

அர்ஜுனனுக்கு வேறு சவால்.   பாசுபதம் நோக்கிய பயணத்தின் சவால் ஒன்றினில்  தனது மகனின்  உயிரை  எமன் வசம்  சமனாகத் தந்து  வேறொரு உயிரை மீட்கிறான். அவனது அந்த உறுதி இனி குரு ஷேத்ரத்தில் விதியால் சோதிக்கப்படப் போகிறது. வெல்வானா ? அல்லது புத்ர சோகம்  அவனது நில்லாப் பயணத்தை முடித்து வைக்கப் போகிறதா?

கந்தமாதனம்  விட்டு மீண்ட தர்மர்  ஏன் மீண்டும் கீழான மனநிலைகளை  வெளிப்படுத்துகிறார்?     சகாதேவனின் நிலை என்ன?   இரண்டுக்கும் விடை ஒன்றே ..  விசை கொண்டு  அந்த முனை செல்லும் ஊசல்குண்டு , அதே விசையுடன்  இந்த முனைக்கு வந்தே தீரும். 

ஆம்  தர்மனும் , சகாதேவனும்  ஒற்றை மையத்தில் தொங்கி ஆடும் ஊசல் குண்டு. மாறாக  நேமி நாதர்    எரிந்து ,எரிந்து, விண் துளைத்து உயர்ந்து கொண்டே இருக்கும் எரிகல் .  அவரது ஸ்தாயி ,விஷயம் இரு பாவங்களும் ஒன்றே.  அதனால்தான்  அவர் ஆகி அமர்ந்தவர் ஆக மாற, தர்மன் வெறுமே  ஆனவர் ஆகவும், சகாதேவன் வெறுமே அமர்ந்தவர் ஆகவும்  மாற நேர்கிறது. 

பீமன்  ஜயத்ரதன் துவங்கி ,   கீசகன் வரை   திரௌபதி மீதான காதலால் மட்டுமே   நாட்பட நாட்பட சுவையும் போதையும் கூடும் மது போல கனிகிறான் .  மாமலர் தேடிய அவனது பயணத்தின் இறுதி சவால் முன் அவன் கண்களை மூடிக் கொள்கிறான். பயந்து பின்வாங்கி ஓடுகிறான்.  ஆம்   எந்த ஆற்றல் வாய்ந்த மிருகமும் இறுதியில் அதேயே செய்யும்.  ஒரு  வகையில்  பீமனின் மிருக குணம்  எந்த அளவு  அவனுக்கு  முன்னெச்சரிக்கையை  அளிக்கிறது  என அவன் கர்ணனை முதன் முதலாக சந்திக்கும் தருணத்திலேயே தெரிந்து விடுகிறது.   குலாந்தகன் நான் என நெஞ்சை அறைந்து வல்விளி  விடுகிறான்  பீமன்.   குலம்  அறுத்தல் எத்தகைய வலி அளிப்பது ,என  குரு ஷேத்ரத்தில்  கர்ணன்தான் அவனுக்கு உணர்த்தப் போகிறான். பாவம். பாவம்தான் பீமன். 

அனைவருக்கும் மேலே குந்தி.  இன்றைய அவளது இரு பாவனைகளும் ஒன்றே வஞ்சம்.   அந்த நெருப்பைத்தான்  அம்பை வசமிருந்த அவள் மீண்டும்  தூண்டிக் கொள்கிறாள். உலராக் கண்ணீர்  விளைவித்த நெருப்பு.  

மூச்சு முட்டவைக்கும் ஆயாசம் அளித்தது  இன்றைய அத்யாயம்

கடலூர் சீனு

Monday, September 18, 2017

வியாழவட்டம்Dear Jeyamohan 

Great start. First Kunthi arrives in Hastinapur. Ambaji temple, and the oblations made to her
made me to pick the "Mudarkanal" book to read about Ambai's story one more time. In the second chapter,  Sakuni enters with the description about Duryodhana's birth and the bad omen that followed. Excellent way of reminding the key past incidents in your beautiful Tamil.

Vidhura, the decision makers and contributors assemble and the discussion leans towards Duryodhana's intention. Could you elaborate on what exactly the " Viyazha vatta Nyayam" means? Is this also practiced by Tamil kings?

Thanks as always. Looking forward to reading how Ambaji's  "thazhal" will be lit.

