Sunday, May 14, 2017

ஒட்டுமொத்தச் சித்திரம்







அன்புள்ள ஜெ

மாமலரை முழுமையாக ஆறுநாட்களில் வாசித்து முடித்தேன். தொடர்ச்சியாக நாள்தோறும் வாசிப்பதற்கும் இதற்கும் இடையே நிறைய வேறுபாடுள்ளது. அன்றாடம் வாசிக்கையில் என்ன நேர்கிறதென்றால் அடுத்தது என்ன என்ற கேள்வியால் நாம் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். கடந்தகாலக்கதைகள் ரொம்ப பின்னால் மறைந்துவிடுகின்றன. ஆகவே பல நுணுக்கமான விஷயங்கள் கிடைத்தாலும் ஒட்டுமொத்தச்சித்திரம் நழுவிவிடுகிறது. 

நானும் என் அலுவலகத்தோழரும் சேர்ந்து வெண்முரசை நான்கு வருடங்களாக வாசிக்கிறோம். நாளும் மதியம் பேசிக்கொள்வோம். அவருக்கு மாமலரின் ஒட்டுமொத்தச் சித்திரம் மனதிலே இல்லை என்பதைக் கவனித்தேன். ஆச்சரியமாக இருந்தது. மாமலரின் கதையை நான் அவருக்கு ஒரே கதையாகச் சொன்னேன். சந்திரன் முதல் புரு வரையிலான கதையில் ஏழாவது தலைமுறை புரு. அந்தத்தலைமுறையில்தான் அவர்களுக்குக் காமத்திலிருந்து மீட்பு கிடைக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அந்தக்காமத்தினால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். காமத்தை விட்டு விலக முயன்ற ஆயுஷ்கூட அப்படித்தான். 

அந்த சித்திரம் ஆழமானதாக இருந்தது. அதொ ஒரேதேடல். ஒரு மனிதனே மறுபடி மறுபடி பிறந்து தேடுவதுபோல. அதைப்புரிந்துகொள்ள கொஞ்சம் நினைவாற்றல்தேவை. அந்தப்பார்வையே அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. கிராதம், சொல்வளர்காடு இரண்டுமே நுட்பமான நாவல்கள். அவற்றைத் தொகுத்துக்கொள்ளவும் இதேபோல ஓர் ஒட்டுமொத்தமான வாசிப்பு தேவை என நினைக்கிறேன்

சந்திரகுமார்