Sunday, February 12, 2017

ஒவ்வொருவருக்குமான சௌகந்திக மலர் (மாமலர் - 10)




      இசைஞானம் இல்லாத, இசையில் நாட்டமும் இல்லாத பெற்றோருக்கு பிறந்த ஒருவன் ஒரு பெரும் இசைக்கலைஞனாக பெயர் பெறுகிறான்.  படிக்காத பெற்றோரின் மகன் பெரிய அறிவியல் நிபுணனாக ஆகிறான்.   மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து  வளர்ந்த ஒருவர் நாட்டின் உயரிய பதவியை பிடிக்கிறார். எவ்வித புறத்தூண்டுதல்கள்  இல்லாமல் சீனுவாசன் இராமானுஜன் உலகின் மிகச்சிறந்த கணித அறிஞர் ஆகிறார்.  நாட்டின் ஒரு கோடியில் பிறந்து எளிய கல்வி கற்ற ஒருவர் உலகின் மிகப்பெரிய,  மிகச்சிறந்த காவியத்தை எழுதுகிறார்.   ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறு மாணவன், சில ஆண்டுகளில் பெரிய ஞானியென்று ஒளிர்கிறான்.  ஒரு சிலரால் தன் சூழல் தரும் தடைகளையெல்லாம் தாண்டி ஒன்றில் நிபுணத்துவம் ஆக முடிகிறது.  இதெல்லாம் எப்படி நடக்கிறது?  வெறும் நிகழ்தகவு  என்று சொல்லிவிட முடியுமா?    ஒருவன் தன் இலக்கு இதுவென எப்படி உறுதி செய்கிறான்?  அவன் எப்போது தன் இலக்கு நோக்கிய பயணத்தை துவக்குகிறான்?
      நம் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்று அவனுக்கு,  இது இலக்கு என்று நிர்ணயிக்கிறது. அவனை கைபிடித்து   இலக்கை நோக்கி அழைத்துச் செல்கிறது. அது எதுவாக இருக்கும் என சிந்தித்து பார்க்கிறேன்.  ஒரு பெண் அவள் பிறக்கும்போதே அவள் அன்னையாகப்போகும் குழந்தைகளின் கரு முட்டைகளை தன் உடலில் அணுக்களென கொண்டு பிறக்கிறாள் எனச் சொல்வார்கள். அதைப்போலவே ஒருவன் பிறக்கும்போதே அவனுக்கான  இலக்கு அவனுள் பதிந்திருக்கப்பட்டே  பிறக்கிறான் என்று கருதுகிறேன். அவன் உளவியல் அமைப்பு அந்த இலக்குக்கு ஏற்றவகையில் அமைந்திருக்கும்.  அந்த இலக்குக்கேற்ப அவன் உடல்,  மூளை தேவையான சிறப்புக்கூறுகளை கொண்டிருக்கும்.    அந்த இலக்கு அவன் ஆழ்மனதின் உள்ளே புதைக்கப்பட்டு எளிதாக கண்டறிய முடியாததாக இருக்கிறது.  புற நிகழ்வுகளால் சிதறுரும் மனதில் அது தெரியாது போகலாம்.  ஒருவேளை அவன் மனம் அலைவுறாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது அலைவற்ற தெளிந்திருக்கும் கிணற்று நீரின் ஆழத்தில்  மூழ்கியிருக்கும் அணிகலன் ஒன்று தெரிவதைப்போல அவன் இலக்கு   கனவில் வெளிப்படலாம்.  உள்ளம் ஒருங்கியிருக்கும் அந்நிலையில்   அந்த இலக்கு  ஒரு சௌகந்திக  மலரென மலர்ந்து அவன் கனவில் மணம் வீசுகிறது.   அதை தன் கூருணர்வால் அறிபவன் அம்மலரைமட்டுமே  தேடியடைய முற்படுகிறான். ஆழ்மனதிலிருந்து கனவென வெளிப்பட்ட வாசத்தை நினைவில் இருத்தி அதை தேடிச்செல்பவன், இடையறாது முயல்பவன்,  அதை ஒற்றை நோக்கென கொண்டு இருப்பவன்,  சிகரம் தொடுகிறான், வாழ்வில்  பெருவெற்றி அடைகிறான்.  தனக்கான மலரைத்தேடி  செல்பவர்கள் மட்டுமே அதை அடைகிறார்கள். தன் மலர் எதுவென அறிந்துகொள்ளாமல் வேறு ஏதோ ஒன்றை தேடிச்செல்பவர்கள், தன் முயற்சியில் பெரிய வெற்றிபெறாமல், ஒரு சாதாரண வாழ்வை வாழ்ந்து முடிக்கிறார்கள்.  இப்படியான ஒரு கருதுகோள் எனக்கு உண்டு.   இது எந்தளவுக்கு சரியென்று எனக்கு தெரியவில்லை.  பலர் ஒரே முறையில் கற்று ஒரே அளவுக்கு முயற்சி செய்தாலும்   ஒரு சிலர் மட்டும் ஒரு துறையில்  உச்சம் அடைவதை எப்படி பொருள் கொள்வது?    இப்படி இல்லாமல் வேறு எவ்விதத்தில் குழந்தை மேதைகளின் இருப்புக்கு  தர்க்க ரீதியான காரணத்தை அளிக்கமுடியும்? 

     திரௌபதியின் சௌகந்திக மலர், பாரத நாட்டின் பேரரசி என இருப்பது. அம்மலர்  தருமனுக்கு அறம்தவறாது வாழ்ந்து காட்டுதல், அர்ச்சுனனுக்கு வில்லாற்றல் எனச் சொல்லலாம். ஆனால் பீமனுக்கு வாழ்வின் இலக்கு என்பதென்ன? அன்றன்றைய வாழ்வில் நிறைவுற்றிருக்கும் பீமனை  சௌகந்திக மலரைத் தேடிச்செல்லச் சொல்வாளா திரௌபதி?  அப்போது தனக்கான சௌகந்திக மலரை அறிந்து அடைவானோ பீமன்?
தண்டபாணி துரைவேல்