Friday, January 20, 2017

கூழாங்கல்




பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லும் கதை “ஒருவனுக்கு வந்த கடிதம் ஒன்று படிப்பதற்கு முன்பே தொலைந்துவிட்டது. அலையாய் அலைந்து கடிதத்தை  தேடிக்கண்டுப்பிடித்து படித்து முடித்ததும் கிழித்து எறிந்துவிட்டான். இதற்காகவா கடிதத்தை இத்தனை கஷ்டப்பட்டுத்தேடினான்.  கடிதத்தில் ஐந்துகிலோ இனிப்பு பூந்தி வாங்கி வாருங்கள் என்று எழுதி இருந்தது. இனி இனிப்பு பூந்திவாங்கிச்சென்றால்போதும். கடிதத்தில் உள்ள செய்தி அறிந்தபின்பு கடிதம் தேவைப்படுவதில்லை. இறைவனை அறிவதுதான் நோக்கம். இறைவனை அறிந்தபின்பு புறச்சடங்கில் பயன் இல்லை“  

கதைப்படி செய்தி அறிந்தபின்பு கடிதத்தை கிழித்துவிட்டதும் கடிதத்தின் செய்தி நமக்கு கிட்டிவிட்டதாக நினைக்கின்றோம் ஆனால் உண்மையில் காகிதத்தை மட்டும்தான் நம்மால் கிழிக்கமுடியும் கடிதம் நாமாகிவிடுகின்றது.  கடிதமும் நாமும் வேறு அல்ல என்ற உண்மை புரிகின்றது.

கைலைமலைக்கு பாசுபதம் வாங்கச்செல்லும் அர்ஜுனனுக்கு பாசுபதம் கைலையின் சிறு கூழாங்கல் என்று வழங்கப்படுகிறது. அதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் விழிக்கும் அர்ஜுனனுக்கு அன்னைக்காளி “அதுவாதல்“ என்று சொல்கிறாள். “அது“வாகும்போது இரண்டு இல்லை அதுவும் அவனும் ஒன்றே. அந்த கைலையின் கூழாங்கல்லே ஒரு கைலாயம், அந்த கைலாயமே அவன். அவன் என்றும் கூழாங்கல் என்றும் கைலாயம் என்றும் எந்த வேற்றுமையும் இல்லை. இந்த உண்மை தெரிந்தபின்பு இந்த அஸ்திரத்தை எவர் எதிரி என்று எய்யமுடியும். எனவே மகாஅஸ்திரமாகிய பாசுபதம்வாங்கும்வரைதான் ஒருவனுக்கு அவன் இவன் என்ற வேற்றுமை எல்லாம், அதை வாங்கியப்பின்பு அதை எவர்மீது எய்தாலும் தன்மீது எய்துவதாகும், தன்மீது எய்துவது என்பது இந்த பிரபஞ்சத்தின்மீது எய்துவதாகும். இந்த உண்மையை அறிந்தபின்பு பாசுபதம் என்னும் அஸ்திரமாக அர்ஜுனன் ஆகிவிடுகின்றான் அப்படி இருக்க இனி அவனுக்கு அந்த அஸ்திரம் எதற்கு?

கடிதசெய்தியை அறிந்து கடிதமாகியபின்பு கடிதம் வெறும் காகிதம் மட்டும் அதை கிழிப்பதுபோல பாசுபதம் அறிந்து பாசுபதம் ஆகியபின்பு பாசுபதமாக தெரியும் கல் எதற்கு? அதனால் அர்ஜுனன் அந்த கல்லை தூக்கி எறிகின்றான்.

இந்திரநீலத்தில் ஆழத்தில் இருந்து வந்த சியமந்தகமணியை ஆழத்தில் எரியும் காளந்தியையும். கிராதத்தில் கைலையில் இருந்துவந்த கைலைக்கல்லை கைலையிலும் எறியும்போது இருவரும் இருமையை கடந்த ஒருமையை அறிகின்றார்கள்.

சாலையோர ஜல்லிக்குவியலில் அமர்ந்த தட்டாம் பூச்சியை ,
பிடிக்கமுடியவில்லை ஆதியால்.
ஜல்லிக்கல் ஒன்றை எடுத்து, உற்றுப்பார்த்த சிறிது நேரத்தில் 
'ஹிமாலயாஸ்' என்று என்னிடம் நீட்டினான்.
நான்குவயதுக் கையில் இருக்கும் 
இமயவரம்பின் தொடர்ச்சி மீது 
எப்படி ஏறுவது என்ற மலைப்பு எனக்கு.-கல்யாண்ஜி.

கல்யாண்ஜிக்குதான் மலைப்பு அந்த நான்குவயது சிறுவனுக்கு இல்லை, காரணம் அந்த சிறுவன் ஹிமாலயாய் ஆகிவிட்டான்.