Thursday, May 11, 2017

முதல்மழை



அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்... நலம் தானே..

முதல்மழையின் தருணத்தில்
நாகர்கோயிலில் இருக்க நேர்ந்தது.

உறவினர் திருமணத்திற்கு குழித்துறை திருத்துவபுரத்திற்கு
வந்திருந்தேன் சென்னையிலிருந்து.

போகமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்தவன் முகவரியைப் பார்த்தவுடன் முன்பதிவு செய்து கொண்டேன். ஆசிரியரின் 
வசிப்பிடம் அருகில் அல்லவா ..!! ஏதாவது டீக்கடையில் உங்களை 
பார்த்துவிடலாம் என்ற எண்ணம் தான்.

நேரில் சந்திக்க தயக்கம் இருந்துகொண்டே இருக்கிறது..இன்னும் கொஞ்சம் வாசிப்பறிவை வளர்த்துக்கொள்வோம் என்று தள்ளிப்போட்டு வருகிறேன்.

வெண்முரசு சென்னை வளசரவாக்கம் சந்திப்பிற்கு தெருமுனை வரை வந்துவிட்டு திரும்பியது நினைவுக்கு வந்தது..!! நீங்கள் தளத்தில் பலமுறை இந்த தயக்கத்தை உடைக்க சொல்லியிருந்தாலும் ஏனோ ஒரு உதறல்..!!

திடீரென "வெய்யோனில்  நாகவேதம் என்ன சொல்கிறது என்றால்" யாரவது கேட்டு விட்டால் என்ன செய்வது என்பது போன்ற  தயக்கங்களை களைய முடியவில்லை..ஒருவேளை மேலும் மேலும் வாசிப்பை அறிய வேண்டுமோ..

"காட்டாளனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த போரும், அதில் நுண்ணிதின் வடிவாக நிகழ்வுகளை   நொடிக்கு நொடி வர்ணித்திருந்த விதம் கண்ணீரை வரவழைத்துக்கொண்டே இருந்தது"

"வெய்யோனில், கர்ணன் இளைய கௌரவர்களை சந்திக்கும் இடம்,
பெரீந்தையே பெரீந்தையே என்று தவழ்ந்தேறி அலையும் குழந்தைகளில் நானும் ஒருவனாகவே மாறியிருந்தேன்"

"இரக்தபீஜனையும், துரியோதனன் ஜராசந்தனுக்குமான கப்பலில் 
நடக்கும் மற்போரில், கர்ணன் எளிதாக இருவரையும் தூக்கி எறிந்த நிகழ்வும், வர்ணித்த முறையும் இனி ஒரு காலத்திலும் இதை மீறி யாரும் எழுதப்போவதில்லை" 

"நீலத்தில், முதலில் SYNC ஆக முடியவில்லை. பின்னர் மீண்டும் மீண்டும் வாசிக்க, பித்தனானேன்; எண்ணங்களின் அலைகளுக்குள், புயற்காற்றில் சிக்கிய இறகாய் இழுத்துச் சென்றது நீலம் எனை"

கல்யாண வீடு முடிந்ததும் பெரு மழை பாய்ந்திறங்க தொடங்கியது 12:30 மணிக்கெல்லாம்..!! சென்னை வெயிலில் செத்துக்கொண்டிருந்த எனக்கெல்லாம் சத்தியமாக சொர்க்கமே..!!
மழைத்திரை என்றால் என்ன என்று புரிந்தது...எதிர் நிற்பவரை காணக்கூட முடியவில்லை..!!

இறச்சகுளம் வழியாக பாதை திருப்பிவிடப்பட்டது; எங்கெங்கிலும் பசுமை ... மழைமேகம் இவ்வளவு தாழ இறங்கி பார்த்ததே இல்லை 
சமநிலத்தில்..!! வாகனத்தை விட்டிறங்கி நடந்த வண்ணம் இருந்தேன்..!! சென்னை செல்ல வேண்டிய பேருந்தை தவறவிட்டு 
சங்கரன்கோயிலில் விரட்டிப்பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன்..!!

சத்தியமாக ஆசீர்வதிக்கப்பட்ட இடமே அது..!!

எங்களைப்போன்றவர்களால் கீழே எழுதியது  போல் ஆசைமட்டுமே படமுடியும்..!!

பேய்மழையொன்று 
இங்கு பாய்ந்திறங்க ஆசை..

பெருவெள்ளமாகி 
ஏரி குளம் நீர் நிறைக்க ஆசை ..

துள்ளி வரும் வெள்ளித் துமிதனை 
அள்ளி அள்ளி பூசிக்கொள்ள ஆசை ..

கால் நழுவும் மண் பெருக்கினை 
அளைந்து அளைந்து 
ஓய்ந்து கொள்ள ஆசை ..

காட்டுமரம் வீட்டுமரம் அனைத்தும் 
புத்தாடை புனைதல் காண ஆசை ..

புல்வெளி ஒன்று சட்டென்று 
விரிந்து, படுத்துக்கொள்ள ஆசை ..

புள்ளினம் தத்தம் இணையுடன்
இளைப்பாறல் காண ஆசை...

மண்புழுக்கள் தம் குழவியுடல் கொண்டு
ஊர்ந்தெங்கோ செல்லும்
வழித்தடம் காண ஆசை..

வெயில் எரித்த பாறைகள் 
நனைந்த கரியுடல்
போர்த்த ஆசை...

தனித்தலையும் மேகங்கள்
இருளென சூல்
கொண்டிட ஆசை...

விண்முட்டும் கோபுரக்கலசங்கள்
சடுதியில் ஈரம்பட்டு 
குளிர்ந்திட ஆசை...

பாங்கு அறிவிக்கும் மசூதிக்
கூம்புகள்
 நீர்வழிந்து நின்றிடல் ஆசை...

தியாகச்சிலுவையுடன்
தேவாலய மணியோசை,
மழைத்துளி தம்முடன்
மண்ணிலிறங்க ஆசை..!!

----- ஏக்கத்துடன் 
இ. பிரதீப் ராஜ்குமார்