Warm regards 

Sobana Iyengar

அன்புள்ள சோபனா

வியாழவட்டம் என்றால் வியாழனின் ஒரு சுற்றுவட்டம். 12 ஆண்டுகள். இந்தக்காலக்கணக்கு இப்போதும் சோதிடத்தில் உள்ளது. இதனடிப்படையிலேயே ஆயுள்தண்டனை 12 ஆண்டுகள். கைவசச் சொத்துரிமை 12 ஆண்டுகள். 12 ஆண்டுகள் என்பது ஒரு முழு ஆயுள். 5 முழு ஆயுளில் 60 ஆண்டு கொண்டாட்டம்

ஜெ

"துயிலும் கனல்" -

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

"துயிலும் கனல்" - அத்தியாயத்தின் தலைப்பே ஒருவித கூறமுடியாத சிறு பதட்டத்தை அளித்தது.  அது என்னவென்று விளக்கிக்கொள்ள முயல்கிறேன்.  துயில் கருணை மிக்கது, இக்கனலோ அதை அழிக்கக் கூடியது.  உறங்கும் போதும் விழித்திருக்கும் ஞானியரின் ஒளி போன்றதல்ல, இக்கனல் கருணை அற்றது.  கனல் துயில்வதில்லை, துயில்கின்ற கனல் அருளுடையது அல்ல.  இருளின் பெருங்கருணைக்கு இடர் இக்கனல்.  முதற்கனல் எழுதழல் ஆகிறது.  அம்பாதேவி பலி கொண்டு எரிக்கும் நெருப்பென எழுகிறாள்.  கண்ணகி மதுரையை எரித்தபோது அதன் வீதிகளில் ஓடுவதாக ஒரு எண்ணம்.  ஆனால் அவள் இளங்கோவடிகளின் சமண கண்ணகி, அவர் தரும் விதிவிலக்குகளின் பட்டியலை ஏற்றுக்கொண்டு ஊர் எரிக்கிறாள், அம்பை வேறு அவளது எரி வேட்கையில் தப்புவது ஒருவரது தனிப்பட்ட தெய்வக் காவல், அருள் அல்லது ஊழ் அல்லது சாமர்த்தியம்.  சரி அதை கடந்து விடுகிறேன்.

"நடை" - இச்சொல்லின் பொருளுக்கு உண்மையில் பொருள் தருகிறது வெண்முரசு.  "நானெல்லாம் ஒரே நாளில் இரண்டாயிரம் பக்கங்கள் படித்து விடுவேன்" என்பது இங்கே ஆகவே ஆகாது.  வணிக எழுத்துக்களின் பக்கங்களில் நானும் வேகமாக ஓடி இருக்கிறேன்.  "அடடா ஒரே நாளில் இத்தனை பக்கங்கள் படிக்கிறாயே. உன் அறிவே அறிவு" என்று மகிழ்ந்தும் இருக்கிறேன்.  படித்து விட்டோம் என்று எண்ணமும் இருக்கும்.  மாறாக இங்கு வெண்முரசின் அரச வீதிகளில், கணிகர் வீதிகளில், மட்டுமல்ல குறுங்காடுகளில், பெருவனங்களில், சிற்றூர்களில், வெளிகளில் எங்குமே வாசகருக்கு "நடை" மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.  எங்கும் ஓடிக் கடக்க முடியாது.   எதுவும் கவனிக்கப்படாமல் விடப்பட முடியாது. ஒரு சொற்றொடரை முதலில் வாசித்தவுடன் அது பாதி பொருளையே தந்து மீதி சொற்களாகவே நிற்கிறது. இரண்டாம் முறை அச்சொற்றொடரை ஒவ்வொரு சொல்லாக தொட்டு மலர்த்த வேண்டியிருக்கிறது.  ஒவ்வொரு சொல்லையும் அதன் பொருளுக்கு சென்று நின்று கற்பனை செய்து, கண்டு, உய்த்துணர்ந்து பிறகே நகர முடிகிறது.  ஓடினாலோ "படிக்கவே இல்லை. தவறவிட்டாய்" என்று தோன்றுகிறது.  மேலோட்டமான எழுத்துக்களில் கிடைக்கும் படித்துவிட்ட உணர்வை தருவதில்லை.  வாசிப்பு எப்படி தியானம் ஆக முடியும் என்ற கேள்விக்கு இது விடை போலாகிறது.  எதையும் அரைகுறையாக, கவனம் தராமல் இங்கு பார்க்கவே முடியாது.  ஒரு அத்தியாயத்திற்கு 30-40 நிமிடங்கள்.  ஒன்று உண்மையிலேயே வாசி அல்லது இந்த பக்கம் வராதே.  அதுசரி ஏன் இப்படி எழுத வேண்டும்? மிகவும் எளிமையாக அனைவரும் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொள்ளும் விதமாக மக்கள் கலை இலக்கியமாக ...? அதற்குத்தான் முகநூல் அறிஞர்கள் இருக்கிறார்களே உங்கள் தேவைகளை அவர்கள் நிறைவு செய்வார்கள்.

