Thursday, June 22, 2017

தேவபாலபுரம்

 
 
மதிப்பிற்குரிய அய்யா,

தங்கள் தெளிவான பதிலுக்கு நன்றி.

மன்னிக்கவும்  அது தேவபாலபுரம்தான், நினைவிலிருந்து தேவதானபுரம் என்று தட்டச்சு செய்துவிட்டேன். 

தேவால தீவு என்று மீண்டும் தேடிப்பார்த்தேன். தேபால் (debal) என்ற பெயரில் இன்றைய கராச்சி நகர் அருகே இருக்கும் மனோரா தீவு அருகே இருப்பதாக அறியமுடிந்தது. சில எட்டாம் நூற்றாண்டு  அரேபிய குறிப்புகளில் தேபால் ஒரு பழந்துறைமுகமாக சூட்டப்பட்டுள்ளது என்று அறிந்தேன். அதைத்தான் குறிப்பிட்டுள்ளீர்கள்  என்று எண்ணுகிறேன். வரைபடத்தில் (map ) பார்த்தபோது பாகிஸ்தான் சென்று பார்க்க வேண்டும்  ஏக்கமாக இருந்தது. இன்னும் சில ஆண்டுகளுக்குப்பின்னாவது  இந்தியாவுக்குப் பாகிஸ்தானோடு நல்லுறவு ஏற்படவேண்டும் என்று தவிப்பு ஏற்ப்படுகிறது. தெரியாத இடங்களுக்கு கைபிடித்த்து அழைத்துச்செல்லும் உங்களுக்கும் வெண்முரசுக்கும் கோடானுகோடி நன்றி.

தெரிந்த இடம் என நினைத்த மதுரையைப்பற்றியே பல தெரியாத விஷயங்கள் உள்ளதை எண்ணி வியக்கிறேன். பழைய மதுரை, பஃருணி ஆறு, குமரி ஆறு பற்றியெல்லாம் லெமுரியா கண்டக் கருத்துக்கோளோடு இணைத்தே புரிந்து வைத்திருந்தேன். லெமுரியா பொய் என்றால், தொல் மதுரையும் பொய் என்ற எளிமையான வாய்ப்பாடு எப்படியோ எனக்குள் ஒரு நம்பிக்கையாக ஆகியிருந்திருக்கிறது. அது தவறு என்று இப்போது புரிகிறது. லெமுரியா வேறு - அது புதிய (19th century) ஊகம், அது தவறான theory. ஆனால் கடலில் மூழ்கிய மதுரை நகர் (இந்தியாவை ஒட்டியே  - குமரிக்கண்டத்தில் அல்ல) எனும் தொன்மம் நம் இலக்கியங்களில் உள்ளது , அது உண்மையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. சரிதானே?


தொல்மதுரை, கடலில் மூழ்கியது என்று நீங்கள் சுருக்கமாக எழுதிய பதிலைப் பார்த்ததும் உடனடியாக உங்களோடு வாதம் செய்யலாம் என்று குமரிக்கண்டம் பற்றி கேள்வி கேட்க எண்ணினேன். இதற்குத்தான் என் சிறு அகந்தை காத்திருந்தது போலும். அடுத்தவர் மீது  தவறு  கண்டுபிடிப்பதில் அப்படி ஒரு சுகம் உள்ளது (நக்கீரர் மீதே என்றாலும் கூட). 

நிற்க.

ஆனால் யாரோடு யார் வாதம் செய்வது என்ற அச்சத்தால் சுயநலமாக தேடியபோது தேடியபோது இந்த சுட்டி உங்கள் தளத்திலேயே கிடைத்தது.



என் எண்ணத்தை இந்தப் பதிவில் மாற்றிவிட்டீர்கள். உங்களை நினைத்து ஒருபுறம் வியப்பாகவும், ஒருபுறம் கொஞ்சம் பாவமாகவும் இருக்கிறது. வெண்முரசின் நீளத்தைக்காட்டிலும், அதை பற்றி வாசகர்கள் நாங்கள் செய்யும் வாதங்களுக்கு நீங்கள் அளித்து வரும் பதில்களின் நீளம் மிக அதிகமாகவே இருக்கும். சலிப்பில்லாமல் பொறுத்துக்கொள்கிறீர்கள். உண்மையிலேயே எப்படி உங்களால் முடிகிறது என்று வியப்படைகிறேன்.