Friday, February 24, 2017

மாமலர் – ஊர்வசியின் ஆடுகள்



தான் அறிந்தவற்றையும், அறிந்தவற்றின் ஊடாகத் தன்னுள் நுழைந்தவற்றையும் இரு ஆடுகளாகத் தன்னுடன் அழைத்து வருகிறாள் ஊர்வசி. இரு ஆடுகளுக்கும் ஸ்ருதன், ஸ்மிருதன் என பெயர். மேலும் ஸ்ருதன் வெண்ணிற ஆடாகவும், ஸ்மிருதன் கரு நிற ஆடாகவும் இருக்கிறது. சுரேஷ் பிரதிப் கூறியது போல இவ்விரு ஆடுகளையும் சுருதி, ஸ்மிருதி என்பனவற்றின் உருவகங்களாகப் பார்க்கலாம். மற்றொரு வகையில் இவ்விரு ஆடுகளையும் சகதேவன் மற்றும் நகுலனாகப் பார்க்கலாம். இக்கதைகளை வாசிக்கையில் நாம் ஒன்று நினைவு கொள்ள வேண்டும். இக்கதைகளில் பீமனின் உள்ளம் ஒரு முக்கியமான பாத்திரம். எனவே அவன் பார்வையில் இந்த கதாபாத்திரங்களை யாராகக் காண்கிறான் என்பதும் முக்கியம். ஊர்வசியில் அவன் தேடுவது திரௌபதியையே. இவ்வாறு பார்க்கையில் அவ்விரு ஆடுகளும் முக்கியமானவை ஆகின்றன.

திரௌபதி தன் ஐந்து கணவர்களுடனும் கொண்டிருக்கும் உறவு எத்தகையது என்பதை வெண்முகில் நகரத்தில் மிக விரிவாக தந்துள்ளார் ஜெ. தருமனுடனான அவள் உறவு அறிவு சார்ந்தது. அவளது அறிவுத் துணைவனாக அமைகிறார் தருமர். அவளது காதல் மற்றும் காமத்துணைவனாக அமைகிறான் அர்ச்சுனன். முதலில் ஒரு வித மீறல் சார்ந்த உறவாகவே அவர்கள் உறவு துவங்கியதையும், மெல்ல மெல்ல அது மாறி வருவதையும் பற்றிய சித்திரங்கள் காண்டீபத்திலும், தற்போது அவளின் கூற்றாகவே மாமலரிலும் வந்து விட்டன. அவளின் மனதுக்கிணைந்த தோழனாக வாய்ப்பது நகுலன். வெண்முகில் நகரில் ஒரு வித விளையாட்டு கலந்ததாக, தோழமையின் வெளிப்பாடாக அமைந்திருக்கும் அவர்களது முதல் உறவு. அவள் உள்ளத்தில் புகுந்து புறப்பட இயன்றவன் நகுலனே. மாமலரில் அர்ச்சுனன் வந்தவுடன் அவன் கையைப் பற்றிக் கொள்வதைப் பற்றிய ஒரு சிறு உரையாடல் நகுலனுக்கும், திரௌபதிக்கும் நிகழும். மேலும் சைந்தவனால் தேரிலிருந்து தள்ளி விடப்பட்டவளை அணைத்துச் செல்வதும் அவன் தான். சகதேவனிடம் ஓர் அன்னை போல அவள் இருக்கிறாள். அவனிடம் தன் நோவுகளைப் பகிர்ந்து கொள்ள அவளால் இயல்கிறது. ஒரு இளமைந்தனுடன் அன்னை சமையலில் ஈடுபட்டிருக்கும் தோற்றமே அவள் அடுமனையில் சகதேவனின் உதவியோடு சமைக்கும் காட்சி எனக்குப் பட்டது. சைந்தவனால் கவரப்பட்டதன் இழிவை, அது அவளுக்குத் தந்த வலியை அவள் சகதேவனிடமே பகிர்கிறாள். மிகச் சரியாக ‘ஒன்றுமில்லை அன்னையே’ எனத் தான் அவனும் அவளைத் தேற்றுகிறான்.

அப்படியென்றால் பீமனுடனான அவள் உறவு? அது ஒரு அணுக்கச் சேவகனிடம் கொள்ளும் உறவு. திருதாவுக்கு ஒரு விப்ரர் போல, விசித்திர வீரியனுக்கு ஒரு ஸ்தானிகர் போல, சத்யவதிக்கு ஒரு சியாமை போல. முதன் முதலில் திரௌபதியைச் சந்திக்கும் பீமன் அவள் இருக்கும் தேரை இழுத்துச் செல்கிறான், பிராயாகையில். அவர்களின் முதலிரவில் அவன் அவளுக்கு நீச்சல் கற்றுத் தருகிறான், வெண்முகில் நகரத்தில். (அதில் வரும் நீரூசி என்ற உவமை என்னை பித்துக் கொள்ள வைப்பது...) இப்போதும் அவள் உறவின் பாதை இது தான்.

இப்படி இருக்கையில் அவன் ஏன் அந்த மணத்தைத் தரும் மாமலரை நோக்கிய பயணத்தைச் செய்ய வேண்டும்? அவனுக்கு அறிதல் என்பதன் எந்த தேவையும் இருந்ததில்லை. பிற இருவரின் எந்த தேடலும் அவனுக்கு இல்லை. இருப்பினும் அவன் கிளம்புகிறான். ஏன்? ஏனென்றால் அணுக்கர்கள் தங்கள் அணுக்கத்தின் காரணமாகவே எஜமானர்களைப் போல ஆவது வெண்முரசு முழுவதும் காணக் கிடைப்பது. இங்கே சேவகன் அன்னையாகவே ஆகும் ஒரு பயணமே இது. பிற இருவரும் பல அலைகழிப்புகளுக்குப் பிறகு இறந்து பிறக்கிறார்கள். மாறாக இவன் பயணத்தின் துவக்கத்திலேயே நீர் விட்டு மூதன்னையர் முன் இறந்து பிறக்கிறான். பிற இருவரும் தத்தமது பயணங்களின் விளைவுகளில் ஒன்றாக அவற்றின் இறுதியில் அடைந்த வஞ்சத்தை விடும் மனப்பக்குவத்தை முதலியேயே அடைந்தும் விடுகிறான். இதன் பிறகே அவன் கதைகளைக் கேட்கிறான். அவன் அறிவது அன்னையரையே. அவர்களின் கனிவும், அக்கனிவுக்கு பகைப்புலத்தில் இருக்கும் வஞ்சத்தையும் அறிகிறான். அறிந்து ஆகும் ஒரு தருணத்தில் அந்த மாமலரையும், அதன் மணத்தையும் ஒருங்கே அடைவான்.

இந்த புரிதலில் வைத்து நோக்குகையில் பீமனின் ஊர்வசி இரு ஆடுகளுடன் மட்டுமே இருப்பது தனித்த பொருள் கொள்ள வைப்பது. அதாவது அவனும், அவளுமான உறவுலகில் இந்த இருவர் மட்டுமே வருகின்றனர். அவனுக்கு சகாதேவனுடனும், நகுலடனும் அவளது உறவு ஒரு சிறு புருவ நெரிப்பை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய உறவு தான். இருப்பினும் அவன் யார் என்பதற்கான நினைவூட்டலும் கூட. மற்ற இருவரும் அவன் உலகிலேயே இல்லை. 

அருணாச்சலம் மகராஜன்