முன்பு முகநூலில் "எழுத்தாளர்" என்று கூறப்படும் ஒரு கெட்டவார்த்தை அறிஞர் தங்களுடைய சொற்றொடர்கள் சிலவற்றைப் போட்டு கேலி செய்து வசைகள் செய்திருந்தார்.  அப்போது இது படிக்கக் கடினமாக உள்ளது என்பதைத் தாண்டி கடும் பகையும் கெட்டவார்த்தைளும் வசைகளும் எதற்காக என்று தோன்றியது.  அதற்கான விடை எனக்கு வெண்முரசு வாசிப்பில் கிடைத்தது.  நகுஷனின் படைகளுடன் ஹுண்டனின் படைகள் சண்டையிடும் இடத்தில் ஹுண்டனின் படையில் இருக்கும் முதிய வீரர் ஒருவரும் இளைய வீரர் ஒருவரும் பேசிக்கொள்வது நினைவுக்கு வந்தது.  அப்போரில் நகுஷனின் படை வீரர்கள் அணிந்திருக்கும் கவசத்தைத் தைத்து உடலைத் தொடாமலே இருந்து விடும் ஹுண்டனின் தரப்பு அம்புகள். மேலோட்டமான வாசிப்பு கொண்ட நூறு பேர் ஆழமும் கூர்மையும் கொண்ட தீவிர வாசிப்பு கொண்ட ஐந்து பேரைக் கூட அஞ்சித்தான் ஆகவேண்டும்.  அங்குதான் வசவுகளின் தேவை வருகிறது, காழ்ப்பும் வருகிறது, ஆனால் அவையே அவர்களுக்கு வீழ்ச்சியையும் கொண்டு வருகிறது.  காலம் காலமாக இதுதான் நடக்கிறது - முதிய வீரன் சொன்னது போன்று.  "யாருடைய கருத்தையும் ஆழமாக சென்று எதிர்கொள்ளத் தேவையில்லை, கெட்டவராக சித்தரித்து திட்டிக்கொண்டிருந்தால் போதும்.  எப்படியும் அவர்கள் தான் வெல்வார்கள்.  நாம் தோற்போம்.  ஏன் ரொம்ப மெனக்கெட வேண்டும்?" என்ற தெளிவு -முதிய வீரனுடையதைப் போன்று- இவர்களுக்கும் உண்டு என்று எண்ணுகிறேன்.

எழுதழலுக்காக காத்திருந்த நேரத்தில் ஒரு எம்ஜிஆர் படத்தின் கத்திச் சண்டை பார்க்கும் மனக்கிளர்ச்சியுடன் வெறி நாய்கள் இருக்கும் இடம் சென்று அவற்றிடம் கடிபடாமல் லாவகமாக தப்பி விளையாடி வந்தேன்.  மற்றபடி அவற்றின் மீது தவறு இல்லை.  அவை அவற்றின் இடத்தில் தான் இருக்கின்றன.  இதைச் சொல்வது உங்கள் நேரத்தை வீணடிப்பது என்றால் மன்னித்து விடுங்கள்.  


அன்புடன்
விக்ரம்
கோவை

எழுதழல் - கனலில் இருந்து தழலுக்குவெண்முரசு நாவல்களின் துவக்க அத்தியாயம் பொதுவாக அந்த நாவலின் மொத்த அமைப்பையும் சுட்டி நிற்பது வழக்கம். எழுதலும் அவ்வாறே. மிகச்சரியாக கனலை தழலாக்கும் முதல் வஞ்சத்தைச் சுமப்பவளான குந்தியில் துவங்கியிருக்கிறது. அம்பையை வணங்கி நகர் நுழையும் அவள் அம்பையின் ஆற்றாது அழுத கண்ணீரைச் சுமந்து உள்நுழைகிறாள். அவள் காணும் ஒவ்வொன்றும், அந்த இயற்கை வர்ணனை உட்பட ஓர் படை நகர்வையே சுட்டி நிற்கின்றன. நாவல் ஒரு வகையில் மழைப்பாடல்  விட்ட இடத்தில் துவங்குகிறது. இந்த பாரத விளையாட்டை ஆடும் மூவர் கதையின் இரு அத்தியாயங்களிலும் வருகிறார்கள். குந்தி, சகுனி மற்றும் விதுரர். மழைப்பாடலில் சகுனி விதுரரைப் பார்த்து மனதுள் எண்ணிக் கொண்ட 'உண்மையில் ஆடப் போவது இவனிடம் தான்', என்பது தான் நினைவுக்கு வந்தது.

