Thursday, January 12, 2017

ஒதுக்குப்புறமானவை





அன்புள்ள ஜெ

பாசுபதம் பற்றிப் பேச ஆரம்பிக்கும்போதே நீங்கள் வேதத்துக்கு முந்தைய பாசுபதம் என்று சைவ தாந்த்ரீகவிதிகளைத்தான் சொல்வீர்கள் என்று நினைத்தேன். ஏனென்றால் அதுதான் உங்கள் தாய்வீடு இல்லையா? அர்த்தமில்லாத மொழிக்கு முந்தைய சப்தங்களும் சைகைகளும்தான் தாந்த்ரீக வழிபாடு.

இன்றும் திரிச்சூர் போன்ற கேரளச் சிவன்கோயில்களில் பூசைசெய்யப்படும் மந்திரங்களை வேதமூலமான பாசுபதத்திலிருந்து வந்தவை என்று காட்டியிருக்கிறீர்கள். அதில் ஸ்ரீம் போன்ற மந்திரங்கள் சக்திக்கு உரியவை. அதாவது ஒட்டுமொத்தமாக அந்த மந்திர அமைப்புதான் பாசுபதம். அது ஓம் என்னும் மொழிச்சொல்லில் முடிகிறது. அதிலிருந்து வேதம் மறுபடி ஆரம்பிக்கிறது என்பது உங்கள் தரப்பாக இந்த நாவலில் வருகிறது.

உண்மையிலே அப்படியா என்றால் இல்லை. ஆழ்வார்கள் உட்பட மகாபக்தர்கள் எல்லாருமே தாந்த்ரீக வழிபாடுகளை நிராகரித்து எழுதியிருக்கிறார்கள். வேதமே முதன்மையானது மற்றதெல்லாம் முக்திக்கு உதவாத சடங்குகள்தான் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் அனுபவித்து அறிந்த உண்மை இது. வேதம் கொண்டுள்ள அதிகாரத்துவத்தை இந்தச்சடங்குகளும் ஒலிகளும் எந்தவகையிலும் குறைப்பதில்லை. இவை ஒதுக்குப்புறமானவையும் பயனற்றவையும் ஆகும்

அனந்தகிருஷ்ணன்