Thursday, April 27, 2017

மௌன வாசகர்கள்



இனிய ஜெயம்,

ஒரு முறை  நமது விஷ்ணுபுரம் விருது விழாவில் சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களை அறிமுகம் செய்து கொண்டு  அவரது கதைகள் குறித்து பேசினேன். [ சுரேஷ்குமார இந்திரஜித்  உயிர்மையில் தொடர்ந்து கதைகள் எழுத துவங்கி இருக்கிறார் . ]

அவர் ''நீங்க ஏன் வந்து சந்திக்கல?''

நான் '' தெரியல. இப்படி சொல்லலாம்  ஒவ்வொரு எழுத்தாளருக்கும் நூறு வாசகர் உண்டு என்றால். எழுத்து உரையாடல் சந்திப்பு வழியே அந்த எழுத்தாளரை ஒரு எழுபது பேர் தொடர்பு கொள்வர். மீதம் முப்பது பேர் நிலை? அவர்களும் அந்த எழுத்தாளரின் வாசகர்கள்தான் , எழுத்தாளர் ஒருபோதும் அறிய வராத அவர்களை 'மௌன வாசகர்கள் ' என்று சொல்லலாம். நான் உங்களின் 'மௌன வாசகர்களில் 'ஒருவன்.

இந்திரஜித் மெல்ல சொல்லிப் பாத்தார் ''மௌன வாசகர்கள் '' முகம் மலர்ந்து புன்னகைத்து என் தோளை தட்டினார். 

இப்படி  உங்கள் வாசகனாக ஒரு போதும் உங்கள் அறிதல் வட்டத்துக்கு வராத, இனியும் வரவே போகாத ஒரு பத்து பேரையாவது நான் அறிவேன்.  நெல்லை துணிக்கடையில் இருந்து ஒரு வாசகர்.  இணையம் வழி அல்லாமல், வெண் முரசு வரிசையை நூல்கள் வழி வாசிப்பவர்.  வெய்யோன் முடிந்ததும் இணையத்தில் தொலைபேசி எண் கண்டடைந்து பேசினார். 

நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்  .'' சே எப்படி ஆயிட்டு பாத்தீளா ..  கத முடிஞ்சிட்டு.. புஸ்தவத்த வெக்க ஏலாம .. கைல கொண்டிட்டே லாந்திக்கிட்டு இருக்கேன்..பாத்துக்கிடுங்க '' 

நான் ஜெயமோகன் எண் தருகிறேன் அவருகிட்ட பேசுங்க என்றேன்.  அவர் மறுத்து விட்டார்  அவர்க்கு அங்கே இது குறித்து பேச யாரும் இல்லை. தேடி இந்த எண்ணை அடைந்து பேசினார். அது போதும் என்றுவிட்டார். சார்கிட்ட என்னத்த பேச ஒண்ணுமே புரியாதே..இத ஒத்த ஒரு மனுஷன் எழுதிக்கிட்டு இருக்கான் அப்டிங்கறதே நம்ப முடியல இன்னும் எனக்கு, நான் அவர்கிட்ட என்னத்த பேச   அவரது எண் மட்டும் இருக்கிறது என்றேனும் அழைப்பார் என காத்திருக்கிறேன். 

உங்கள் பிறந்த நாள் அன்று திருப்பூரில் எளிய பணியில் இருக்கும் , பள்ளி வாசிப்பு சூழல், இலக்கிய வாசிப்பு சூழல் அருகிய சூழலால் தயக்கமாக உரையாடும் உங்களின் வாசகர் சுந்தரவடிவேலன் பேசினார். 

தயங்கி தயங்கி பேசினார். மொபைல் வழியே உங்கள் பிளாக் மட்டும் பல வருட பழக்கம் அவருக்கு.  ஆ மாதவன் விழாவுக்கு வந்து கூட்டத்தில் ஒருவராக நின்று உங்களை வேடிக்கை பார்த்துவிட்டு சென்றிருக்கிறார்.  இலக்கியம் சார்ந்து எந்த அறிமுகமும் இன்றி  சுப்ரபாரதி மணியன் பேச்சு வழியே உங்கள் தளம் வந்தவர்.   இதன் பல தீவிர தளங்கள் புரியா விட்டாலும் அதிலேயே அதற்க்கு இருக்கும் உரையாடல்களை தேடி வாசிக்கிறார்.  பெரிய ஒன்றின் முன் நிற்கும் பணிவும். தான் ஒரு நுட்பமான வாசகன் அல்ல என்ற துணுக்குறலும் கொண்ட தயங்கிய பேச்சு. 

நான் கடலூர் சீனு என்றறிந்ததும் அடுத்த வினாடியே கட்டுக்கள் தளர்ந்து ஆசுவாசம் ஆனார். உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப தெரியும் மாதிரி ஒரு உணர்வு என்றார்.  தயங்கி தயங்கி விஷயத்துக்கு வந்தார். அவரிடம் பழைய மாடல் நோக்கியா கவர் பிரிக்காமல் புத்தம் புதிதாக இருக்கிறது  அதை உங்களுக்கு பரிசளிக்க விரும்பி இருக்கிறார். ''அவருக்கு ஏதாவது தரணும்னு ஆசையா இருக்கு .இதை அனுப்பின்னா சார் ஏதும் தப்பா எடுத்துக்குவாங்களா '' என வினவினார். 

எனக்கு சட்டென கண் கலங்கி விட்டது. வள்ளுவர் குறளை சொன்னேன். விஷமே ஆகிலும் உபசரிப்பை புறக்கணிக்காத மேன்மை குறித்து சொன்னேன். ஜெயமமும் அப்படிப் பட்டவர்தான். நம்பர் தரேன் அவர் கிட்ட பேசுங்க ,உங்க பரிசு என்ன உங்க குரலை கேட்டா போதும் அவர் ரொம்ப சந்தோஷப் படுவார் என்றேன். 

சுந்தர வடிவேலனும் உங்களது பல மௌன வாசகர் போல தயங்கி  மறுத்து விட்டார். பரிசை அனுப்ப உங்கள் முகவரி மட்டும் கேட்டார் தந்தேன். அதில் உங்கள் கைப்பட ஒரு கடிதம் எழுதி ஜெயம்முக்கு அனுப்புங்க என்றேன். அய்யய்யோ அவருக்கு எழுத எங்கிட்ட என்னங்க இருக்கு என்றுவிட்டார். 

பரிசு வரும். வந்தால் அந்த பரிசின் வழியே முதலில் அந்த வாசகரை அழைத்து பேசுங்கள்.  தயங்கி தயங்கி இறுதியாக அவர் அந்த பரிசை உங்களுக்கு அனுப்பா விட்டால்...

சுந்தரவடிவேலன்  என்றொரு மௌன வாசகர் உங்களுக்கு இருக்கிறார் என்பதை இந்த மடலின் வழி அறிந்து கொள்ளுங்கள். 

கடலூர் சீனு