அன்புடன், அருணாச்சலம் மகராஜன் 

Sunday, September 10, 2017

ஓவியங்கள்வணக்கம் ஜெமோ,

நீர்கோலம் இரண்டாம் அத்தியாயம் முதல் எனக்கு வரைபடங்கள் தெரிவதில்லை. jeyamohan .in, venmurasu.in இரண்டு இணையத்தளங்களிலும் இதே நிலை. என் கணினியில் ஏதாவது அமைப்புகளை மாற்ற வேண்டுமா?

அன்புடன் 
சுவேதா 


அன்புள்ள சுவேதா

வெண்முரசுக்கு சண்முகவேல் எல்லா அத்தியாயங்களிலும் படங்கள் வரைவதில்லை. அவருடைய பணிச்சுமைகள் காரணம். படங்கள் இருந்தால் அவை தெரியும்

ஜெ

மாற்றங்கள்
அன்பு ஜெமோ

வெண்முரசு அடுத்த நாவலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

திரைப்பட மற்றும் பிற நூல்களில் உள்ள சித்தரிப்பில் இருந்து வெண்முரசு நிகழ்வுகள் பெரும்பாலும் வித்தியாசமாக இருப்பதை காண்கிறேன். (உம். விராடப்போரில் பீஷ்மர் பங்கு கொண்டதான சித்தரிப்பு). இது படைப்பாளியின் சுதந்திரம் சார்ந்ததா. எது மூலம். மாற்றுவதற்கான எல்லை எது. இது பற்றி தங்கள் கருத்து அறிய ஆவல்.

கண்ணனை ருத்ர நிலையில் கிராதத்தில் பார்த்தோம்.

அதன் பின் கண்ணன் மீண்டும் தன் இயல்பு நிலைக்கு மாறுவது குறித்த நிகழ்வோ குறிப்போ வரவில்லை.

அடுத்த பதிவுகளில் இது பற்றி எதிர் பார்க்கலாமா.

அன்புடன் 

ரமேஷ் கிருஷ்ணன்

அன்புள்ள ரமேஷ்

மகாபாரதம் பலமுறை பிற்சேர்க்கைகள் கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆகவே அதை ஒற்றைக்கதையாக ஆக்க அதன் நிகழ்வுகளை மாற்றியாகவேண்டும். மேலும் இந்நாவல்தொடர் முற்றிலும் புதிய ஒரு மையத்துடன் மறுமுறை சொல்லப்படுக்திறது அதன்பொருட்டும் மாற்றங்கள்

விராடபர்வம் அர்ஜுனன் பெருமைக்காக பின்னர் சேர்க்கப்பட்டது. பீஷ்மர் துரோணர் உட்பட அத்தனைபேரையும் அர்ஜுனன் தனியாகச்சென்று போரில் வென்றதாக அது சொல்கிறது. அப்படி எழுதினால் அடுத்துவரும் பெரும்போரில் அவர்களை அவன் சூதிலும் சூழ்ச்சியிலும் வெல்வதாக எழுதமுடியுமா?

ஜெ

Thursday, September 7, 2017

அன்னைஅன்புள்ள ஜெ

ஒவ்வொரு வெண்முரசு நாவல்இறுதியிலும் denouement என்ற ஒன்றுநிகழ்வதை மனம் எதிர்பார்க்கும்.நளனும் தமயந்தியும் உணர்ச்சிகரமாகஇணைவார்கள்அங்கிருந்தே அவன்வெற்றிகள் மீண்டும் தொடங்கும் என்றுஎதிர்பார்த்தேன்ஆனால் அந்த முதல்சந்திப்பு நேரடியாகசொல்லப்படவில்லைஅது ஆணுக்கும்பெண்ணுக்கும் என்றும் எஞ்சியுள்ள இடைவெளிஅதை சராசரிமனிதர்களால் கடக்க இயலாது என்றுதோன்றுகிறதுபிள்ளைகள் மூலம் அந்தஇடைவெளி ஒரளவு நிரப்பபடலாம்.

பீமனும் திரௌபதியும் தங்கள்பிள்ளைகளாக சம்பவனையும்சுபாஷிணியையும்விட்டுச்செல்கிறார்கள்பீமன்சம்பவனை மேலுலகுக்கு தன்னைகைதூக்கிவிட சொல்கிறான்கீழிருந்துஅனுப்பினாலும் மேலிருந்துகூப்பிட்டுக்கொண்டாலும்பிள்ளைதானே அதைச் செய்யமுடியும்?

சுபாஷிணி தன்னையேஜகன்மாதாவாக உணர்வது கவித்துவஉச்சம்.


மது